பாலிவுட் படப்பிடிப்பில் போதை மருந்துகள் சகஜம்; பார்ட்டிகளில் கொக்கைன் அதிகம்: சுஷாந்த் நண்பர் யுவராஜ் எஸ்.சிங் குற்றச்சாட்டு

By ஐஏஎன்எஸ்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நெருங்கிய நண்பரும், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான யுவராஜ் எஸ்.சிங், பாலிவுட்டில் போதை மருந்து கலாச்சாரம் இருப்பதோடு, துறைக்குள் செல்வாக்கு பெறவும் அது உதவும் என்று கூறியுள்ளார். பல முன்னணி நடிகர்கள் கொக்கைனுக்கு அடிமையாகியுள்ளனர் என்றும் பேசியுள்ளார்.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு யுவராஜ் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது:

"நீண்ட காலமாகவே போதை மருந்து பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. 70-களில் இருந்து இருக்கலாம். அப்போது நிலை வேறு. சமூக ஊடக வெளிச்சம் இல்லை. இப்போது எல்லாம் வெளியே வருகிறது. கொக்கைன் எடுத்துக் கொண்டவர்கள் துறையில் பலர் உள்ளனர். இயக்குநர்கள், நடிகர்கள் பலர் போதை மருந்து உட்கொண்டு உலவி வருகின்றனர். அதனால்தான் இதுபோன்ற விஷயங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன.

வீட் (weed) என்பது சிகரெட்டைப் போல. ஒளிப்பதிவாளர் உட்பட பல தொழில்நுட்பக் கலைஞர்களும், படப்பிடிப்பில் அதைச் சகஜமாக எடுத்துக் கொள்வார்கள். பாலிவுட் பார்ட்டிகளில் பெரும்பாலும் கொக்கைன்தான் அதிகம். அதுதான் இங்கு முக்கியமான போதை வஸ்து. அடுத்து எம்டிஎம்ஏ, எக்ஸ்டஸி, எல்எஸ்டி உள்ளிட்ட பல போதை வஸ்துகள் உள்ளன.

குதிரைகளுக்கு மயக்கம் வரச் செய்யும் கேட்டமைன் என்கிற போதை வஸ்துவும் பயன்பாட்டில் உள்ளது. இவையெல்லாம் மிக அதிக சக்தி வாய்ந்த போதை மருந்துகள். 15-லிருந்து 20 மணி நேரங்கள் வரை போதையில் இருக்க வைக்கும். கொக்கைனும் வலிமையானதுதான். என்னைப் பொறுத்தவரை துறையில் இருக்கும் 5-8 நடிகர்கள் கண்டிப்பாக அந்தப் பழக்கத்திலிருந்து மீள வேண்டும் இல்லையென்றால் இறந்து விடுவார்கள்.

ஆம், எனக்கும் பல முறை போதை மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது மிகவும் சகஜமானது. பலர் போதை மருந்தை உட்கொண்டுதான் பார்ட்டிகளுக்குச் செல்வார்கள். அதுதான் அவர்களைப் பலரிடம் தொடர்பில் கொண்டு செல்லும். சிலருக்கு இதனால் திரைப்பட வாய்ப்புகள் கூட கிடைத்துள்ளன.

நீங்கள் போதை மருந்து உட்கொண்டு, சரியான நபர்களோடு, சரியான நேரத்தில் சந்தித்தால் உங்களுக்கென ஒரு செல்வாக்கு, ஒரு குழு, ஒரு தொடர்பு உருவாகும். இப்படித்தான் பாலிவுட் வேலை செய்கிறது. அவர்களே ஒரு சூழல், ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதற்குள்ளேயே பணியாற்றுவார்கள்.

கிட்டத்தட்ட அத்தனை பேருமே போதை மருந்து உட்கொள்கின்றனர். நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். இப்படி போதைப் பழக்கம் உள்ளவர்களுக்குள் கூட்டு உண்டு, அவர்களுக்குள் பணியாற்றிக் கொள்வார்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு வீடியோ வைரலானதே, அது கூட போதை மருந்து பார்ட்டி தான்".

இவ்வாறு யுவராஜ் கூறியுள்ளார்.

யுவராஜ் குறிப்பிட்டிருக்கும் வீடியோ கடந்த வருடம் கரண் ஜோஹரின் வீட்டில் நடந்த பார்ட்டியில் எடுக்கப்பட்டது. இதில் தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், மலைகா அரோரா, விக்கி கவுஷல், வருண் தவான், ஷாகித் கபூர், அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த பார்ட்டியில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக அப்போதே சர்ச்சை வெடித்தது.

மேலும், பேசியிருக்கும் யுவராஜ் முன்னணியில் இருக்கும் 10-15 நட்சத்திரங்கள் போதை மருந்துக்கு அடிமையாகியுள்ளனர் என்று கூறியுள்ளார். ஏன் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்று கேட்டபோது, இந்தத் துறையையே பழி என்பதுதான் செலுத்துகிறது. அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும், அதனால் பெயர்களைத் தவிர்த்துவிட்டதாக யுவராஜ் கூறியுள்ளார்.

"இந்த நபர்கள் போதை மருந்தை எடுப்பவர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதை நிரூபிக்க என்னிடம் புகைப்படங்களோ வேறு ஆதாரங்களோ இல்லை. என் மீது இதனால் அவர்கள் வழக்குத் தொடரலாம். நான் அதில் சிக்க விரும்பவில்லை. மேலும் நான் இந்தத் துறையில் இருப்பதால் என் திரைப்படங்களை இவர்கள் குறிவைப்பார்கள். வெளியீட்டைத் தடுப்பார்கள். பழி தீர்க்கும் துறை இது.

அக்‌ஷய் குமார் தவிர 10-15 முன்னணி நடிகர்களும் இதில் உள்ளனர். அக்‌ஷய் குமார் மிகச் சுத்தமான, நேர்மையானவர். இந்த முன்னணி நடிகர் கும்பல் அவர்களுக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கியுள்ளது. அதனுள் தான் நீங்கள் பணியாற்றியாக வேண்டும். வேறு வழி கிடையாது.

கபூர் அண்ட் சன்ஸ் இயக்குநர் ஷகுன் பாத்ரா என் நெருங்கிய நண்பர். தன் அடுத்த படத்தை தீபிகா படுகோனேவை வைத்து கோவாவில் எடுத்து வருகிறார். இதுபோன்ற சூழலை இந்த முன்னணிக் கலைஞர்கள் உண்டாக்கி, அவர்களுக்கான நட்சத்திரங்களை அவர்களே உருவாக்கி, வாரிசு அரசியலுக்கு ஆதரவு தந்து கொண்டிருப்பதாக பாத்ரா என்னிடம் கூறியுள்ளார்.

போதை மருந்து கலாச்சாரம் சகஜமாக்கப்பட்டுவிட்டது. அது துறைக்கு நல்லதல்ல. இது போன்ற விஷயங்களால் அடுத்த தலைமுறை துறைக்குள் வரத் தயங்கும். இவற்றைச் சரி செய்ய வேண்டும்" என்று யுவராஜ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE