தென்னிந்திய சினிமாவின் முன்னணி படத்தொகுப்பாளர் ஆண்டனி இன்று (செப்டம்பர் 11) தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இந்தியச் சூழலில் திரைப்படங்களை ரசிப்பவர்களில் சினிமா என்னும் கலை வடிவத்துக்கு இன்றியமையாத ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்ப விஷயங்களை ரசிப்பதும் நிறைகுறைகளை அலசுவதும் மிக அரிதானதே.
ஒளிப்பதிவாவது கண்களுக்கு நேரடியாகத் தெரியும். பார்வையாளரால் நேரடியாக உணர முடியும். படத்தொகுப்பானது மிக நுட்பமானது. ஒரு சினிமா எப்படி உருவாகிறது காட்சி என்றால் என்ன, ஷாட் என்றால் என்ன என்பதைப்பற்றியெல்லாம் குறைந்தபட்ச அறிதல் இருப்பவர்களால் மட்டுமே ஒரு படத்தின் படத்தொகுப்புப் பணியை உள்வாங்க முடியும்.
ஆனால் அண்மைக் காலங்களில் தொழில்நுட்ப வசதிகள் அதிகரிப்பு, சர்வதேச சினிமாக்களைக் காண்பதற்கான வாய்ப்புகள் பெருக்கம், சினிமா தொழில்நுட்பம் பற்றிய கட்டுரைகள் நூல்களாகவும் இணையத்திலும் ஏராளமாகக் கிடைப்பது எனப் படத்தொகுப்பு போன்ற விஷயங்கள் குறித்த பார்வையாளர்களின் கவனம் அதிகரித்திருக்கிறது.
இப்படி ஒரு சூழலில் வெற்றிகரமான படத்தொகுப்பாளராகவும் திரைத் துறையில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஆளுமைகளால் அதிகம் நாடப்படும் கலைஞராகவும் விளங்குவது ஆண்டனியின் தனிச்சிறப்பான சாதனை. படத்தொகுப்பில் பல புதிய தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டதோடு தன்னுடைய கற்பனை வளத்தால் புதுமையான காட்சி அனுபவத்தைக் கொடுப்பதில் கைதேர்ந்தவர் ஆண்டனி. இன்று அவர் அடைந்திருக்கும் முதல் நிலைக்கு இவைதான் காரணம். நவீனக் காலச் சிந்தனைகள், இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப யுகத்தின் தேவைகள். சாத்தியங்கள் ஆகியவற்றை உள்வாங்கி புதிய உத்திகளைப் பயன்படுத்தி வெற்றிபெற்றிருக்கும் ஆண்டனியை படத்தொகுப்பின் நவீன முகம் என்று சொல்லலாம்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இலக்கியம் பயின்ற ஆண்டனி அதன் பிறகு அனிமேஷன். படத்தொகுப்பு ஆகியவற்றை முறையாகக் கற்றார். 1990-களில் விளம்பரப் படங்கள், ஆவணப் படங்களுக்குப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிவந்தார். குறிப்பாக ராஜீவ் மேனனின் விளம்பரப் படங்கள் பலவற்றில் பணியாற்றினார். அதே நேரம் அவ்வப்போது திரைப்படங்களில் பாடல்களை மட்டும் படத்தொகுப்பு செய்து தரும் பணியிலும் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கெளதம் வாசுதேவ் மேனன், 'காக்க காக்க' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக 'என்னைக் கொஞ்சம் மாற்றி' பாடலை ஆண்டனியின் படத்தொகுப்பில் வெளியிட்டார். அந்தப் பாடலுக்கான படத்தொகுப்பு தமிழ் சினிமாவில் பாடல்களின் படத்தொகுப்புக்கு புதிய இலக்கணம் வகுத்தது. காதலை வெளிப்படுத்தாத நிலையில் நாயகனும் நாயகியும் ஒரு ஜீப்பில் பயணிப்பதைப் பிரதானமாகக் கொண்ட அந்தப் பாடலை புதுமையான கோணங்களிலான ஷாட்கள், வேகமான நகர்வுகள் ஆகியவற்றால் தொகுத்து சிறப்பான காட்சி அனுபவமாக்கியிருப்பார்.
இந்தப் பாடலுக்கான படத்தொகுப்பில் பெரிதும் கவரப்பட கெளதம் 'காக்க காக்க' படத்துக்கே ஆண்டனியை படத்தொகுப்பாளர் ஆக்கினார். இதுவே தமிழ் சினிமாவில் ஆண்டனியின் முதல் படம். தொழில்நுட்ப அம்சங்களின் சிறப்புக்காகவும் பெரிதும் பாராட்டப்பட்ட படம் இது. முதல் படத்திலேயே ஆண்டனியின் படத்தொகுப்பு தமிழ் சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
அதன் பிறகு தமிழ் சினிமாவின் மிகவும் நாடப்படும் படத்தொகுப்பாளராகிவிட்டார் ஆண்டனி. எஸ்.ஜே.சூர்யாவின் 'நியூ', சிலம்பரசனின் 'மன்மதன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் அவருடைய பணி பெரிதும் பேசப்பட்டது. '4 தி பீப்புள்' என்கிற மலையாளத் திரைப்படத்திற்காகச் சிறந்த படத்தொகுப்பாளருக்கான கேரள அரசின் விருதை வென்றார். பல முன்னணி இயக்குநர்கள். நட்சத்திர நடிகர்களின் படங்களில் பணியாற்றினார். 'காக்க காக்க' தொடங்கி 'அச்சம் என்பது மடமையடா' வரை கெளதம் படங்களின் படத்தொகுப்பாளர் அவர் தான். 'கஜினி' தொடங்கி ஏ.ஆர்.முருகதாஸின் பல படங்களுக்கு அவர்தான் படத்தொகுப்பாளர். கே.வி. ஆனந்த். லிங்குசாமி, விஜய் எனப் பல முன்னணி இயக்குநர்களுக்குப் படத்தொகுப்புக்கு அவரையே நாடிச் செல்கிறார்கள். 'சிவாஜி' தொடங்கி '2.0' வரை நட்சத்திர இயக்குநர் ஷங்கரின் படங்களுக்கும் ஆண்டனிதான் படத்தொகுப்பாளர். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம். தெலுங்கு, கன்னடம் மொழிப் படங்களிலும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.
பாடல்கள், படங்களின் ட்ரைலர்களில் ஃபாஸ்ட் கட் உத்தியை அறிமுகப்படுத்தியவர் ஆண்டனிதான். இப்படி அவர் பயன்படுத்திய பல புதிய உத்திகள் இன்று பலரால் பின்பற்றப்படும் ட்ரெண்ட் ஆகிவிட்டன. காட்சிகளின் உணர்வை ரசிகர்கள் உள்வாங்கச் செய்வதிலும் படத்தொகுப்பாளராக பல புதிய உத்திகளை தன் கற்பனை வளத்தின் துணை கொண்டு கையாண்டிருக்கிறார் ஆண்டனி. உதாரணமாக 'மாற்றான்' படத்தில் தந்தையின் மோசடிகளை தெரிந்துகொண்ட மகன் சாப்பாட்டுத் தட்டை கீழே போடும் போது தரையில் அந்தத் தட்டு அப்படியே சுழன்று அடங்குவதைக் காண்பித்திருப்பார். நாயகனின் கோப உணர்ச்சி அந்தத் தட்டு சுழன்றுவிட்டு அடங்குவதைப் போல் அடங்குவதாகப் பார்வையாளர்களுக்குப் புரியவைத்திருப்பார்.
படத்தொகுப்பாளராக வெற்றிகரமாக இயங்கிவரும் ஆண்டனி இயக்குநராகவும் பரிணமித்திருக்கிறார். 2008-ல் 'ஜகதளப் பிரதாபன்' என்னும் நகைச்சுவைப் படத்தை இயக்க ஆயத்தமானார். ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு மலையாளத்தில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட 'ஷட்டர்' படத்தின் தமிழ் மறு ஆக்கத்தை 'ஒரு நாள் இரவில்' என்ற தலைப்பில் இயக்கினார். அந்தப் படத்தின் தமிழ் வடிவமும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. ஒரு படத்தொகுப்பாளராகப் பல புதுமைகளை நிகழ்த்தி வெற்றிபெற்றிருக்கும் ஆண்டனி தன் கலைப் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் விருதுகளைக் குவிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago