’மீனாப்பொண்ணு... மீனாப்பொண்ணு!’ - நடிப்பில் தனித்துவம் காட்டிய மீனா பிறந்தநாள் ஸ்பெஷல்

By வி. ராம்ஜி

நடிகர் விஜயகுமார் தயாரித்து, மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில், சிவாஜியின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘நெஞ்சங்கள்’. 82ம் ஆண்டு வெளியானது இந்தப் படம். சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்கள். நடிகை லட்சுமி நடித்திருந்தார். அப்போது, இந்தப் படத்தை பெரிதாக எவரும் கவனிக்கவில்லை. ஆகவே படத்தில் நடித்த சிறுமியையும் எவரும் பொருட்படுத்தவில்லை. பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து, 84ம் வருடத்தில், கே.நட்ராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில், அதேசமயம் படத்தின் தலைப்பிலேயே ரஜினிகாந்த் பெயரும் இடம்பெற்று அவரை கெளரவப்படுத்திய திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, எல்லோரும் முதலில் கொண்டாடியது அந்தச் சிறுமியைத்தான். வசனம் பாதி பேச, மீதியைக் கண்களே பேசிவிட... அந்தச் சிறுமி வளர்ந்து நடிகையாவார் என்றோ, ரஜினிக்கே ஜோடியாக நடிப்பார் என்றோ எவரும் நினைக்கவில்லை. அவ்வளவு ஏன்... அந்தச் சிறுமியும் நினைக்கவில்லை. ரஜினியே கூட நினைத்திருக்கமாட்டார். இன்றைக்கு நடிக்காவிட்டாலும் கூட நாமெல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கக் கூடிய அளவுக்கு தடம் பதித்த அந்த நடிகை... மீனா!

76ம் ஆண்டு பிறந்த மீனா, ஆறாவது வயதில் 82ம் ஆண்டு ‘நெஞ்சங்கள்’ படத்தில் சிவாஜியுடன் சேர்ந்து நடித்து அறிமுகமானார். 84ம் ஆண்டு, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில், ரஜினியுடன் நடித்தார். இந்தப் படத்தில், மாற்றுத்திறனாளியாகவும் நடித்து அசத்தினார்.

பிறகு சிறிய இடைவெளி. எண்பதுகளும் முடிந்து தொந்நூறுகளின் தொடக்கம். 91ம் ஆண்டு, வெளியான அந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தின் இயக்குநருக்கு அதுவே முதல் படம். இளையராஜாவின் இசையில் உருவான அந்தப் படம், வெள்ளிவிழா நாட்களையெல்லாம் கடந்து ஓடியது. அந்த நடிகர் பெரிதும் பேசப்பட்டார். அவர்... ராஜ்கிரண். இயக்குநர் கொண்டாடப்பட்டார். அவர்... கஸ்தூரி ராஜா. இவர்களையெல்லாம் கடந்து அந்த நடிகை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அவர்தான் மீனா. அந்தப் படம்... ‘என் ராசாவின் மனசிலே’.

76ம் ஆண்டு பிறந்த மீனா, 91ம் ஆண்டு நாயகியானார். அதன் பிறகு, படங்களையும் தன் கேரக்டர்களையும் தேர்வு செய்ததுதான் மீனாவின் முதல் வெற்றி.
ஏவிஎம் தயாரிக்க, ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க ‘எஜமான்’ வெளியானது. கேரக்டரை உள்வாங்கி வெகு அழகாகவும் யதார்த்தமாகவும் நடிக்கக்கூடியவர் என்று பேரெடுத்தார். ரஜினியுடன் ‘முத்து’, ‘வீரா’ என்று நடித்தார். இதில், ‘முத்து’ படத்தில் இவரின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.

ரஜினியுடன் நடித்திருந்தாலும் பி அண்ட் சி ஏரியாக்களுக்கு, அந்த மக்களுக்குப் பிடித்த நாயகியாக மீனாவை நெருக்கமாக்கியது... ‘நாட்டாமை’. ’முத்து’வுக்கு முன்னதாக வந்த ‘நாட்டாமை’யின் ஆல் செண்டர் நாயகியானார். போதாக்குறைக்கு, ‘மீனாப்பொண்ணு மீனாப்பொண்ணு’ என்ற பாடல், இன்னும் உயர்த்தியது.

சரத்குமாருடன் ‘ரிஷி’ முதலான படங்களில் நடித்தார். கார்த்திக்குடன் இவர் நடித்த ‘அரிச்சந்திரா’, ‘ஆனந்தப் பூங்காற்றே’ முதலான படங்களிலெல்லாம் புடவை கட்டிக் கொண்டு, அமைதியாகவும் ஒரு பக்க அளவிலான வசனங்களை மட்டும் பேசி நடித்தார். மீதமுள்ள வசனங்களையெல்லாம் மீனாவின் கண்களே பேசின.

அதேசமயம், விஜய்யுடன் ‘சரக்கு வைச்சிருக்கேன் இறக்கி வைச்சிருக்கேன்’ என்று ஒரேயொரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டு, ஹிட்டடித்தார்.
கமலுடன் ‘அவ்வை சண்முகி’யில் நடித்து, நடிப்பிலும் ஸ்கோர் அள்ளினார். காதலித்த கணவனை, குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு விவாகரத்து வாங்கிவிட்டு, அப்பாபெண்ணாக, பணக்காரத் தனத்துடன் வலம் வரும் கேரக்டரை அட்டகாசமாகச் செய்திருந்தார்.

சத்யராஜ், விஜயகாந்த் என்று நடித்தார். ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’யில் பாக்யராஜ் இயக்கத்தில் நடித்தார். அஜித்துடன் ‘ஆனந்தப் பூங்காற்றே’ வில் மெச்சூர்டான கேரக்டர் செய்திருந்தார். ‘வில்லன்’ படத்தில் மாடர்ன் டிரஸ்ஸுடன் வலம் வந்தும் அசத்தினார். அதேசமயம், ‘சிட்டிசன்’ படத்தின் ப்ளாஷ்பேக் காட்சியில் அஜித்தின் மனைவியாக, மீனவப் பெண்ணாக நடிப்பில் புது பரிமாணம் காட்டினார் மீனா.

இயக்குநர் சேரனின் மூன்று படங்கள்... மீனாவின் நடிப்புக்கு முத்தான படங்களாக அமைந்தன. சேரனின் முதல் படமான ‘பாரதி கண்ணம்மா’வில் பார்த்திபனுடன் ‘கண்ணம்மா’வாக நடித்து பிரமிக்க வைத்தார். பார்த்திபனைக் காதலித்து உருகும் கதாபாத்திரம். இருவருக்கும் நடக்கும் மனப்போராட்டத்தை அழகாகவும் ஆதங்கம் நிறைந்தும் வெளிப்படுத்தினார்.

‘பாரதி கண்ணம்மா’வில் பார்த்திபன். சேரனின் இரண்டாவது படமான ‘பொற்காலம்’ படத்தில் முரளி. இதிலும் மீனாவின் கதாபாத்திரம் கவிதை மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. முரளியை உருகி உருகி காதலிப்பார். ஆனாலும் அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் வித்தியாசங்களைக் காட்டியிருப்பார் தன் நடிப்பில்!
பின்னர் இடைவெளிவிட்டு, சேரனின் இயக்கத்தில் பார்த்திபனும் முரளியும் இணைந்து நடித்த ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்திலும் அழகான கதாபாத்திரம்.உணர்ந்து நடித்து சிலிர்க்கச் செய்திருந்தார்.

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ படத்தில், காமெடி, கலாட்டா, கிளாமர் என புது ரூட்டில் நடித்து வியக்கவும் மலைக்கவும் வைத்தார்.

தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார் மீனா. எல்லா நடிகர்களுடனும் வலம் வந்தார். அன்றைக்கு டாப் இயக்குநர்கள் எல்லோரின் படங்களிலும் நடித்தார். மீனாவின் மார்க்கெட் குறையவே இல்லை. தனக்கென ஒரு கதை, நல்ல கேரக்டர் என்று தேர்வு செய்து நடித்தார்.

அப்படித்தான் அமைந்தது ‘ரிதம்’. இயக்குநர் வஸந்தின் இயக்கத்தில், அர்ஜூன், ரமேஷ் அரவிந்த், ஜோதிகா நடிப்பில் உருவான ‘ரிதம்’ படத்தில் காட்சிக்கு காட்சி, தன் நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் சிக்ஸர் சிக்ஸராக அடித்து விளாசிக் கொண்டே இருப்பார். ஓரிடத்தில், ரமேஷ் அரவிந்துடன் பேசிக் கொண்டிருக்கும் காட்சியில், ரமேஷ் அரவிந்த் சொல்வதை கேட்டு, லேசாகக் கண் கலங்குவார். ‘என்ன’ என்று ரமேஷ் அரவிந்த் கேட்பார். ‘ஒண்ணுமில்ல, மை’ என்று சொல்லிவிட்டு, லேசாகக் கண்ணீரை ஒற்றை விரலால் துடைத்துக்கொண்டே மெல்லியதாகச் சிரிப்பார். அப்படியொரு தேர்ந்த, சிறந்த, உன்னதமான நடிகை மீனா.

தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து ஒரு ரவுண்டு வந்தார். இந்தியாவின் எல்லா மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘த்ரிஷ்யம்’ (தமிழில் ‘பாபநாசம்’) படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மோகன்லாலுடன் இணைந்து நடித்தார். மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அம்மா ராஜ்மல்லிகாவும் நடிகைதான். அதன் பின்னர் மீனா நடிக்க வந்து, தனியிடத்தைப் பிடித்தார். இன்றைக்கு மீனா நடிப்பதில்லை. ஆனால் அவரின் இடத்தை எவரும் இன்னமும் பிடிக்கவும் இல்லை. அதேசமயம், அம்மாவின் இடத்தைப் பிடிப்பதற்காக மகள் நைனிகா, நடித்து அசத்திக்கொண்டிருக்கிறார்.

- நடிகை மீனா பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 16ம் தேதி).

தனித்துவ நடிப்பால் அசத்திய மீனாவை வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE