போதை மருந்து வழக்கு; நீதிமன்றக் காவலில் நான்கு குற்றவாளிகள்: சஞ்சனா கல்ராணியிடம் தொடர் விசாரணை

By ஐஏஎன்எஸ்

போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ராகினி உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான மற்றொரு நடிகை சஞ்சனா கல்ராணியைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராகினியும் செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவரும், சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுலும், போதை மருந்து விற்பனை செய்யும் லூ பெப்பர் சாம்பா என்பவரும் 11 நாட்களுக்கு முன்பு மத்திய குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதில் சஞ்சனா கல்ராணியும், பெரும் பணக்காரர்களுக்கான பார்ட்டிகளைத் திட்டமிடும் விஏன் கண்ணாவும் தொடர்ந்து காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, தலைமறைவான இன்னும் பலரைக் காவல்துறை தேடி வருகிறது.

கன்னடத் திரைத்துறையில் போதைப்பொருள் பயன்பாடு பற்றிப் பேசி சர்ச்சையை ஆரம்பித்தவர் தயாரிப்பாளரும் இயக்குநருமான இந்திரஜித் லங்கேஷ். மத்திய குற்றப் பிரிவு காவல்துறை இவரிடம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் 15 நபர்களின் பெயர்களை லங்கேஷ் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

லங்கேஷ் சொன்னதை வைத்து ரவி என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். ரவியின் வாக்குமூலத்தை வைத்து ராகினியைக் கைது செய்தனர். நயாஸ் என்பவரை விசாரித்தபோது சஞ்சனா கல்ராணியின் பெயர் வெளியே வந்தது. தொடர்ந்து சஞ்சனாவும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். நடிகைகள் இருவருக்கும் போதை மருந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடிகை சஞ்சனா கல்ராணியைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த போதை மருந்து விற்பனை கும்பலில் ஹவாலா மோசடியும் சம்பந்தப்பட்டிருக்குமா என்று அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து, நடிகை கங்கணா ரணாவத், பாலிவுட்டில் போதை மருந்து கலாச்சாரம் குறித்து குற்றம் சாட்டியிருந்தார். சுஷாந்தின் மரணத்திலும் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பினார். இதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE