அப்பாவின் உடல்நிலை, நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம்: எஸ்பிபி சரண் தகவல்

அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நுரையீரல் செயல்பாடு முன்னேறியுள்ளது என்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது. மருத்துவமனை அறிக்கை தவிர்த்து அவருடைய மகன் எஸ்பிபி சரணும் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்து ட்வீட்களும், வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று (செப்டம்பர் 14) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

"அனைவருக்கும் வணக்கம். கடைசியாக 10 ஆம் தேதி உங்களிடம் பேசியிருந்தேன். இன்று தேதி 14. இந்த நான்கு நாட்களில் அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நுரையீரல் செயல்பாடு முன்னேறியுள்ளது. குணமாகி வருவது எக்ஸ்ரேவில் நன்றாகத் தெரிகிறது.

பிசியோதெரபியும் நடந்து வருகிறது. அப்பா அதில் சுறுசுறுப்புடன் பங்கேற்று வருகிறார். மருத்துவர்கள் அப்பாவை உட்கார வைத்தார்கள். அப்பாவால் தொடர்ந்து 15-20 நிமிடங்களுக்கு உட்கார முடிகிறது. வாய் வழியாகச் சாப்பிட வைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

அனைத்து அறிகுறிகளும் நன்றாக உள்ளன. அப்பா சீராக இருக்கிறார். முன்னேற்றம் தொடர்கிறது. உங்கள் அன்பு, அக்கறை மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்கள் அனைவரையும் என் பிரார்த்தனைகளில் வைத்திருக்கிறேன். என் குடும்பமும் உங்கள் பிரார்த்தனைகளில் இருக்கும் என நம்புகிறேன்."

இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE