துடுக்குத்தனம்; குறும்புத்தனம்; மெச்சூரிட்டி; பழிவாங்கும் சவால்;  தனி ஸ்டைலில் அசத்திய நடிகை ஜெயசித்ரா...  - நடிகை ஜெயசித்ரா பிறந்தநாள் இன்று

By வி. ராம்ஜி

துடுக்குத் தனமாகவும் குறும்புத்தனமாகவும் கொண்ட நடிகைகள் அப்போதும் இருந்திருக்கிறார்கள். நடிகை பானுமதி, அப்பேர்ப்பட்ட கேரக்டரில் நிறையவே நடித்திருக்கிறார். ஆனால் அதில் அவருடைய புத்திசாலித்தனமும் கூடவே இருக்கும். சரோஜாதேவியிடமும் ஈ.வி.சரோஜாவிடமும் இவை இருந்தன. ஆனாலும் ‘இன்னசென்ட்’ என்பதை அவர்களிடமும் பார்க்கமுடியாது. இந்த காலகட்டங்களைக் கடந்து, எழுபதுகளில்... குரலாலும் உடல் மொழியாலும் துடுக்குத்தனத்தையும் குறும்பு குணத்தையும் அப்பாவித்தனத்தையும் கொஞ்சம் புத்திசாலித்தனத்தையும் என சம விகிதத்தில் கலந்து, கலக்கியெடுத்தார். அவர்... ஜெயசித்ரா.

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான். குழந்தை நட்சத்திரமாகவே நடிக்கத் தொடங்கியவர்தான். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘குறத்தி மகன்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால், கே.பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’ அவரை வெகுவாக அடையாளம் காட்டியது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலும் ஜெயசித்ராவும் ‘அரங்கேற்றம்’ மூலமாக, அடுத்த இன்னிங்க்ஸிற்கு அரங்கேற்றமானார்கள்.

ஜெயசித்ராவின் ஒரு கண்ணை மூடிக்கொண்டு பேசும் ஸ்டைலும் நாக்கை துருத்திக்கொண்டு லேசாக ஆட்டுகிற ஸ்டைலும் புறங்கையைக் கட்டிக்கொண்டு பேசுகிற மாடுலேஷனும் அன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி எல்லோரையுமே கவர்ந்தன. இது ஜெயசித்ராவின் ஸ்டைல் என்று கொண்டாடினார்கள்.

‘மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம் மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன, தியாகத்தால் எமை வளர்த்த தெய்வத்துக்கு லாபமென்ன...’ எனும் பாடலின் முகபாவங்களில், பின்னாளில் மிகப்பெரிய ரவுண்டு வரப்போகும் நடிகை என்பதை அழகாக நிரூபித்திருந்தார். கலாய்த்து நடிப்பதிலும் கவலைகளை தேக்கிக்கொண்டுமாக உணர்ச்சிக்குவியலை தன் கண்களிலும் முகத்திலும் முக்கியமாக உதட்டிலும் காட்டிவிடுகிற தேர்ந்த நடிகை என்று அப்போதே கொண்டாடத் தொடங்கினார்கள் ரசிகர்கள்.

பாலசந்தரின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் மூன்று நாயகிகள் என்றாலும் ஜெயசித்ராவின் பாத்திர வார்ப்பும் அவரின் அலட்சியமான சவால் விடுகிற மேனரிஸப் பேச்சும் ரொம்பவே கொள்ளைகொண்டன. கமலும் ஜெயசித்ராவும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்தார்கள்.

பொதுவாகவே எல்லா நடிகர்களும் எல்லா நடிகைகளுடனும் சேர்ந்து நடிக்கலாம். ஆனால் பாந்தமான ஜோடி, பக்காவான ஜோடி என்பதெல்லாம் இருக்காது. ஆனால், தமிழ் சினிமாவில் முதன்முதலாக அப்படியொரு ஜோடியாக நடிகையாக வலம் வந்தார் ஜெயசித்ரா. ஜெய்சங்கர் - ஜெயசித்ரா ஜோடி அப்போது வெகு பிரபலம். ‘அடடா... சூப்பர் ஜோடி’ என்று ரசிக்கப்பட்டது. சிவகுமார் - ஜெயசித்ரா ஜோடியும் வெகுவாக கொண்டாடப்பட்டது. ‘ஆஹா... அட்டகாசமான ஜோடி’ என்றார்கள்.

இதன் பின்னர், கமல்ஹாசன் - ஜெயசித்ரா ஜோடியை அப்படி ரசித்தார்கள். ‘பிரமாதம்... அழகான ஜோடி’ என்றார்கள். எந்த நடிகர்களுடன் நடித்தாலும் சட்டென அவர்களுக்கும் அந்தக் கதாபாத்திரத்திற்கும் வெகுவாகப் பொருந்திவிடுவதுதான் ஜெயசித்ரா ஸ்பெஷல்.

சினிமா நடிகரின் பைத்தியமாக ‘சினிமா பைத்தியம்’ படத்தில் ரொம்பவே இயல்பாக, மாணவியாகவே வாழ்ந்திருப்பார் ஜெயசித்ரா. ’குமாரவிஜயம்’ படத்திலும் கமலுடன் நடித்திருப்பார். ரொம்ப அழகான கேரக்டரை, அநாயசமாகப் பண்ணியிருப்பார். ’இளமை ஊஞ்சலாடுகிறது’ கேரக்டரும் ‘வெள்ளிக்கிழமை விரதம்’ கேரக்டரும் மறக்கவே முடியாதவை.

‘தேவியின் தரிசனம்’ என்ற பாடல், ‘தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே’, ‘கன்னி ராசி என் ராசி ரிஷபக் காளை ராசி’ , ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’, ’உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்’, ’அன்பு மேகமே இங்கு ஓடிவா’, ’கல்யாணத் தேரினில் தெய்வீகக் கலசம்’ என்று எத்தனையெத்தனையோ பாடல்கள்... ஜெயசித்ராவுக்கு அமைந்தன.

‘கங்கை நதியோரம் ராமன் நடந்தான்’ என்ற பாடலுக்கு ரவிச்சந்திரனுடன் நடித்திருந்தார். ‘வரப்பிரசாதம்’ படம் முழுக்கவே இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. விஜயகுமார், முத்துராமன், எம்ஜிஆர், சிவாஜி என்று ரவுண்டு வந்து, ரகுமான் வரை நடித்து ஜெயித்தார்.

சத்யராஜுடன் நடித்த போதும் சரி, பாலசந்தரின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் கீதாவுக்கு அம்மாவாக தெலுங்கு பேசுகிற கேரக்டரில் நடித்த போதும் சரி... முக்கியமாக, எல்லோரும் மறுக்கிற ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ கேரக்டரை மிக கவனமாகவும் அதேசமயம் அந்த ஏக்க உணர்வுகளை தெளிவுற கேரக்டரைஸ் பண்ணி நடித்ததாகவும் சரி... பண்பட்ட நடிகை என்பதை தன் ஒவ்வொரு படத்தின் மூலமாகவும் உணர்த்திக்கொண்டே வந்தார் ஜெயசித்ரா.

‘வாழையடி வாழை’ படத்தில் பிரமீளாதான் நாயகி என்றாலும் எல்லோருக்கும் பிடிக்கும்படியாக சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் ‘நாயக்கரின் மகள்’ படத்தில் இவர்தான் படத்துக்கே பிரதானமே. இந்தப் படம்தான் ஜெயசித்ராவின் நூறாவது படம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில், இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில், தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொண்டு கலக்கிய ஜெயசித்ரா, எழுபதுகளில் மட்டுமின்றி இன்றைக்கும் எல்லோர் மனதிலும் உட்கார்ந்துகொண்டே இருக்கிற, மறக்கவே மறக்கமுடியாத நடிகை.

உன்னத நடிகை ஜெயசித்ராவுக்கு (1957 - செப்டம்பர் 9) இன்று பிறந்தநாள். பண்பட்ட நடிகை ஜெயசித்ராவை வாழ்த்துவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE