போதைப் பொருள் விவகாரம்: ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கானுக்குத் தொடர்பா?

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் அல்லது கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் தனியாக வழக்குப் பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், ரியா, அவரது சகோதரர் சோவிக் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகிறது.

இந்நிலையில் போதைப் பொருள் வழக்கு விசாரணையில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், சிமோன் கம்பாட்டா ஆகியோரது பெயர்கள் அடிபடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், குறிப்பிட்ட சில பாலிவுட் பிரபலங்களுக்கு போதை வழக்கில் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் பெயர்களுடன் வெளியான செய்தியை போதைப் பொருள் தடுப்பு துணை இயக்குனர் கே.பி.எஸ். மல்ஹோத்ரா மறுத்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், சிமோன் ஆகியோருக்கு இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் தொடர்பு குறித்து என்சிபி எந்தவொரு வெளிப்படையான தகவலையும் வெளியிடவில்லை.

கடந்த சனிக்கிழமை (12.09.20) அன்று போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார், இந்த வழக்குத் தொடர்பாக ஒரு ஆட்டோ ஓட்டுநர், ஒரு பெரிய உணவக உரிமையாளர் உட்பட 6 பேரைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE