கருணைக் கொலையின் வலியைப் பேசும் 'அகம் திமிறி'- 16 விருதுகளை அள்ளிய குறும்படம்!

By என்.சுவாமிநாதன்

கருணைக் கொலை குறித்த செய்திகளின் பின்னே இருக்கும் மனித உணர்வுகளின் குவியல்களை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் ‘அகம் திமிறி’ என்னும் 50 நிமிடக் குறும்படம் 16 விருதுகள் பெற்றுச் சாதனை புரிந்துள்ளது. ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் கேன்டீன் நடத்தும் சாமானியனின் மகளுக்குப் பிறவியிலேயே கல்லீரலில் குறைபாடு ஏற்படுகிறது. தனது சேமிப்பு முழுவதும் செலவிட்டு அறுவை சிகிச்சை செய்தும் மகளைக் குணப்படுத்த முடியவில்லை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் தீர்வு என மருத்துவர்கள் சொல்ல, அதற்கு ஆகும் பெரும் தொகையைக் கேட்டுத் தள்ளாடிப் போகிறது அந்த நடுத்தர வர்க்கக் குடும்பம்.

அதன்பின்பு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து நிதி உதவி பெறும் நோக்கத்தில் கருணைக் கொலை பக்கம் நகர்கின்றனர் குடும்பத்தினர். இறுதியில் கருணைக் கொலைக்கு அனுமதி கிடைக்க, அதற்குள் இருக்கும் சோக முடிச்சுகளை அவிழ்த்து விரிகிறது திரைக்கதை.

சிறப்புநிலைக் குழந்தைகள், மருத்துவம் பார்க்க வசதியில்லாமல் தினம் போராடும் குழந்தைகள் ஆகியோரின் வலிமிகுந்த வாழ்வை 50 நிமிடப் படத்தில் காட்சிப்படுத்தினார் இயக்குநர் வசந்த் பாலசுந்தரம். கருணைக் கொலை குறித்தும், அதைச் சட்டமும், பொதுச் சமூகமும் எதிர்கொள்ளும் சூழல் குறித்தும் விவாதத்தை எழுப்பியிருக்கும் இந்தப் படம் தேசிய அளவில் 16 விருதுகளைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் வசந்த் பாலசுந்தரம் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''சின்ன வயதிலிருந்தே சினிமாத் துறையின் மீது ஆர்வம் அதிகம். பொறியியல் படித்தாலும் என் நாட்டமெல்லாம் திரைப்படத் துறை சார்ந்தே இருந்தது. படிப்பு முடிந்ததும் அப்பாவிடம் தயங்கியபடியே ஆசையைச் சொன்னேன். அதுவும்கூட இயக்கம் பற்றியெல்லாம் சொல்லவில்லை. அனிமேஷன் கோர்ஸ் படித்தால் சினிமாத் துறையில் நல்ல வேலை கிடைக்கும் என்று முதலில் நூல்விட்டுப் பார்த்தேன்.

விருகம்பாக்கத்தில் நண்பன் வீட்டில் தங்கியிருந்தபடியே வாய்ப்பு தேடினேன். பாலுமகேந்திரா சாரின் பயிற்சிப் பட்டறையில் சேரும் ஆர்வத்தில் தேடிப்போனேன். என்னைப் பார்த்ததுமே, சில கேள்விகளைக் கேட்டுவிட்டு அவரது பட்டறையில் சேர்த்துக்கொண்டார்.

திரைத்துறை சார்ந்த பயிற்சி மையங்களில் தியரி வகுப்புகள்தான் கிடைக்கும். ஆனால், பாலுமகேந்திரா சாரிடம் களப்பயிற்சியும் கிடைக்கும். தொடர்ந்து பாலுமகேந்திரா சாரே உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டார். ஆனால், அந்த நிலையில் நமக்குப் பெரிதாகச் சம்பளம் எதுவும் கிடைக்காது. இதைத் தயங்கியபடியே அப்பாவிடம் சொன்னேன். உடனே அப்பா, ‘அவருடன் இருந்தால் சினிமாவில் நல்ல வாழ்க்கை இருக்கும் என நினைத்தால் நீ சேர்ந்துகொள். செலவுக்கு உனக்கு நான் பணம் அனுப்புகிறேன்’ எனச் சொன்னார்.

’தலைமுறை’களுக்குப் பின்பு பாலுமகேந்திரா சார் தொடங்கிய படத்திலும் வேலைசெய்தேன். ஆனால் அதன் துவக்கநிலையிலேயே பாலுமகேந்திராசாரின் மறைவு ஒட்டுமொத்த கலையுலகுக்கும் பேரிழப்பு. அவரது மறைவுக்குப் பின் சில சிறு பட்ஜெட் படங்களில் வேலை செய்தேன். தொடர்ந்து 18 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘மறை நிரல்’ என்னும் குறும்படத்தை எடுத்தேன். அதற்குக் கலைவாணர் குறும்பட விருது கிடைத்தது. அதன் பின்பு எனது சினிமா காதலை விசாலமாக்கிய பாலுமகேந்திரா சாருக்குப் புகழஞ்சலி செலுத்தும் விதமாக, அவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்கள், நெருங்கிப் பழகியவர்கள் எனப் பலரையும் சந்தித்து ஓர் ஆவணத் தொகுப்பைத் தயாரித்தேன்.

பாலுமகேந்திராவுடன்...

அதற்காக இயக்குநர் வெற்றிமாறன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் என ஒவ்வொருவராகச் சந்தித்தேன். அப்போதுதான் இயக்குநர் சீனுராமசாமியையும் சந்தித்தேன். அப்போதே அவர் அடுத்த படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்து கொள்கிறாயா எனக் கேட்டார். பாலு சாரின் பட்டறையில் கற்றவன் என்பதால் என்னிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கை பெருமிதமாக இருந்தது.

விஜய் சேதுபதி நடிப்பில் ஹிட்டான ‘தர்மதுரை’ படத்தில் சீனு சாரிடம் உதவி இயக்குநராக இருந்தேன். அதில் கிடைத்த சம்பளத்தை வைத்துச் சென்னையில் அலுவலகம் போட்டு என் படத்துக்குக் கதை எழுதினேன். அது பெண் ஆளுமையை மையப்படுத்திய கதை. அதைச் சீனு சாரிடம் சொன்னதும் எனக்காக அவரே போன் செய்து முன்னணி நடிகைகளிடம் நான் கதை சொல்ல நேரம் வாங்கித் தந்தார்.

எப்போது வேண்டுமானாலும் ஷூட்டிங் தொடங்கும் நிலையில் அந்தப் படம் இருக்கிறது. அதற்கு முன்பு ‘அகம் திமிறி’யைச் செய்யவேண்டிய சூழல் எழுந்தது. ஆந்திர மாநிலத்தில் ஒரு சிறுமிக்குக் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்ய வழியில்லாமல் கருணைக்கொலை செய்ய அவரது பெற்றோர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். அது ஊடகங்களில் செய்தியாக வெளியானதும் ஆந்திர முதல்வர், முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து அறுவை சிகிச்சைக்கான மொத்தச் செலவையும் ஏற்றார்.

இதைப் பார்த்துவிட்டு கருணைக் கொலைக்குப் பெற்றோரே விண்ணப்பிக்கும் நிலை ஏன் ஏற்படுகிறது எனத் தேடினேன். பெற்றோரின் அப்படியான இறுக்கமான முடிவுக்குப் பின்னால் எவ்வளவு உருக்கமான வலி இருக்கிறது... அந்த வலியைக் கடக்க முன்வைக்க வேண்டிய மாற்று என்ன? எனவும் ‘அகம் திமிறி’ பேசும்.

படம் உருவாகக் காரணமே எனது நண்பரின் மாமனார் எல்.துரைராஜன் சார்தான். என் மீது நம்பிக்கை வைத்து கதையைக் கேட்டதுமே தயாரிப்பு செய்தார். ஒளிப்பதிவாளர் சதீஸ் சரணும் கடின உழைப்பைக்கொடுத்தார்.

திண்டுக்கல் பழைய நீதிமன்றத்தில் ஷூட்டிங் எடுத்தோம். நடிகர் கஜராஜ் (இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை) நீதிபதியாகத் தேர்ந்த நடிப்பைத் தந்தார். திண்டுக்கல் ராம்குமார், விவேக் நிஷாந்த், ஜாகிர் உசேன், விஜய் தென்னரசு என்று நன்றி சொல்லவேண்டிய பட்டியல் நீண்டது.

பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் எனது தோழி கோகிலப்பிரியா படத்தைப் பார்த்துவிட்டு இது விருதுக்கான படம் எனத் தீர்க்கமாகச் சொன்னார். அவரே பல போட்டிகளுக்கும் அனுப்பி வைத்தார். நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது, டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருது, கொல்கத்தா திரைப்படவிழாவில் சிறந்த நடிகர், இயக்கம் உள்பட 4 விருதுகள் என மொத்தம் 16 விருதுகளை வாங்கித் தந்திருக்கிறது. ஓடிடி தளத்தில் இப்போது ரிலீஸ் செய்து இருக்கிறோம். விரைவில் யூடியூபிலும் வெளியிட இருக்கிறோம்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE