கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போதை பொருள் உட்கொண்டது பரிசோதனையில் அம்பலம்: விசாரணை நடத்த எடியூரப்பா உத்தரவு

By இரா.வினோத்

பெங்களூருவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ஹோட்டல் அதிபர்கள் விரேன் கண்ணா, முகமது அனூப், ராகுல் ஷெட்டி, பிரித்வி ஷெட்டி, முன்னாள் ஜனதா தள அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

மடிவாளா மகளிர் காப்பகத்தில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரிடம் காவல் ஆய்வாளர் அஞ்சுமாலா தலைமையிலான போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் பெங்களூரு புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றதை ஒப்புக்கொண்டனர். இந்த விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கன்னட திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகளின் குடும்பத்தினர், தொழிலதிபர்களின் வாரிசுகள் என 24 பேரின் பெயர்களை போலீஸாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி இருவருக்கும் கே.சி.ஜெனரல் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுடைய ரத்தம், சிறுநீர், முடி ஆகிய மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவரும் போதைப் பொருள் உட்கொண்டது தெரிய வந்தது. இந்நிலையில் காவல் முடிந்ததையடுத்து, இருவரையும் குற்றப்பிரிவு போலீஸார் பெங்களூரு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தினர். பின்னர், போலீஸாரின் கோரிக்கையை ஏற்று இருவரையும் மேலும் 3 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

எடியூரப்பா எச்சரிக்கை

முதல்வர் எடியூரப்பா கூறும்போது, ‘‘போதைப் பொருள் விவகாரத்தில் கர்நாடக அரசு எவ்வித பாராபட்சமும் இன்றி உரிய முறையில் விசாரித்து வருகிறது. முந்தைய அரசுகள் போதைப் பொருள் நடமாட்டத்தை கண்டு கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல்வாதிகளின் பிள்ளைகள், திரையுலகினர் என எந்த சலுகையும் காட்டப்படாது’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE