கனத்த இதயத்துடன் மணாலி செல்கிறேன்; மும்பையைப் பற்றிய ஒப்பீடு சரியானதே: கங்கணா ரணாவத்

By ஐஏஎன்எஸ்

நடிகை கங்கணா ரணாவத் தனது சொந்த ஊரான மணாலிக்குத் திரும்பியுள்ளார். கனத்த இதயத்துடன் தான் மும்பையை விட்டுச் செல்வதாக அவர் கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து வாரிசு அரசியலால்தான் அவர் இந்த நிலைக்கு ஆளானார் என கங்கணா ரணாவத் அதிரடியாகக் குற்றம் சாட்டினார். பல்வேறு பாலிவுட் பிரபலங்களுடன் நேரடியாகக் கருத்து மோதலில் ஈடுபட்டார். தொடர்ந்து மும்பை காவல்துறை, மகாராஷ்டிர மாநிலம், ஆளும் சிவசேனா கட்சி என அனைத்துத் தரப்பையும் கங்கணா அடுத்தடுத்து எதிர்க்க ஆரம்பித்தார்.

பாலிவுட்டில் போதை மருந்து மாஃபியா இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் கங்கணா முன்வைத்தார். சில நாட்களுக்கு முன்பு கங்கணாவின் மும்பை அலுவலகக் கட்டிடத்தின் ஒரு பகுதி, விதிமுறை மீறிக் கட்டப்பட்டதாக இடிக்கப்பட்டது இந்த சர்ச்சையை இன்னும் பெரிதாக்கியது. இதனால் வாரிசு நடிகர்கள்- கங்கணா மோதலாகத் தொடங்கிய இந்த விவகாரம் தற்போது சிவசேனா- கங்கணா மோதலாக மாறியுள்ளது. கட்டிட இடிப்புப் பிரச்சினைக்காக மும்பை வந்திருந்த கங்கணா, திங்கட்கிழமை அன்று மணாலிக்குத் திரும்பிச் சென்றுள்ளார்.

"கனத்த இதயத்தோடு மும்பையை விட்டுச் செல்கிறேன். இவ்வளவு நாட்கள் தொடர்ந்து என் மீது நடந்த தாக்குதல், அதில் நான் அச்சப்பட்டது, என்னை நோக்கி வீசப்பட்ட அவதூறுகள், என் அலுவலகம் மற்றும் என் வீட்டை இடிக்க நடந்த முயற்சிகள், என்னைச் சுற்றி ஆயுதத்தோடு இருந்த பாதுகாவலர்கள், எல்லாவற்றையும் பார்க்கும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்கிற எனது ஒப்பீடு மிகச் சரியானது என்றே சொல்வேன்" என்று கங்கணா ட்வீட் செய்துள்ளார்.

ஞாயிற்றுக் கிழமையன்று, கங்கணாவும் அவரது சகோதரி ரங்கோலியும் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்தித்துப் பேசினார்கள். இந்தச் சந்திப்பின்போது தனது தரப்பு நியாயத்தைப் பேசியதாகவும், நீதி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE