கங்கணா தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளாவதை விரும்பவில்லை: தியா மிர்சா

By செய்திப்பிரிவு

கங்கணா தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளாவதை விரும்பவில்லை என்று தியா மிர்சாவின் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் நடிகை கங்கணா ரணாவத் மும்பையைப் பற்றியும், மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் அவதூறாகப் பேசி கருத்துத் தெரிவித்தார். இதனால் நடிகை கங்கணா ரணாவத்துக்கும், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையிலான மோதல் வெடித்தது.

மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கணா ரணாவத் அனுமதி பெறாமல் வீட்டில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டதால், இன்று (செப்டம்பர் 9) மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின் வீட்டை இடித்தது. இதனிடையே கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ஆனதைத் தொடர்ந்து கங்கணாவும் மும்பை விரைந்தார்.

கங்கணாவின் வீடு இடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கின. இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

கங்கணாவின் வீடு இடிக்கப்பட்டது தொடர்பாக தியா மிர்சா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கங்கணா, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரோடு ஒப்பிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. மும்பை மாநகராட்சி, திடீரென கங்கணாவின் அலுவலக இடத்தை இடிக்கக் கிளம்பியது கேள்விக்குரியது. ஏன் இப்போது? ஏன் இப்படி? அதில் விதிமீறல்கள் இருந்தால் இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? கடந்த சில மாதங்களாக கங்கணா சொன்ன பல விஷயங்களை நான் ஏற்கவில்லை. பெயர் குறிப்பிட்டுச் சாடுதல், தனிப்பட்ட தாக்குதல், இழிவுபடுத்தல் என பலதும் செய்தார். அதே நேரம், அவரும் தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளாவதை நான் விரும்பவில்லை"

இவ்வாறு தியா மிர்சா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE