ரஜினியின்  ஸ்டைல் இல்லை; வேகமில்லை; ஆக்‌ஷனில்லை; சவால் இல்லை;  ‘ஆறிலிருந்து அறுபதுவரை’உள்ளவர்களுக்கு பிடித்த ‘ஆறிலிருந்து அறுபதுவரை’!  - படம் வெளியாகி 41 ஆண்டுகள்

By வி. ராம்ஜி

’’இனிமேல் நாம ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கவேணாம். தனித்தனியா நடிப்போம். அப்பதான் சம்பளம் உயரும். மார்க்கெட் உயரும்’’ என்று அந்த இரண்டு நடிகர்கள் பேசிக்கொண்டார்கள். அவர்கள் நடிப்பதாக சம்மதித்து, அட்வான்ஸ் வாங்கிய படக்கம்பெனியின் தயாரிப்பாளரை அழைத்து, எடுத்திருக்கும் முடிவைத் தெரிவித்தார்கள். ‘இதனால நீங்க கவலைப்படாதீங்க செட்டியார். நான் ஒரு படம் பண்ணித்தரேன். அவர் ஒரு படம் பண்ணித்தருவார். கொடுத்த தேதில ரெண்டு படம் எடுத்துருங்க’ என்றார்கள். தயாரிப்பாளரும் சம்மதித்தார். அதன்படியே இரண்டு படங்கள் எடுத்தார். ஒருபடத்தில் ஹீரோ இவர்; இன்னொரு படத்தில் அவர் ஹீரோ. அடுத்தடுத்த மாதங்களில் இரண்டு படங்களும் வெளியாகின. வெற்றி பெற்றன. அந்தத் தயாரிப்பாளர்... பஞ்சு அருணாசலம். அந்த நடிகர்கள்... கமல் - ரஜினி. கமல் நடித்துக் கொடுத்த படம் ‘கல்யாண ராமன்’. ரஜினி நடித்துக் கொடுத்த படம் ‘ஆறிலிருந்து அறுபது வரை’.

‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ‘கல்யாண ராமன்’ படத்தை அதுவரை எஸ்.பி.எம்.மிடம் உதவி இயக்குநராக இருந்த ஜி.என்.ரங்கராஜன் இயக்கினார். இதில் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ரஜினியின் திரைவாழ்வில், மிக முக்கியமான படமாக அமைந்தது. ஸ்டைல் இல்லாத, ஆக்‌ஷன் இல்லாத, சாத்வீகமான, அமைதியான, இயல்பான ரஜினியை இதில் பார்க்கலாம்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட குடும்பம் அது. இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. இந்த மூன்று பேரையும் படிக்க வைத்து ஆளாக்கும் பொறுப்பும் கடமையும் மூத்தவனுக்கு வருகிறது. தன் படிப்பு, தன் விருப்பு, தன் ஆசை, தன் லட்சியம் எல்லாவற்றையும் தூக்கியெறிகிறான். அவனுடைய விருப்பு, ஆசை, லட்சியம் எல்லாமே தம்பிகளையும் தங்கையையும் கரை சேர்க்கவேண்டும் என்பதுதான்.

அப்பா வேலை பார்த்த கம்பெனியில் வேலைக்குச் சேருகிறான். உண்மையாய் உழைக்கிறான். உண்மையாய், விசுவாசமாய் இருக்கிறான். சகோதரர்களை வளர்க்கிறான். அவனும் வளர்கிறான். அப்படி வளரும் போது கூடவே காதலும் வளர்கிறது. ஆனால் இவனின் வறுமை, சுமை ஆகியவற்றால் காதலை தூக்கியெறிகிறான். முதலாளி நல்ல மனிதர். இவன் கேட்கும்போதெல்லாம் பணம் தருகிறார். கடனாகவும் தருகிறார். இனாமாகவும் தருகிறார்.

தங்கையின் திருமணத்துக்கான முயற்சியில் இறங்குகிறான். ஐயாயிரம் வரதட்சணை கிடைக்கும் என்று சொல்ல, தான் திருமணம் செய்துகொள்கிறான். பிறகு அது பொய் என்று தெரிந்ததும் பொங்குகிறான். பின்னர், தங்கைக்குத் திருமணம் நடத்திவைக்கிறான்.

ஒரு தம்பி படித்து முடிக்க, அவருக்கு வெளிமாநிலத்தில் மிகப்பெரிய சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. அண்ணனை உதாசீனப்படுத்திவிட்டு செல்கிறான். இன்னொரு தம்பியும் ‘அண்ணன் வேலை பாத்துக் கொடுக்கறேன்னு கூப்பிட்டிருக்கார்’என்று சொல்லிக் கிளம்புகிறான். உடன்பிறப்புகள் ஆளுக்கொரு திசையாகச் செல்ல, மனைவியுடனும் பிறந்த குழந்தையுடனும் கூடவே வந்துகொண்டிருக்கும் கடனுடனும் வாழ்கிறான்.

முதலாளிக்கு கைகால் விளங்காமல் போகிறது. அவரின் மகன் தொழிற்சாலையை ஏற்று நிர்வகிக்கிறான். ‘இஷ்டத்துக்கு கடன் வாங்கியிருக்கே. கடனை அடைச்சிட்டு வேலைல திரும்பவும் சேர்ந்துக்கோ’ என்று சொல்லி, வேலையை விட்டு நிறுத்திவிட செய்வதறியாது தவிக்கிறான். அவனுக்கு இருக்கிற ஒரே ஆறுதல்... இளைப்பாறல்... அவனுடைய நண்பன். அவரின் உதவியால், பிரஸ்ஸில் வேலைக்குச் சேருகிறான். கதைகள் அச்சுக்கோர்த்துக் கொடுக்கப்பட, அதை பிழை திருத்தும் பணி.
ஆனாலும் வறுமை மட்டும் நிரந்தரமாகவே இருக்க, மனைவியும் வேலைக்குப் போகிறேன் என்கிறாள். சரியென்று அரை மனதுடன் சொல்கிறான். ஒருநாள்... வேலை செய்யுமிடத்தில் தீவிபத்து. இதில் சிக்கிக்கொண்டு மனைவி இறந்துவிடுகிறாள். குழந்தைகளை நண்பனின் உதவியுடன் வளர்க்கிறான்.

இதேகாலகட்டத்தில், யதார்த்தமாக ஒரு கதை எழுதுகிறான். நண்பன் பார்த்துவிட்டு பிரசுரிக்கிறான். இன்னும் இன்னும் நிறைய எழுதச் சொல்லுகிறான். பெரிய எழுத்தாளராகிறான். வறுமையெல்லாம் ஓடியே போனது. செல்வம், புகழ், கெளரவம், மரியாதை, வீடு, வாசல் என சகலமும் கிடைக்கிறது. பிரிந்து உதாசீனப்படுத்திய தங்கையும் தம்பிகளும் வருகிறார்கள். குழந்தைகள் வளர்ந்து, வெளிநாட்டில் படிக்கச் செல்கிறார்கள். ’ஆறிலிருந்து அறுபது வரை’யிலான வாழ்க்கையில் அவன் பட்ட கஷ்டங்களும் நஷ்டங்களும், துயரங்களும் சோகங்களும், வெற்றிகளும் பதக்கங்களும்தான் ‘ஆறிலிருந்து அறுபது வரை’.

ரஜினி, படாபட் ஜெயலட்சுமி, சோ, சங்கீதா, சக்கரவர்த்தி, ஜெயா முதலானோர் நடித்திருந்தார்கள். சோகம், குடும்பச் சுமை, றெக்கை முளைத்ததும் பறந்துவிடுகிற உறவு, வறுமை, வெறுமை, இயலாமை, கோபம், ஆத்திரம், அழுகை என படம் முழுக்க நடிப்பில் அசத்தியிருப்பார் ரஜினி.

பரபரவென வேகத்துடன் ரஜினி நடக்கவில்லை இதில். பறந்து பறந்து சண்டையெல்லாம் போடவில்லை. எதிரியைப் பார்த்து தொடைதட்டி சவாலெல்லாம் விடவில்லை. மளமளவென ஒரே பாடலில் அல்லது இடைவேளைக்குப் பிறகு வளர்ந்துவிடவில்லை; உயர்ந்துவிடவில்லை. இயல்பாக, அமைதியாக, மென்மையாக, அத்தனை உணர்ச்சிகளையும் வெளிக்காட்டி அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருப்பார் ரஜினி.

‘’முதலில் ரஜினிக்கு இந்தப் படத்தின் மீது பெரிய சந்தேகம். ‘சரியா வருமா சரியா வருமா’என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ‘ஓடாது போல’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ‘எடுப்போம். ஓடும்னு நம்பிக்கை இருக்கு. எடுத்து முடிச்சதும் போட்டுப் பாப்போம். நல்லா வராதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா, அப்படியே ஓரமா வைச்சிட்டு, வேற படம் எடுப்போம்’ என்றார் தயாரிப்பாளரும் கதை வசனகர்த்தாவுமான பஞ்சு அருணாசலம். இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும் நம்பிக்கை சொன்னார். அரைகுறை மனதுடன் நடித்தார் ரஜினி. படம் எடுத்து, போட்டுக்காட்டப்பட்டது. ‘நைஸ்’ என்று நம்பிக்கை மிளிரச் சிரித்தார் ரஜினி. இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

‘இவ்ளோ படிச்ச நான் உனக்கு கீழே, உன்னை விட சம்பளம் கம்மியா வாங்கினா நல்லாருக்காதுண்ணே. என் நண்பன் வேலை பாத்து வைச்சிருக்கான். அதுல சேருறேன்’ என்று சொல்லும் தம்பி..., ’கஷ்டப்படுறேன்னு எனக்கு ஒரு லெட்டர் எழுதக்கூடாதா?’ என்று செக் தர, அதைத் திருப்பிக் கொடுக்கும் இடம்...., கஷ்டத்தோடு கஷ்டமாக தங்கைக்கு பார்த்துப் பார்த்து வாங்கும் நகையையும் புடவையையும் அலட்சியமாகப் பார்க்கிற தங்கை..., பிறகு பணக்கார வீட்டுக்கு மருமகளாகிவிட, அங்கே வரும் அண்ணனை உதாசீனப்படுத்தும் தங்கையைக் கண்டு வெதும்பி வெளியேறும் இடம்..., தன் பெயரில் பாலிஸி எடுக்கும் மனைவியை நக்கலாகவும் கிண்டலாகவும் பேசுகிற காட்சி..., வழியில் யாரோ ஒரு பெண்ணின் தாலிச்செயினை பறித்தவர்களிடம் சண்டையிட்டு, தாலியை வாங்கிக் கொடுக்கும் போது, ‘புள்ளகுட்டிங்களோட நல்லாருக்கணும்’ என்று சொல்லும் போது நெகிழ்ச்சி, தீ விபத்தில் மனைவி இறந்துவிட, ‘புள்ளகுட்டிங்களோட நல்லாருக்கணும்னுதான் சொன்னா. பொண்டாட்டி புள்ளைங்களோட நல்லாருக்கணும்னு சொல்லலையே...’ என்று கதறும் இடம்..., மனைவி செத்து, அவள் போட்ட பாலிஸியில் கிடைத்திருக்கும் வாழ்க்கை என்று சொல்லி வெறுமையாய் சிரிக்கும் தருணம்.. என்று படம் முழுக்க ரஜினியின் அட்டகாசமான நடிப்பைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

மனைவியாக படாபட் ஜெயலட்சுமியும் பிரமாதப்படுத்தியிருப்பார். முதலாளி டி.கே.பகவதியும் சோவும் நல்ல நடிப்பை வழங்கியிருப்பார்கள். கதை இயல்பு. திரைக்கதை அழகிய நீரோடை. வசனங்கள், நம் குடும்பத்தில் உறவுகள் பேசுகிற யதார்த்தம். நடிப்பு இன்னும் மெருகு. தயாரித்து, கதையும் வசனமும் எழுதிய பஞ்சு அருணாசலம்தான் பாடல்களும் எழுதியிருந்தார். பாபுவின் ஒளிப்பதிவு, விட்டலின் எடிட்டிங் என தன் குழுவினருடன் வழக்கம் போல் அசத்தினார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.
இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் அருமை. ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ பாடல் இன்று வரை சூப்பர் ஹிட்டு. ‘வாழ்க்கையே வேஷம்’ பாடலும் அற்புதம். படம் முழுக்க வரும் பின்னணி இசையிலும் கவனம் செலுத்தி பிரமிக்க வைத்திருப்பார் இளையராஜா.

1979ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி வெளியானது ‘ஆறிலிருந்து அறுபது வரை’. 77ம் ஆண்டு ‘புவனா ஒரு கேள்விக்குறி’ வந்தது. 78ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ வந்தது. 79ம் ஆண்டு ‘ஆறிலிருந்து அறுபது வரை’ வந்தது. 82ம் ஆண்டு ‘எங்கேயோ கேட்ட குரல்’ வந்தது. இந்தப் படங்களெல்லாம் ரஜினி எனும் நடிகனின் அற்புதமான, யதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டின. இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

முழுக்க முழுக்க இயக்குநர்களிடம் தன்னை ஒப்படைத்து ரஜினி செய்த படங்களில் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ தனித்துவம் மிக்க படமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது... ரசிக மனங்களுக்குள்!

படம் வெளியாகி 41 ஆண்டுகளாகின்றன. ‘ஆறிலிருந்து அறுபதுவரை’யுள்ள எல்லோருக்கும் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ பிடிக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்