’கதைகளின் மேக்கப்மேன்’ பி.வாசு; - இயக்குநர் பி.வாசு பிறந்தநாள் ஸ்பெஷல்

By வி. ராம்ஜி

எண்பதுகளில் எல்லாவிதமாகவும் படங்கள் வந்தன. ஏகப்பட்ட இயக்குநர்கள் அவரவர் பாணியில் படங்களைத் தந்து அசத்தினார்கள். எக்கச்சக்க வெற்றிப் படங்களைக் கொடுத்து பிரமிக்க வைத்தார்கள். பலதரப்பட்ட நடிகர்களை இயக்கி, அவர்களுக்கு வெற்றிப் படங்களையும் வெள்ளிவிழாப் படங்களையும் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட எண்பதுகளின் எல்லா இயக்குநர்களது படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இன்றைக்கும் அந்தப் படங்கள் திரும்பத்திரும்பப் பார்க்கும் வகையிலும் பாடல்கள் இன்னும் இன்னுமாக முணுமுணுக்கும் வகையிலும் இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களைக் கொடுத்த இயக்குநர்களில் ஒருவர்... பி.வாசு.

அந்தக் காலத்தில், எம்ஜிஆர், சிவாஜி, என்.டி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு மேக்கப் போட்டவர்... பீதாம்பரம். முன்னணி மேக்கப் மேன் என்று பேரெடுத்தவர். என்.டி.ஆருக்கு கிருஷ்ணர் வேஷம் அமைத்து, ஆந்திரத்து மக்கள் அவரை கிருஷ்ணராகவே போற்றியதற்கும் வணங்கியதற்குமான சாதனையை சத்தமே இல்லாமல் செய்தவர் இவர். பீதாம்பரத்தின் மைந்தன் தான் பி.வாசு.

தமிழ்த் திரையுலகில், சொல்லுகிற பாணியிலும் வசன பாஷையிலும் கேமரா நகர்தலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். ஹீரோக்களின் பெயரைச் சொல்லி அவர்களின் படங்களை ரசிகர்கள் சொல்லி வந்த காலகட்டத்தில், ‘ஸ்ரீதர் படம்’ என்று சொல்லவைத்த இயக்குநர்களின் சீடர்களில் பி.வாசுவும் ஒருவர்.
‘ஓ மஞ்சு’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ முதலான படங்களில் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக இருந்து விட்டு, அங்கே நட்பான சந்தான பாரதியும் வாசுவுமாகச் சேர்ந்து ‘பன்னீர் புஷ்பங்கள்’ தந்தார்கள். அவர்களுக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றது தமிழ் சினிமா.

விடலைப் பருவத்துக் காதலை, அது காதலே இல்லை என்பதை, அந்த வயதில் படிப்பு முக்கியம் என்பதை, பெற்றோர் முக்கியம் என்பதை கண்ணியமாகவும் கவிதையாகவும், ரம்மியமாகவும் ரசனையுடனும் சொன்னார்கள். அடுத்தடுத்து ‘பாரதி - வாசு’ என்ற பெயரில் படங்களை இயக்கினார்கள்.

பின்னர், தனித்தனியே இயங்கினார்கள். இயக்கினார்கள். இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். பிரபுவை நாயகனாக வைத்து ‘என் தங்கச்சி படிச்சவ’ மூலம் தனி இயக்குநராக வலம் வந்தார் பி.வாசு. முதல் படமே சூப்பர் ஹிட். வரிசையாக பிரபு, சத்யராஜ், கார்த்திக், விஜயகாந்த் என்றும் ரஜினியை வைத்தும் பல படங்களை இயக்கினார். எல்லோருக்கும் பாரபட்சமே இல்லாமல் ஹிட்டுகளை அள்ளி வழங்கினார்.

சத்யராஜை வைத்து ‘வேலை கிடைச்சிடுச்சு’ படத்தைக் கொடுத்தார். பம்மல் ரவி எனும் ஸ்டண்ட் மாஸ்டரை அறிமுகப்படுத்தினார். சண்டைக்காட்சிகள் மிரட்டின. வில்லனின் அடியாட்களுக்கு வெள்ளையும்சொள்ளையுமாக வேட்டி சட்டை கொடுத்து உலவவிட்ட டிரெண்டை உருவாக்கியது வாசுவாகத்தான் இருக்கும்.
இன்றைக்கு வரை படமும் சரி, பாடல்களும் சரி. படத்தின் வசூலும் சரி. சரித்திரம். ‘சின்னதம்பி’ என்றொரு ஹிட்டைக் கொடுத்து தெறிக்கவிட்டார் வாசு. ‘தங்கப்பதக்கம்’, ‘மூன்று முகம்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’க்குப் பிறகு கம்பீரமான போலீஸ் கேரக்டரும் கதையுமாக வந்தது ‘வால்டர் வெற்றிவேல்’. இந்த கஞ்சி போட்ட சத்யராஜைத்தான் பிறகு முழு காமெடியனாக ‘நடிகன்’ படத்தில் உருமாற்றியிருந்தார் பி.வாசு.

’பணக்காரன்’ படத்தையும் ‘மன்னன்’ படத்தையும் ரஜினிக்கு வழங்கினார். அதில் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ இன்றைக்கும் கல்யாண வீடுகளில் பாடிக்கொண்டிருக்கிறது. இதில், ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ செல்போனிலும் ரிங்டோனாகவும் காலர் டியூனாகவும் எத்தனையோ பேரிடம் இருக்கின்றன.

கதை இருக்கும். கதைக்குள்ளேயே காமெடி இருக்கும். இரட்டை அர்த்த காமெடியெல்லாம் இருக்காது. அழகான நாயகி இருப்பார். ஆனால் கிளாமராகவெல்லாம் காட்டமாட்டார். பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால் திணிக்கமாட்டார். செண்டிமெண்ட் இருக்கும். உருக்கம் இருக்கும். உணர்வுபூர்வமான காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார். பிரபுவுக்கு தக்கபடி படம் பண்ணுவார். சத்யராஜின் ப்ளஸ்ஸையெல்லாம் கொண்டு வந்துவிடுவார். கார்த்திக்கின் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவார்.

ரஜினியை இன்னும் மாஸ் ஹீரோவாக்குவார். க்ளாஸ் நடிகராகவும் ஆக்குவார். கவுண்டமணியைக் கொண்டு அதகளம் பண்ணுவார். செந்திலைக் கொண்டு சிரிக்கவைத்து டென்ஷனை விரட்டுவார். வடிவேலுவின் தனித்தன்மையை அறிந்து, அவருக்கு ஒரு கோதாவை உருவாக்கிக் கொடுப்பார்.

சுஜாதா, மனோரமா, ராதாரவி, விஜயகுமார், பொன்னம்பலம் என பலரையும் சரியான கேரக்டர் கொடுத்து, அவர்களுக்கு உரிய வகையில் கேரக்டர்களை உருவாக்கித் தந்திருப்பார். குஷ்புவை மிகச்சிறந்த நடிகையாகவும் நம்மைப் பார்க்கச் செய்து ஏற்கவைத்தார். சுகன்யாவின் ‘வால்டர் வெற்றிவேல்’ கேரக்டரை மறக்கவே முடியாது.
நம்மூர் நடிகர்கள் மட்டுமின்றி, ஆந்திரத்திலும் கன்னடத்திலும் வெற்றிக் கொடி பறக்கவிட்டவர் பி.வாசு. அங்கே உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஆளுக்கு நான்கைந்து ஹிட்டுகளை, மெகா ஹிட்டுகளை வழங்கியவர்.

மலையாளத்தில் வந்த ‘மணிச்சித்திரத்தாழ்’, இவரின் கைவண்ணத்தில் ‘ஆப்தமித்ரா’வாக கன்னடத்தில் வந்த போது வேறொரு முகம் காட்டியது. அதுவே ‘சந்திரமுகி’யாக தமிழில் இன்னொரு விஸ்வரூபம் எடுத்தது. அதுதான் பி.வாசுவின் மேஜிக்.

‘பி.வாசு படமா? குடும்பமா போய்ப் பாக்கலாம்’ என்று பெயர் வாங்கினார். எண்பதுகளிலும் தொந்நூறுகளிலும் அப்படித்தான் சம்பாதித்திருந்தார். இன்னமும் அந்தப் பெயரை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

ஒரு டம்ளர் காபிக்கு எவ்வளவு சர்க்கரை எனும் அளவு பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இரண்டரை மணி நேர சினிமாவில், எங்கிருந்து கதையைத் தொடங்கவேண்டும், எங்கே அம்மா செண்டிமெண்ட் இருக்கவேண்டும். தங்கச்சி செண்டிமெண்டுக்கு முக்கியத்துவத்தை எப்போது வழங்கவேண்டும், காமெடியை எந்த இடத்தில், எவ்வளவு கலக்க வேண்டும், கொடுக்கவேண்டும் என்பதில் ‘சந்திரமுகி’யாகவே மாறிவிடுவார்... சிற்பியாகவே மாறி படத்தைச் செதுக்கிக் கொடுத்திடுவார் பி.வாசு.

’பாத்துட்டான்... பாத்துட்டான்’ என்று பெண் வேடத்தில் கவுண்டமணி அலறுவதையும் ‘மாப்பு... வச்சுட்டான்யா ஆப்பு’ என்கிற வடிவேலு கதறுவதையும் மனோரமாவின் டை அடித்த ஸ்டைல் லுக்கைக் கண்டு, சத்யராஜ் மிரளுவதையும் தியேட்டர் க்யூவுக்குள் வியர்க்க விறுவிறுக்கப் புகுந்து பாய்ந்து, கூலிங்கிளாஸின் ஒரு கண்ணாடியுடன் ஸ்டேஜ் ஏறி ஸ்டைல் காட்டும் ரஜினியையும் விஜயசாந்தியின் ஆணவத்தையும் அலட்சியத்தையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா என்ன?

அப்பா பீதாம்பரம், நடிகர் நடிகைகளின் முகங்களுக்கு மேக்கப் போட்டவர் என்றால் மகன் வாசுவும் மேக்கப்மேன் தான். இவர், கதைகளுக்கு மேக்கப் போடுவதில் சூரர். பாக்யராஜின் திரைக்கதை ஜாலங்களுக்கு அடுத்து எப்பேர்ப்பட்ட கதையைக் கூட, திரைக்கதை, வசனம், காட்சி அமைப்பு, காமெடி, அழுகை, ஆக்‌ஷன் என்று ஒவ்வொன்றாய் சேர்த்து இரண்டரை மணி நேர சினிமாவாக நம்மைப் பார்க்க வைத்து விடுகிற கதைகளின் மேக்கப் மேன்... பி.வாசு.

இயக்குநர் பி.வாசுவின் பிறந்தநாள் (செப்டம்பர் 15ம் தேதி) இன்று.

எண்பதுகளில் தனக்கென தனியிடம் பிடித்தவர்... இன்னமும் அந்த இடத்தை வேறு எவரும் நிரப்பமுடியாத அளவுக்கு உயர்ந்தவர்... இயக்குநர் பி.வாசுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE