பாலிவுட்டுக்கு ஒரு அழகான பக்கம் உள்ளது: அதிதி ராவ் 

By ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் அல்லது கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் தனியாக வழக்குப் பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், ரியா, அவரது சகோதரர் சோவிக் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகிறது.

இந்நிலையில் பாலிவுட்டில் நிலவும் இந்த சர்ச்சைகள் குறித்து நடிகை அதிதி ராவ் ஹைதரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘‘ஒருநாள் இவை அனைத்தும் சரி ஆகும் என்று நம்புகிறேன். எந்தத் துறையிலும் தவறுகள் இல்லாமல் இல்லை. நாங்களும் மனிதர்கள்தான். எங்களிடமும் தவறுகளும் தோல்விகளும் உள்ளன. இதுபோன்ற விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். ஆனால், பாலிவுட்டுக்கும் ஒரு அழகான பக்கம் உண்டு.

இங்கே நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நேர்மையாக இருக்கிறோம். யார் என்ன சொன்னாலும் இங்கே ஒருவருக்கு உதவி செய்கிறோம். சிலர் வெளியாட்கள், உள்ளே இருப்பவர்கள் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறேன். எனக்கு ஒரு பிரச்சினையென்றால் உதவி செய்யக் கூடிய ஏராளமானவர்கள் இங்கே இருக்கிறார்கள். நான் வெளியாள் என்று சொல்லப்பட்டாலும் எனக்கு அவர்கள் உதவுகின்றனர்.

குடும்பப் பின்னணி இல்லாதவர்களுக்குச் சில காலம் கடினமானதாக இருப்பது உண்மைதான். ஆனால், எந்தத் துறையில்தான் அப்படி இல்லை? ஏன் சினிமாவை மட்டும் தனியாகப் பிரிக்க வேண்டும்?’’

இவ்வாறு அதிதி ராவ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE