போலிச் செய்தியை மேற்கோள் காட்டிய கங்கணா - நெட்டிசன்கள் கிண்டல்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து வாரிசு அரசியலால்தான் அவர் இந்த நிலைக்கு ஆளானார் என கங்கணா ரணாவத் அதிரடியாகக் குற்றம் சாட்டினார். பல்வேறு பாலிவுட் பிரபலங்களுடன் நேரடியாகக் கருத்து மோதலில் ஈடுபட்டார். தொடர்ந்து மும்பை காவல்துறை, மகாராஷ்டிர மாநிலம், ஆளும் சிவசேனா கட்சி என அனைத்துத் தரப்பையும் கங்கணா அடுத்தடுத்து எதிர்க்க ஆரம்பித்தார்.

பாலிவுட்டில் போதை மருந்து மாஃபியா இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் கங்கணா முன்வைத்தார். சில நாட்களுக்கு முன்பு கங்கணாவின் மும்பை அலுவலகக் கட்டிடத்தின் ஒரு பகுதி, விதிமுறை மீறிக் கட்டப்பட்டதாக இடிக்கப்பட்டது இந்த சர்ச்சையை இன்னும் பெரிதாக்கியது. இதனால் வாரிசு நடிகர்கள்- கங்கணா மோதலாகத் தொடங்கிய இந்த விவகாரம் தற்போது சிவசேனா- கங்கணா மோதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் நேற்று ஃபாக்ஸி என்ற ஒரு இணையதளம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. இயற்கை பேரிடர்களின் போது மக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்க பேஸ்புக்கில் ஒரு பயன் உள்ளது. அதே போல தற்போது சிவசேனா உறுப்பினர்களிடமிருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதை குறிக்கவும் ஒரு பயனை அறிமுகப்படுத்த பேஸ்புக் திட்டமிட்டிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியை மேற்கோள் காட்டி பேஸ்புக் நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் கங்கணா. இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

நன்றி பேஸ்புக், ஒரு குடியரசு நாட்டில் கருத்து சுதந்திரம் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டும். கரோனா வைரஸைப் போல சிவசேனா கட்சியினரிடமிருந்தும் மக்கள் பாதுகாக்கப் பட வேண்டும். உங்கள் பரிசீலனைக்கு நன்றி.

இவ்வாறு கங்கணா அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஃபாக்ஸி இணையதளம் நாட்டு நடப்புகளை கிண்டலடித்து போலியாக செய்திகளை வெளியிடும் ஒரு தளம் என்றும், அதில் வந்த ஒரு செய்தியை கங்கணா மேற்கோள் காட்டுகிறார் என்றும் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கங்கணா அது போலிச் செய்தி என்று தெரிந்தேதான் கிண்டலுக்காக அப்படி பதிவிட்டுள்ளார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE