‘சிறிய’ நடிகர்கள் என்று யாருமே கிடையாது - பூஜா பட்

சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு இந்தி திரையுலகில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. கங்கணா ரணாவத் பல்வேறு முன்னணி திரையுலக பிரபலங்கள் மீதும், வாரிசு நடிகர்கள் மீதும் குற்றம்சாட்டி வருகிறார். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல செய்தி தொலைகாட்சி ஒன்றின் தொகுப்பாளர் வாரிசு நடிகரான அர்ஜுன் கபூரை ‘சிறிய’ நடிகர் என்று குறிப்பிட்டார். அவர் பேசிய காட்சியை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வந்தனர்.

அந்த தொகுப்பாளரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இயக்குநர் ஹன்சல் மேத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த தொகுப்பாளரை கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில் ஹன்சல் மேத்தாவின் கருத்தை நடிகை பூஜா பட் ஆதரித்துள்ளார். இது குறித்து பூஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘சிறிய’ நடிகர்கள் என்று யாரும் இல்லை என்று ஹன்சல் மேத்தா கூறுவதை நான் ஆதரிக்கிறேன். சிறிய நடிகர்கள், வேலையில்லாத நடிகர், ‘பி’ மற்றும் ‘சி’ கிரேடு நடிகர்கள் என்று சிலர் பயன்படுத்துவது மற்றவர்களை சிறுமைப்படுத்தவே. ஒரு நடிகராக / கலைஞராக இருப்பதன் மகிழ்ச்சி மற்றும் சோதனை என்னவென்றால், ஒரு கட்டத்தில் நாம் வேலையிழந்துதான் ஆகவேண்டும். இதுதான் அனைத்து கலைஞர்களையும் தைரியமானவர்களாக உருவாக்குகிறது. தொடர்ந்து நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக் கொள்ளவும், தோல்வியடைந்த பிறகும் கூட சிறந்த உழைப்பை தர உதவுகிறது.

கலைஞர்கள், படைப்பாளிகள், விசுவாசிகள் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், நாம் அனைவரும் போராளிகள். நமது இதயமும், உணர்வுகளுமே நமது ஆயுதங்கள். வெற்றி என்பது தற்காலிமதான், தோல்வியே நிச்சயமானது. நாம் செய்யவேண்டியதை தொடர்ந்து செய்வோம். எல்லாருக்கும் பிடித்தமானவர்களாக இருக்கமுடியாது.

இவ்வாறு பூஜா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE