கங்கணா ரணாவத் பயணம் செய்த விமானத்தில் விதிமீறிய பயணிகள்: நடவடிக்கை எடுக்கச் சொல்லி அறிவுறுத்தல்

நடிகை கங்கணா ரணாவத் பயணம் செய்த விமானத்தில், விதிமுறைகளை மதிக்காமல் நடந்து கொண்ட பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இண்டிகோ விமானச் சேவை நிறுவனத்துக்கு சிவில் ஏவியஷன் இயக்குநரகம் கூறியுள்ளது.

செப்டம்பர் 9-ம் தேதி அன்று, சண்டிகரிலிருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. இண்டிகோ தரப்பிலிருந்து இது தொடர்பாக இயக்குநரகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசியிருக்கும் இயக்குநரக அதிகாரி, "பல்வேறு பிரச்சினைகள் நடந்துள்ளன. அதில் முதன்மையானது விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தது. இது விமான விதிகள் 13-வது பிரிவை மீறிய செயலாகும். கோவிட் விதிமுறைகளை மீறியது, இன்னும் சில செயல்கள் விமானத்துக்குள் விதிமுறைகளை மதிக்காமல் நடந்து கொண்டதின் கீழ் வரும். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி விமானச் சேவை நிறுவனத்திடம் கூறியுள்ளோம்" என்றார்.

"எங்கள் விமான குழு மற்றும் கேப்டன் ஆகியோர் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றினார்கள் என்பதை மீண்டும் உறுதிபடச் சொல்லிக் கொள்கிறோம். இதில் புகைப்படம் எடுக்க வேண்டாம், சமூக விலகல், ஒட்டுமொத்த பாதுகாப்பு குறித்த அறிவிப்புகளும் அடக்கம். விமான பயணத்துக்குப் பிறகான அறிக்கையில் இந்த விஷயத்தை முறைப்படி பதிவும் செய்துள்ளோம்" என்று இண்டிகோ தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் தங்கள் பயணிகளுக்குப் பாதுகாப்பான, தொந்தரவில்லாத பயண அனுபவத்தை உறுதி செய்ய தாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE