உடல் ஆற்றலை மேம்படுத்த எளிய உடற்பயிற்சிகள்: வீடியோவில் ஈர்க்கும் விஷாலின் தந்தை

By செய்திப்பிரிவு

உடலமைப்பு, உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களைப் பதிவேற்ற புதிய யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி

பல வரவேற்பு பெற்ற படங்களைத் தயாரித்தவர் ஜி.கே.ரெட்டி. 'ஐ லவ் இந்தியா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர், பின்பு தனது மகன் விஷாலை நாயகனாக வைத்தும் படங்களைத் தயாரித்தார். 'சண்டக்கோழி', 'திமிரு', 'சத்யம்', 'தோரணை' உள்ளிட்ட பல படங்கள் ஜி.கே. பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவைதான்.

விஷால் தனியாக விஷால் ஃபிலிம் பேக்டரி தொடங்கியதால், ஜி.கே. பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிப்பை நிறுத்தியது. படங்கள் தயாரிப்பு மட்டுமல்லாது, பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.

இதெல்லாம் தாண்டி தனது உடலமைப்பில் மிகவும் கவனம் செலுத்துபவர் ஜி.கே.ரெட்டி. தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர். இந்தக் கரோனா அச்சுறுத்தல் காலத்தில் ஜி.கே.ரெட்டி - விஷால் இருவருக்குமே தொற்று உறுதியானது.

இருவருமே தொற்றிலிருந்து மீண்டு, எப்படி மீண்டோம் என்பதை சமூக வலைதளத்தில் தெரிவித்தனர். மேலும், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது, உடல் ஆரோக்கியம், உடல் சுறுசுறுப்பு குறித்துப் பேசுவதற்காக புதிய யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார் ஜி.கே.ரெட்டி.

தனது 82 வயதிலும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை 'ஜி.கே.ரெட்டி' என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி பதிவேற்றியுள்ளார். முக்கியமாக, இந்தக் கரோனா காலத்தில் உடல் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை விவரிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE