கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவித் தொகை: நடிகர் சோனு சூட் புதிய திட்டம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவித் தொகை தொடர்பான புதிய திட்டத்தை நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.

ஊரடங்கினால் பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோரை அவரவர் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வைத்து உதவி செய்தவர் நடிகர் சோனு சூட். தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்திய மாணவர்களையும், விமானம் ஏற்பாடு செய்து அழைத்து வந்தார். தொடர்ந்து பல்வேறு நல உதவிகளைச் செய்து வரும் சோனு சூட் தற்போது பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க புதிய திட்டத்தைத் துவக்கியுள்ளார்.

இது பற்றி ஆங்கில செய்தி ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "கடந்த சில மாதங்களாகப் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக எவ்வளவு போராடுகிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். சிலரிடம் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மொபைல் இல்லாமல், பள்ளிக்குக் கட்டணம் செலுத்தப் பணம் இல்லாமல் என இருந்தனர்.

எனவே இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களோடு சேர்ந்து, பேராசிரியர் சரோஜ் சூட் என்கிற என் அம்மாவின் பெயரில் கல்வி உதவித் தொகை தரத் திட்டமிட்டுள்ளேன். பஞ்சாபின் மோகா பகுதியில் என் அம்மா இலவசமாக கற்பித்து வந்தார். தனது சேவையை நான் தொடர வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இது சரியான நேரம் என நினைக்கிறேன்.

ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஒரே நிபந்தனை அவர்கள் நன்றாகப் படித்திருக்க வேண்டும். அவர்களின் படிப்புக்கான செலவு, தங்கும் விடுதி செலவு, உணவுச் செலவு என அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்" என்று சோனு சூட் கூறியுள்ளார்.

மருத்துவம், பொறியியல், செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், இணையப் பாதுகாப்பு, தரவு அறிவியல், ஃபேஷன், பத்திரிகைத்துறை மற்றும் வியாபாரம் சம்பந்தமான படிப்புகளுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும் என்று தெரிகிறது. scholarships@sonusood.me என்கிற மின்னஞ்சல் முகவரியில் இந்த உதவித் தொகைக்காகத் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE