வல்லமை பொருந்திய எதிரி: ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வில்லன் கதாபாத்திரம் குறித்து ரமி மாலேக் 

வியக்கவைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. அந்த வரிசையில் 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக ‘நோ டைம் டு டை’ விரைவில் வெளியாகவுள்ளது.

கடைசியாக வெளியான நான்கு படங்களில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடித்தார். அடுத்ததாக வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை', ஜேம்ஸ் பாண்டாக க்ரெய்க் நடிக்கும் கடைசிப் படமாகும். இப்படத்தை கேரி ஜோஜி இயக்கியுள்ளார்.

ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடிக்கும் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் நேற்று ஜேம்ஸ் பாண்ட் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் படத்தின் வில்லன் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘சஃபின்’ என்ற கதாபாத்திரத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ரமி மாலெக் நடித்துள்ளார்.

தனது கதாபாத்திரம் குறித்து ரமி மாலெக் அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது:

''சஃபின் கதாபாத்திரத்திடமிருந்து நான் விரும்பியதெல்லாம் அவனை அமைதியற்ற நிலையில் வைத்திருப்பதைத்தான். அந்தக் கதாபாத்திரம் தன்னை ஒரு ஹீரோவாக நினைத்துக் கொள்கிறது. சஃபின் ஒரு வல்லமை பொருந்திய எதிரி. ஜேம்ஸ் பாண்டும் அதற்கு ஏற்றாற்போல தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 25-ம் தேதி வெளியாகவிருந்த 'நோ டைம் டு டை' படம் தற்போது நவம்பர் 20-ம் தேதி அமெரிக்கா உட்பட உலகின் மற்ற நாடுகளிலும் வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE