‘சப்பாணி’, ‘மயிலு’, ‘பரட்டையன்’, ‘குருவம்மா’; பாரதிராஜா, இளையராஜா, கலைமணி, பாக்யராஜ், கங்கை அமரன்!  - 43 ஆண்டுகளாகியும் என்றும் பதினாறு ‘16 வயதினிலே!’

By வி. ராம்ஜி

ஒரு படம் என்னவெல்லாம் செய்யும்? மக்களை ரசிக்கவைக்கும். இன்னொரு முறை, இன்னொரு முறை என படம் பார்க்கத்தூண்டும். திரையிட்ட தியேட்டர்களில் ’ஹவுஸ்ஃபுல்’ போர்டு நிரந்தரமாக இருக்கும். வசூல் குவியும். படத்தில் நடித்தவர்கள் பாராட்டப்படுவார்கள். இயக்குநர் கொண்டாடப்படுவார். வரிசையாக படங்கள் கிடைக்கும். நடித்தவர்களும் கேரக்டர்களும் கேரக்டர்களின் பெயர்களும் மனதில் பதிந்துவிடும். பாடல்கள் ஹிட்டாகும். முணுமுணுக்கவைக்கும். திரும்பத்திரும்பக் கேட்கத் தோன்றும். மிகச்சிறந்த படம் என்றால் அந்த வருடத்துக்கு ஏதேனும் விருதுகள் கிடைக்கும். இவற்றையெல்லாம் கடந்து, தமிழ் சினிமாவின் பாதையை மடைமாற்றிவிட்டதும் இன்றைக்கும் அந்தப் படத்துக்கு இணையான கிராமத்துப் படம் இல்லவே இல்லை என்பதும் பின்னர் அதை அடியொற்றி பல படங்கள் வந்தன என்பதும் பல வருடங்கள் கழித்தும் மறக்கமுடியாத படங்களின் பட்டியலில் அந்தப் படமும் இருப்பதும்... என பல சாதனைகளையும் சரித்திரங்களையும் செய்ததுதான் ‘16 வயதினிலே’.

ஸ்ரீதருக்குப் பின் தமிழ் சினிமாவின் தரம் இன்னும் மேம்பட்டது. கே.பாலசந்தர் வந்த பிறகு, காட்சி அமைப்புகளிலும் வசனங்களிலும் அழகியலும் ‘டைரக்‌ஷன் டச்’களும் வளர்ந்தன. பாரதிராஜா வந்த பிறகு, எளிமையான கதை மாந்தர்கள் திரையில் உலவினார்கள். நாம் பேசுகிற வார்த்தைகளை இயல்பாகப் பேசினார்கள். கிராமங்களையும் அந்த மனிதர்களின் உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொண்டு, கோடம்பாக்கத்துக்குள் நடமாடினார்கள். இயக்குநர் பாரதிராஜா தன் ஒவ்வொரு படங்களிலுமாக, கொஞ்சம் கொஞ்சமாகச் செய்த மாற்றமில்லை. ஒரேயொரு படத்தில்... அதுவும் முதல் படத்தில் செய்திட்ட புரட்சி. அந்த முதல் படம்... ‘16 வயதினிலே’.

படம் ஆரம்பித்ததும் சோகத்துடன் காத்திருக்கும் நாயகி. ஃபளாஷ்பேக் விரிந்ததும் குதூகலத்துடன் ஓடிவரும் நாயகியில் இருந்தே படமும் ஓடத்தொடங்கும். நாயகி மயிலு, அவளின் அம்மா குருவம்மா. ஊரின் சூரத்தனக்காரன் பரட்டையன். ஊருக்கே உதவி செய்யும் வேலைக்காரன் சப்பாணி. நாகரீக வாசனையுடன் பட்டணத்தில் இருந்து ஊருக்கு வரும் டாக்டர். இவர்களைக் கொண்டுதான் மொத்தப் படத்தையும் கொடுத்திருப்பார் பாரதிராஜா. மொத்தக் கதாபாத்திரத்திலும் வாழ்ந்திருப்பார்.

ஊரில் இருக்கும் பரட்டையனுக்கு பெட்டிக்கடை வைத்திருக்கும் குருவம்மாவுடைய மகள் மயிலின் மீது கண். டாக்டரின் பார்வையும் அவள் மீது விழுகிறது. அப்பாவியாகவும் அழுக்கு உடையுடனும் எடுபிடி வேலைகள் செய்யும் சப்பாணியும் இந்த ஆட்டத்தில் இருக்கிறான். மூவரில் பத்தாம் வகுப்பு வரை படித்து பாஸ் செய்துவிட்டு, டீச்சர் கனைவில் இருக்கிற மயிலின் பார்வை, டாக்டரை நோக்கியிருக்க, நொந்து போய் விலகிக்கொள்கிறான் சப்பாணி.

ஆனால், டாக்டரோ மயிலைப் பயன்படுத்திக்கொள்ளவே விரும்புகிறான். நல்லவேளையாக நழுவி ஓடுகிறாள். ஆனால் இதையே பெரும் அவமானமாகக் கருதி இறக்கிறாள் குருவம்மா. வழக்கம் போல், அந்த வீட்டுக்கும் மயிலுக்கும் காவல்காரனாக இருக்கிறான் சப்பாணி.

கொஞ்சம் கொஞ்சமாக மயில், சப்பாணியை உணர்கிறாள். பகட்டு, பந்தா, ஆடம்பரம், நாகரீகம் என்பதையெல்லாம் கடந்து, உள்ளன்புக்கும் உண்மையான மனதுக்குமான வீரியத்தை உணர்ந்துகொள்கிறாள். சப்பாணியை நேசிக்கிறாள். அவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறாள். எண்ணெய் தடவிய முடியும் துவைத்து வெளுத்த ஆடையுமாக வலம் வருகிறான். எடுபிடி வேலையையும் தவிர்க்கச் சொல்கிறாள். தவிர்க்கிறான்.

ஒருகட்டத்தில், சப்பாணியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறாள். தாலியும் மாலையும் வாங்க சந்தைக்குச் செல்கிறான் சப்பாணி. திரும்பி வருவதற்குள் அவளைச் சூறையாட முடிவு செய்கிறான் பரட்டையன். படித்த டாக்டர், நாகரீகமாக காமத்தை, காதல் என்று சொல்ல, படிக்காத கிராமத்தான் காமத்தை காமமாக மட்டுமே அணுகுகிறான். பலாத்காரப்படுத்த முனைகிறான்.

சந்தையில் இருந்து திரும்புகிற சப்பாணி அதிர்கிறான். கெஞ்சுகிறான். ஓணானை அடித்து இம்சை பண்ணுவதையே ஏற்றுக்கொள்ளாமல் துடித்தவன், பரட்டையனை கொன்றே போடுகிறான். கைதாகி ஜெயிலுக்குப் போய்விட்ட சப்பாணியின் வரவுக்காக, மயிலு வழிமேல் வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறாள். ஆரம்பித்த இடத்திலேயே படத்தை முடிக்கிறார் பாரதிராஜா. அங்கிருந்து தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர்... இன்று வரை பயணித்துக்கொண்டே இருக்கிறார்.

கமலுக்கு அப்படியொரு படம் அதுதான் முதல் படம். ரஜினிக்கு டாப் மோஸ்ட் வில்லத்தனம் அதுதான் முதல்படம். அதுமட்டுமா? ‘இதெப்படி இருக்கு?’ என்று காட்சிக்குக் காட்சி இவர் சொல்லும் வசனம்... பஞ்ச் வசனம்... ரஜினி பஞ்ச் வசனம் பேசிய வகையிலும் முதல்படம். ஸ்ரீதேவி அப்படியொரு அழகு தேவதையாக நாயகியானதும் இதுவே முதல் படம். எம்ஜிஆர், சிவாஜி காலத்து நடிகையாக இருந்தாலும் காந்திமதிக்கு அப்படியொரு நடிகையாகக் கிடைத்த வாய்ப்பில் இதுவே முதல் படம். டாக்டராக நடித்த சத்யஜித்துக்கும் முதல் படம். ‘ராமன் எத்தனை ராமனடி’ போன்ற பல படங்களில் வந்துபோனாலும் ‘பத்தவச்சிட்டியே பரட்டை’ என்று பஞ்ச் வசனத்துடன் நமக்கு கவுண்டமணி கிடைத்த வகையிலும் முதல் படம்.

அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்த வகையில் முதல் படம். முன்னரே பாடியிருந்தாலும் ‘செவ்வந்திப்பூமுடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா’ என்றும் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ என்றும் பாடி அசத்திய மலேசியா வாசுதேவன் ஹிட்டடித்த வகையிலும் முதல் படம். இந்தியாவிலேயே திரைக்கதையின் மன்னன் என்று பேரெடுத்த... தமிழ்ப் படங்களில் இருந்து இவரின் படங்கள் பெரும்பாலும் இந்தியில் ரீமேக் செய்யப்பட... அமிதாப்பையே வைத்து இயக்கிய... ‘இது அமிதாப் நடித்த இயக்குநரின் படம்’ என்று பாலிவுட்டையே சொல்லவைத்த... இயக்குநர் பாக்யராஜுக்கு உதவி இயக்குநராக முதல் படம்.

இசையமைப்பாளராக, பாடகராக, டப்பிங் வாய்ஸ் கொடுப்பவராக, இயக்குநராக பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் பாடலாசிரியராக இருந்து... ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’ என்று எழுதி, பாடியவருக்கு தேசிய விருது கிடைக்கச் செய்த பாட்டுக்குச் சொந்தக்காரரான கங்கை அமரனுக்கு பாடலாசிரியராக முதல்படம். அதற்கு முன்னர் பணியாற்றியிருந்தாலும், வசனங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கைதட்டல்கள் வாங்கிய வகையில் கதாசிரியர் கலைமணிக்கு முதல்படம். வின்செண்ட், பி.என்.சுந்தரம், என்றெல்லாம் ஒளிப்பதிவாளர்களைச் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், ‘அட... பிரமாதம்பா’ என்று நிவாஸ் பேர்வாங்கிய வகையில் முதல்படம்.
‘அன்னக்கிளி’யில் தொடங்கி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் முதன் முதலாக பிஜிஎம் என்று சொல்லப்படும் பின்னணி இசையில் மிகச் சுதந்திரமாகச் செயல்பட்டு, பல புதுமைகளைச் செய்து, தன் விருப்பப்படியே இசையமைத்தேன் என்று சொல்லும் இளையராஜா, பிஜிஎம்மில் தனி முத்திரை பதித்த முதல்படம். பாட்டெழுதி, பாடி நம்மையெல்லாம் பிரமிக்கச் செய்த இளையராஜா பாடிய வகையில் முதல்படம்.

இப்படி... ‘16 வயதினிலே’வுக்கு ஏகப்பட்ட பெருமைகள் கிடைப்பதற்கு முதல் காரணம்... முழுக்காரணம்... கர்த்தா... இயக்குநர் பாரதிராஜாவுக்கும் முதல்படம்.
‘சோளம் வெதக்கையிலே’ என்று டைட்டில் ஸாங் பாடியிருப்பார் இளையராஜா. ’16 வயதினிலே’ எனும் விதையில் இருந்து விருட்சமாக வளர்ந்தவர்களும் உண்டு. வளர்ந்தது தமிழ் சினிமா என்பதும் உண்மை.

‘16 வயதினிலே’ படத்தைப் பார்த்திருக்கிறீர்களா என்று யாரையாவது கேட்டால் கோபமாகிவிடுவார்கள். ‘எத்தனை முறை’ என்று உடன் சேர்த்துக்கொண்டால், மகிழ்ந்து பதில் தருவார்கள். அத்தனை முறை பார்த்திருந்தாலும் இன்றைக்கும் தொலைக்காட்சியில் பார்த்தாலும் படம் தாக்கும். மனம் கனக்க வைக்கும். சோகத்தில் ஆழ்த்தும். தூங்கவிடாமல் பண்ணும். டாக்டரைப் பார்த்தால் கோபமாவோம். பரட்டையனைப் பார்த்தால் ஆவேசமாவோம். மயிலைப் பார்த்தால் இரக்கப்படுவோம். சப்பாணியைப் பார்த்தால் பரவசமாவோம்.

ஒரு படம் என்னவெல்லாம் செய்யும்? எல்லாப் படங்களும் இப்படியெல்லாம் செய்யுமா? தெரியவில்லை. ஆனால் இப்படியெல்லாம் செய்தது ‘16 வயதினிலே’.
1977ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியானது ‘16 வயதினிலே’ . படம் வெளியாகி 43 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் சப்பாணி, மயிலு, பரட்டை, குருவம்மா என எல்லோரும் ‘என்றும் 16’ என ரசிக மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பாரதிராஜாவுக்கும் ‘16 வயதினிலே’ டீமிற்கும் ‘செந்தூரப்பூ’வும் ‘செவ்வந்திப்பூ’வும் கைகொள்ளாத அளவுக்கு வழங்கி வாழ்த்துவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE