சிக்கலான மனிதர் சுஷாந்த் சிங்; அவருடன் பணிபுரியாததற்குக் காரணங்கள் உண்டு: அனுராக் காஷ்யப் வெளிப்படை

By ஐஏஎன்எஸ்

சுஷாந்த் சிங் மேலாளருடன் நடந்த வாட்ஸ் அப் உரையாடலை அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ளார். இதில், சுஷாந்தின் மேலாளர், அனுராக் காஷ்யப்பின் அடுத்த படத்தில் சுஷாந்தை நடிக்க வைக்கக் கோரியுள்ளார்.

"இதைப் பகிர்வதற்கு மன்னித்துவிடுங்கள். சுஷாந்த் இறந்த மூன்று வாரங்களுக்கு முன் நடந்த உரையாடல் இது. 22 மே அன்று சுஷாந்தின் மேலாளருடன் நடந்த உரையாடல். இப்போது பகிரவேண்டிய தேவை உள்ளதாக நினைக்கிறேன். எனக்கான காரணங்களுக்காக நான் அவருடன் பணியாற்ற விரும்பவில்லை" என்று அனுராக் காஷ்யப் குறிப்பிட்டுள்ளார். இந்த உரையாடல் மே 22 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் நடந்துள்ளது.

"உங்களுக்கு இப்படி நடிகர்களைப் பரிந்துரை செய்வது பிடிக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னால் உங்களிடம் அதைச் செய்ய முடியும் என நினைக்கிறேன். சுஷாந்த் உங்கள் திரைப்படத்தில் பொருந்துவார் என நினைத்தால் தயவுசெய்து அவரை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ரசிகனாக, நீங்கள் இருவரும் சேர்ந்து ஓர் அற்புதத்தை உருவாக்குவதைப் பார்க்க விரும்புகிறேன்" என்று மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்திருக்கும் அனுராக், "அவர் மிகவும் சிக்கலான மனிதர். அவர் நடிக்க வருவதற்கு முன்னாலிருந்தே, 'கை போ சே' படம் ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்தே எனக்கு அவரைத் தெரியும்" என்று கூறியுள்ளார்.

பின் மீண்டும் ஜூன் 14 அன்று, சுஷாந்த் இறந்த பிறகு நடந்த உரையாடலையும் அனுராக் பகிர்ந்துள்ளார். "ஜூன் 14 அன்று மேலாளருடன் நடந்த உரையாடல். நீங்கள் பார்க்க விரும்பினால் அதில் சில விஷயங்கள் உங்களுக்குப் புலப்படும். இதைச் செய்வது கடுமையானதாக இருக்கிறது. ஆனால், என்னால் இதைப் பகிராமல் இருக்க முடியாது. மேலும் அவரது குடும்பத்துக்காக நாங்கள் கவலைப்படவில்லை என்று சொன்னவர்களும் இதைப் பார்க்கலாம். எவ்வளவு உண்மையாக இருக்க முடியுமோ அவ்வளவு உண்மையாகப் பகிர்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள்" என்று அனுராக் கூறியுள்ளார்.

இந்த உரையாடலில் மேலாளர், "நீங்கள் சொன்னதை சுஷாந்திடம் சொல்லவே இல்லை. அவரும் என்ன ஆனது எனக் கேட்கவில்லை" என, அனுராக் - சுஷாந்த் இடையே இருக்கும் பிரச்சினையைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

"நான் ரன்வீர் சிங்கை விட்டு விலகினேன். ஏனென்றால் சுஷாந்த் எனது படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதாக முகேஷ் சொன்னார். இதன் பின் சுஷாந்த் என்னுடன் இருந்த தொடர்பை மொத்தமாக நிறுத்திவிட்டார். நான் படத்தைக் கைவிட்டு விட்டேன்" என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.

இதற்கு மேலாளர், சுஷாந்துக்கு அனுராக் மீதும், இயக்குநர் அபிஷேக் கபூர் மீதும் அதிக மரியாதை இருந்ததாகக் கூறியுள்ளார்.

"நாங்கள் என்றுமே நேர்மையாக இருந்தோம். அதனால்தான் எனக்கு வருத்தம். இதில் முகேஷுக்கு தொடர்பு இருப்பது எனக்குத் தெரியும். எனவே, நான் அவர்கள் இருவரிடமிருந்தும் விலகியிருந்தேன். நான் அந்தக் கோபத்தை மனதில் வைத்துக் கொள்ளாமல் ஒருமுறையாவது சுஷாந்திடம் பேசியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மிக மோசமாக உணர்கிறேன்" என்று அனுராக் கூறியுள்ளார்.

"இந்த ஊரடங்கும், மீண்டும் வேலை செய்ய முடியுமா என்கிற செயலற்ற நிலையும் கூட அவரது நிலைமையை மோசமாக்கியது என நினைக்கிறேன். நீங்கள் உங்களைக் கடிந்து கொள்ள வேண்டாம். உங்கள் நேர்மைக்காகவும், உங்கள் வழியில் நீங்கள் வாழ்வதற்காகவும் சுஷாந்த் உங்களை உயர்வான இடத்தில் தான் வைத்திருந்தார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலில் சுஷாந்தின் குடும்பம் பற்றியும், சகோதரிகள் பற்றியும், அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா, இல்லையா, இளையவர்களா, மூத்தவர்களா என்பது பற்றியும் அனுராக் கேட்டறிந்துள்ளார்.

ரியா சக்ரபர்த்தியின் கைதைத் தொடர்ந்து ஏன் பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்பது குறித்தும் அனுராக் விளக்கம் அளித்துள்ளார்.

"ரியாவுக்குத் தண்டனை தர வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். அவர் இதைச் செய்யவில்லை என்று எப்படித் தெரியும்? சுஷாந்துக்கு ரியாவால் என்ன பிரச்சினை என்பது உனக்கு எப்படித் தெரியும்? என்றெல்லாம் கேட்டு வருகின்றனர். அவர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டனர். கடந்த 9-10 வருடங்களாக சுஷாந்துடன் பேசி, உரையாடி வருகிறோம். ஆம்! எங்களுக்கு விஷயம் அதிகமாகத் தெரியும்.

அதனால்தான் இவ்வளவு நாட்களாக, சுஷாந்தின் மீதான மரியாதையால், மொத்தத் திரையுலகமும் அமைதியாக இருந்தது. ஆனால், இப்போது, சுஷாந்தைப் பற்றி எங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் எங்களை ஒன்று சேர்த்து, ரியாவுக்காக ஆதரவு தர வைத்திருக்கிறது. ஏனென்றால் விஷயம் எல்லை மீறிச் சென்றுவிட்டது" என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE