மும்பையில் அலுவலகம் இடிப்பு விவகாரம்: ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு நடிகை கங்கனா வழக்கு

மும்பை அலுவலகத்தை இடித்தது தொடர்பாக மும்பை மாநகராட்சியிடம் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு நடிகை கங்கனா ரனாவத் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் பாலிவுட்டில் நிலவி வரும் மாபியா விவகாரம், போதைப் பொருள் விவகாரம் குறித்து நடிகை கங்கனா வெளிப்படையாக பேசி இருந்தார். இதற்கு மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கங்கனா ரனாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். மேலும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் - கங்கனா ரனாவத் இடையே வார்த்தை போரும் நடந்தது. போதைப்பொருள் புழக்கம் குறித்து பாலிவுட் முன்னணி நடிகர்கள் கருத்து தெரிவிக்காததற்கும் கங்கனா கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மும்பை பாந்த்ராவில் உள்ள கங்கனா அலுவலகத்தின் சில பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று கூறி கடந்த வாரம் இடிக்கப்பட்டது. மும்பை மாநகராட்சியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில், கங்கனாவின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் புதிதாக ஒரு மனுவை நடிகை கங்கனா நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளார். அதில் மும்பை மாநகராட்சி தனக்கு ரூ.2 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று நடிகை கங்கனா கூறியுள்ளார். தனது அலுவலகத்தில் 40 சதவீதம் இடிக்கப்பட்டுள்ளதாகவும், சோபாக்கள், சான்ட்லியர். பழங்கால ஓவியங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயா பச்சன் எம்.பி.க்கு கேள்வி

பாலிவுட் திரையுலகில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ரவி கிஷண் பேசியதற்கு நடிகை ஜெயா பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மொத்த திரைத் துறையினரின் நற்பெயரும் களங்கப்படுத்தப்பட்டு இருப்பதாக ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்கனா கூறும்போது, “ஜெயா பச்சன் அவர்களே… உங்கள் மகள் ஸ்வேதா, இளம்வயதில் தாக்குதலுக்கு உள்ளாகி, போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு இருந்தாலும் அல்லது தங்கள் மகன் அபிஷேக் பச்சன் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு ஒரு நாள் தூக்கில் தொங்குவதைக் கண்டாலும் இதே வார்த்தையைதான் நீங்கள் பேசுவீர்களா? எங்களுக்கும் இரக்கம் காட்டுங்கள்” என்று ஆவேசமாக கேட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE