மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட 'வொண்டர் வுமன்' ரிலீஸ் - க்றிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிறது

By செய்திப்பிரிவு

டிசி காமிக்ஸின் 'வொண்டர் வுமன் 1984' திரைப்படம் வரும் க்றிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிறது.

கரோனா நெருக்கடியால் உலக அளவில் பொதுமக்கள் கூடும் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதனால் புதிதாக வெளியாகவிருந்த பல திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கின.

கரோனா தொற்று குறைந்த பிரிட்டன், கனடா, சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. க்றிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவாகி கரோனா அச்சுறுத்தலால் முடங்கிய ‘டெனெட்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதே போல மற்ற படங்களையும் ஒவ்வொன்றாக வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் முதலில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகவிருந்து பின்னர் அக்டோபர் மாதம் ஒத்திவைக்கப்பட்ட 'வொண்டர் வுமன் 1984' திரைப்படம் வரும் க்றிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர் 25) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டோபி எம்மரிச் கூறியுள்ளதாவது:

பேட்டி ஜென்கின்ஸ் ஒரு அபாரமான இயக்குனர். 'வொண்டர் வுமன் 1984' மூலம் உலகம் முழுக்க உள்ள அனைத்து வயதையும் சார்ந்த திரைப்பட விரும்பிகளும் ரசிக்கும் ஒரு அற்புதமான படைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இப்படம் குறித்து நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட நாங்கள் காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE