பாலிவுட்டுக்கு எதிரான அவதூறுகளை நிறுத்த வேண்டும்: மாநிலங்களவையில் ஜெயா பச்சன் பேச்சு

By ஐஏஎன்எஸ்

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து வெடித்திருக்கும் சர்ச்சையும், அடுத்தடுத்து சுமத்தப்பட்டு வரும் பழிகளும் குற்றச்சாட்டுகளும் பாலிவுட்டை உலுக்கியுள்ளன. நடிகையும், சமாஜ்வாதி கட்சி உறுப்பினரும், நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் இந்த சர்ச்சை குறித்துப் பேசியுள்ளார்.

பாலிவுட் துறைக்கு எதிராக அவதூறு செய்ய, தொடர்ந்து நடந்து வரும் முயற்சிகள் குறித்து மாநிலங்களவையில் ஜெயா பச்சன் இன்று பேசினார். திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக முடிவில்லாமல் தொடரும் வசவுகளுக்குத் தடை விதித்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஜெயா பச்சன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

"துறையின் மூலம் புகழும் பணமும் பெற்றவர்கள் துறையை அவதூறாகப் பேசி வருகின்றனர். ஒரு சிலர் செய்த தவறினால் ஒட்டுமொத்தத் துறையையும் அசிங்கப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தத் துறையில் வெவ்வேறு நிலைகளில் பலர் வேலை செய்து வருகின்றனர். அதில் சிலர் அதிகமான தனிநபர் வருமான வரி செலுத்துபவர்கள்" என்று ஜெயா பச்சன் பேசினார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகும் கருத்துகளைக் கண்டு தான் வருத்தப்படுவதாகவும் ஜெயா பச்சன் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் 14 அன்று சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து பாலிவுட்டில் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இதில் நடிகை கங்கணா ரணாவத், வெளிப்படையாக துறையையும், இன்னும் சிலரையும் நேரடியாகத் தாக்கிப் பேசியது இந்த சர்ச்சைகளை இன்னும் தீவிரமாக்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE