தமிழ் சினிமாவில் கடந்த 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி இன்று (செப்டம்பர் 10) தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
நடனமும் நடிப்பும் கற்றவர்
திரைப்படப் படத்தொகுப்பாளரும் தயாரிப்பாளருமான மோகனின் இளைய மகனாக 1980-ம் ஆண்டில் பிறந்தார் ரவி. முறைப்படி பரதம் கற்று 12 வயதில் அரங்கேற்றம் நிகழ்த்தியவர். சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனும் மும்பையில் உள்ள நடிப்புக் கல்வி மையத்தில் முறைப்படி நடிப்பு பயிற்சியும் பெற்றவர். ரவியின் சினிமா பயணம் 'ஆளவந்தான்' திரைப்படத்தில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவி இயக்குநராகத் தொடங்கியது. அதற்கு முன்பு தந்தை தயாரித்த இரண்டு தெலுங்குப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்..
ஜெயமடைந்த ஜெயம்
» சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில்
» கங்கணா தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளாவதை விரும்பவில்லை: தியா மிர்சா
2002-ல் வெளியாக மிகப் பெரிய வெற்றிபெற்ற 'ஜெயம்' என்கிற தெலுங்குப் படத்தை அதே தலைப்பில் தமிழில் மறு ஆக்கமாகத் தயாரித்தார் மோகன். அவருடைய மூத்த மகன் ராஜா படத்தை இயக்கினார். ரவி அந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமானார். எந்த ஆரவாரமும் இல்லாமல் வெளியான இந்த சிறு முதலீட்டுப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் அமைதியும் அன்பும் நிறைந்த கிராமத்து இளைஞனாக நடித்திருந்த ரவி தமிழ் ரசிகர்கள் மனங்களில் நுழைந்தார். அதற்குப் பிறகு ;ஜெயம்' ரவி என்று அழைக்கப்படத் தொடங்கினார்.
ஐந்தில் நான்கு வெற்றி
'ஜெயம்', 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'தில்லாலங்கடி', என மோகன் தயாரிப்பில் ராஜா இயக்கத்தில் ரவி ஐந்து படங்கள் நடித்தார். அனைத்துமே தெலுங்கில் வெற்றிபெற்ற படங்களின் மறு ஆக்கங்கள். இவற்றில் 'தில்லாலங்கடி' தவிர மற்ற நான்கு படங்களுமே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெற்றிபெற்றவை. குடும்பங்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவரையும் கவர்ந்தவை. இவை ஒவ்வொன்றிலும் ரவியின் திறமை மெருகேறுவது கண்கூடாகத் தெரிந்தது. நடிப்பு, நடனம். உடலமைப்பு. சண்டைக் காட்சிகளில் பங்கேற்பது. ரொமான்ஸ் காட்சிகளில் இளமையாகத் தெரிவது என அனைத்திலும் ரவிக்கு நல்ல பெயர் கிடைத்தது. குறிப்பாக அவருடைய நடனத் திறனும் உயரமும் அவர் ஒரு நாயகனாக நிலைநிறுத்திக்கொள்ள முக்கிய பங்களித்தன
வெளி நிறுவனங்களிலும் தனி முத்திரை
இந்த ஐந்து படங்களுக்கு இடையில் மற்ற இயக்குநர் / தயாரிப்பாளர்களின் படங்களிலும் ஜெயம் ரவி நடித்துவந்தார். பாபு யோகேஸ்வரன் இயக்கிய 'தாஸ்' ரவி நடித்த முதல் வெளி நிறுவனப் படம். இந்தப் படம் வெற்றிபெற்றது. லிங்குசாமி தயாரிப்பில் எழில் இயக்கிய 'தீபாவளி' படத்தில் வட சென்னை இளைஞராக நடித்தார். மதிப்புமிக்க இயக்குநர் - ஒளிப்பதிவாளர் ஜீவாவின் கடைசித் திரைப்படமான 'தாம் தூம்' படத்தில் காதல், ஆக்ஷனுக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரத்தில் நடித்தார். எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' படத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வனப் பாதுகாவலராக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற இந்தப் படம் ஒரு நடிகராக ஜெயம் ரவிக்கு பெரும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ;எங்கேயும் காதல்' சிறந்த பாடல்களைக் கொண்டிருந்த காதல் படம். இளைஞர்களைக் கவர்ந்து வெற்றிபெற்றது. அடுத்ததாக அமீர் இயக்கத்தில் 'ஆதி பகவன்' திரைப்படத்தில் நாயகனாகவும் பெண் தன்மை மிக்க வில்லனாகவும் நடித்தார். அந்தப் படம் வெற்றிபெறாததால் ஜெயம் ரவியின் துணிச்சலான முயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமுத்திரக்கனி இயக்கிய 'நிமிர்ந்து நில்' படத்தில் ஊழலை எதிர்த்துப் போராடும் இளைஞனாகவும் ஆந்திராவில் வசிக்கும் தாதாவாகவும் இரட்டை வேடங்களில் பாரிய வித்தியாசம் காட்டி சிறப்பாக நடித்திருந்தார்.
தனி அடையாளமான 'தனி ஒருவன்'
2015-ல் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தன் அண்ணன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்த 'தனி ஒருவன்' ஜெயம் சகோதரர்களின் திரைவாழ்வில் மிக முக்கியமான பெருமைக்குரிய படமாக அமைந்தது. சமூகக் குற்றங்களைப் பின் தொடர்ந்து சென்று அனைத்து குற்றங்களுக்கும் காரணமாக விளங்கும் ஒரு பெரும்புள்ளியைக் கண்டடைந்து அவரை எதிர்த்து வெற்றிகொள்ளும் ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு ஜெயம் ரவி மிகக் கச்சிதமாகப் பொருந்தினார். விமர்சகர்கள், ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட இந்தப் படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான முயற்சிகளும் வெற்றிகளும்
'பூலோகம்' படத்தில் வட சென்னையைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரராகவும் 'மிருதன்' படத்தில் ஜோம்பிகளின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாப்பவராகவும் 'போகன்' படத்தில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவராகவும் 'வனமகன்' படத்தில் மனித நாகரிகத்தையும் அதன் தீய விளைவுகளையும் உள்வாங்கியிராத வனவாசியாகவும் 'டிக் டிக் டிக்' படத்தில் விண்வெளி வீரராகவும் 'அடங்க மறு' படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் 'கோமாளி' படத்தில் 15 ஆண்டுகள் கோமாவில் இருந்துவிட்டு மீண்ட இளைஞராகவும் பல்வேறு வகைமைகளைச் சேர்ந்த படங்களில் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்தார் ஜெயம் ரவி. இவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாகவும் அமைந்தன. குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான 'கோமாளி' மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.
மணிரத்னத்தின் அருண்மொழிவர்மன்
தற்போது 'பூமி', 'ஜனகனமண'', 'பொன்னியின் செல்வன்' உள்பட பல படங்களில் நடித்துவருகிறார் ஜெயம் ரவி. கல்கியின் அமரத்துவம் பெற்ற சரித்திரப் புனைவு நாவலான 'பொன்னியின் செல்வன்' மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாகிறது. இதில் தலைப்புக் கதாபாத்திரமான பொன்னியின் செல்வனாக அதாவது சோழ சாம்ராஜ்யத்தின் மாபெரும் பேரரசன் ராஜராஜ சோழன் என்று அறியப்பட்ட அருண்மொழிவர்மனாக நடித்துவருகிறார் ஜெயம் ரவி. இதுவே அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் முதல் படம். அவர் நடிக்கும் முதல் சரித்திரப் படமும்கூட.
வெற்றி ரகசியம்
ஜெயம் ரவி வெற்றிப் படங்களிலும் தோல்விப் படங்களிலும் நடித்திருக்கிறார். எல்லா நடிகர்களையும் போலவே அவருடைய திரைவாழ்விலும் ஏற்றங்களும் இறக்கங்களும் இருந்துள்ளன. ஆனால் என்றைக்கும் ஜெயம் ரவியின் படத்தில் ஆபாசம். அதீத வன்முறை போன்ற விஷயங்கள் இருந்ததில்லை. அவருடைய திரைப்படங்கள் எதுவும் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகளை முன்னிறுத்தியதில்லை. அப்படிப்பட்ட தீங்கில்லாத கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதாலேயே அனைத்து தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்ற நாயக நடிகராக விளங்குகிறார் ஜெயம் ரவி. அதோடு தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் கதையிலும் சரி, தன்னுடைய கதாபாத்திரத்திலும் சரி ஏதேனும் ஒரு புதுமை இருப்பதை உறுதி செய்வது ஜெயம் ரவி அமைதியாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதனை.
அவருடைய திரைப்படங்களின் வரிசையை நோக்கினால் ஒவ்வொரு எந்த இரண்டு படங்களையும் ஒரே மாதிரியானவை என்று சொல்லிவிட முடியாது. காதல், நகைச்சுவை, ஆக்ஷன். த்ரில்லர், சென்டிமெண்ட், நகரத்துக் கதை, கிராமத்துக் கதை, வெளிநாட்டில் நடக்கும் கதை என அனைத்து வகைமாதிரியை (genre) சேர்ந்த படங்களிலும் நடித்திருக்கிறார். அதி நவீன என்.ஆர்.ஐ, அப்பாவித்தனமான கிராமத்து இளைஞன், உடலும் மனமும் முறுக்கேறிய பாக்ஸர், பழங்குடி வன அதிகாரி, அறிவும் சமூக அக்கறையும் நிறைந்த படித்த இளைஞர், காதலியைக் கவர முயலும் ரோமியோ, பெண்தன்மை மிக்க ஆண் எனப் பல வகையான கதாபாத்திரங்களில் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார். உயரம். உடலமைப்பையும் இளமைத் தோற்றத்தையும் பேணுவது. நடனம். நகைச்சுவை, உணர்ச்சிகர நடிப்பு, சண்டைக் காட்சிகள் என ஒரு நாயக நடிகருக்கும் தேவையான அனைத்திலும் சிறந்து விளங்குவது என ஒரு முழுமையான நடிகராகத் திகழ்கிறார் ஜெயம் ரவி. இதுவே அவருடைய வெற்றி ரகசியம் என்று சொல்லலாம்.
சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் ஃபிலிம்ஃபேர் விருதையும் இன்னும் பல விருதுகளையும் வென்றிருக்கும் ஜெயம் ரவி வரும் காலங்களில் தேசிய விருது உள்ளிட்ட தேசிய அங்கீகாரங்களையும் தமிழக எல்லைகளைத் தாண்டி நாடு முழுவதும் புகழடைவதற்கான வாய்ப்புகளையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago