சுடப்பட்ட எம்ஜிஆரின் குரல் மாறி வந்த முதல் படம் ‘காவல்காரன்’; அழுது அழுது, திரும்பத் திரும்ப பார்த்த எம்ஜிஆர் ரசிகர்கள் - ‘காவல்காரன்’ வெளியாகி 53 ஆண்டுகள்

By வி. ராம்ஜி

1967ம் ஆண்டு, தமிழக அரசியலிலும் தமிழ்த் திரையுலகிலும் மறக்கமுடியாத ஆண்டாக, பரபரப்பான ஆண்டாக அமைந்தது. திரையுலகையே பதறவைத்த ஆண்டாகவும் அமைந்தது. அரசியலில், திமுகவின் ஆட்சி அந்த வருடம்தான் அமைந்தது. அண்ணா முதல்வரானார். திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆரை, வருடத்தின் தொடக்கத்தில், ஜனவரி 12ம் தேதி எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். 13ம் தேதி ‘தாய்க்கு தலைமகன்’ வெளியானது. ஆனாலும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்கவில்லை. சுடப்பட்டு எட்டு மாதங்கள் கழித்து, ‘காவல்காரன்’ வெளியானது. துக்கமும் அழுகையுமாக வந்து படம் பார்த்தார்கள். எதிர்பார்த்த வெற்றியை விட, இரண்டு மூன்று மடங்கு வெற்றியைத் தந்தார்கள். அதுதான் எம்ஜிஆர் மேஜிக்.

67ம் ஆண்டு ‘தாய்க்கு தலைமகன்’ வந்தது. மே மாதம் 19ம் தேதி ‘அரசகட்டளை’ வந்தது. அது தேவர்பிலிம்ஸ். இந்தப் படத்தை இயக்கியவர் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி. இந்தப் படங்களெல்லாம் 66ம் ஆண்டிலேயே வேலை தொடங்கி, 95 சதவிகிதம் முடித்துக் கொடுக்கப்பட்டது. அதாவது எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன்பே நடித்துக் கொடுத்திருந்தார். மீதமுள்ள ஐந்து சதவிகிதம் ‘அரசகட்டளை’யில் குரல் மாறிய நிலையில் டப்பிங் செய்யப்பட்டது. ஆனாலும் அவ்வளவாகத் தெரியவில்லை. இதுவும் எம்ஜிஆரின் மேஜிக்தான்.

ஆனால், 67ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி எம்ஜிஆர் சுடப்பட்டு, அதன் பின்னர், நடிக்கப்பட்டு, டப்பிங் பதிவு செய்யப்பட்டு முழுமையாக குரல் மாறிய நிலையில் வந்த முதல் படம்... ‘காவல்காரன்’. சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் தயாரிக்க, ப.நீலகண்டன் இயக்க, ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், அசோகன், பண்டரிபாய், மனோகர், சிவகுமார் முதலானோர் நடித்திருந்தனர்.

67ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. முதல்நாள் படம் பார்த்துவிட்டு, அழுதுகொண்டே வந்தார்கள். கதறி கண்ணீர்விட்டபடியே வந்தார்கள். ‘வாத்தியார் குரலே மாறிப்போச்சே’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு, அடுத்த காட்சிக்கு அப்படியே நின்றார்கள். முதல் ஷோ பார்த்துவிட்டு, இரண்டாவது ஷோவும் பார்த்தார்கள். எம்ஜிஆரின் குரல் மாறியிருக்கும் விஷயம், தமிழகம் முழுவதும் தீயாய்ப் பரவியது. கூட்டம்கூட்டமாக வந்து பார்த்தார்கள். குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தார்கள். பார்த்தவர்கள் எல்லோரும் அழுதுகொண்டே பார்த்தார்கள். சுடப்பட்டு குரலே மாறிப் போய்விட்ட எம்ஜிஆர், வசனம் பேசப்பேச, ‘தலைவா தலைவா’ என்கிற கோஷங்கள், எம்ஜிஆரின் லாயிட்ஸ் சாலை வீட்டிலும் தி.நகர் வீட்டிலுமாக எதிரொலித்துக் கதறியது.

எம்ஜிஆர் போலீஸ் அதிகாரி. நம்பியார் வில்லன். அவரின் மகள் ஜெயலலிதா. அங்கே ஒரு பங்களாவில் நடக்கும் கொலை குறித்து துப்பறிய எம்ஜிஆர், நம்பியார் வீட்டு கார் டிரைவராக வருவார். அவர் போலீஸ் என்பது அம்மாவுக்கு கூட தெரியாது. கொலை செய்தது யார், நம்பியார், அசோகன், மனோகரின் வேலைகள் என்னென்ன என்பதையெல்லாம் எப்படிக் கண்டறிந்தார் என்கிற முழுக்க முழுக்க எம்ஜிஆர் ஃபார்முலா கதைதான் ‘காவல்காரன்’. அதை தனக்கே உரிய பாணியில், எம்ஜிஆரின் மனமறிந்து இயக்கி அசத்தினார் ப.நீலகண்டன்.

எம்ஜிஆருக்கு தேவர் பிலிம்ஸும் சத்யா மூவீஸும் ரொம்பவே ஸ்பெஷல். 67ம் ஆண்டில் சுடப்பட்ட சம்பவம் நடந்த மறுநாள் தேவர் பிலிம்ஸ் படம் வெளியானது. சுடப்பட்டதால் குரல் மாறிய நிலையில் வெளியானது சத்யா மூவீஸின் ‘காவல்காரன்’. நடுவே, எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணி இயக்கிய ‘அரசகட்டளை’ வெளியானது. ‘தாய்க்கு தலைமகன்’ படத்தில் நடித்த சரோஜாதேவியும் ‘காவல்காரன்’ படத்தில் நடித்த ஜெயலலிதாவும் ‘அரசகட்டளை’யில் நடித்திருந்தார்கள்.

’கட்டழகு தங்கமகள்’ என்றொரு பாடல். ‘மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ’ என்றொரு பாடல். ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ என்றொரு பாடல். ‘அடங்கொப்புரானே சத்தியமா நான் காவல்காரன்’ என்றொரு பாடல். ‘காது கொடுத்து கேட்டேன் குவாகுவா சத்தம்’ என்றொரு பாடல். எல்லாப் பாட்டுகளும் செம ஹிட்டு. என்றாலும் ‘காது கொடுத்து கேட்டேன்’ பாடலும், ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாடலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வாலியின் பாடல்கள். எம்.எஸ்.வி.யின் இசை. அட்டகாச கூட்டணியில் அற்புதப் பாடல்கள்.

இப்போது மூடப்பட்டுள்ள அகஸ்தியா, குளோப், மேகலா, நூர்ஜஹான் முதலான திரையரங்கிலும் தமிழகத்திலும் வெளியாகி சக்கைப்போடு போட்டான் ‘காவல்காரன்’. எம்ஜிஆரின் முகமும் எம்ஜிஆரின் படமும் எம்ஜிஆர் பட பாடல்களும் மிகப்பெரிய எனர்ஜியைத் தரவல்லவை; ஊக்கத்தைக் கொடுக்கக்கூடியவை; உற்சாகத்தை வழங்குபவை; உத்வேகத்தை ஊட்டுபவை என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. இன்றைக்கும் அவையெல்லாம் நிஜம். ஆனால், ‘காவல்காரன்’ படம், அழுதுகொண்டே ரசிகர்கள் பார்த்த படம். பெண்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போதே அழுதபடியே வந்தார்கள். படம் பார்த்தார்கள். இன்னும் வெடித்து அழுதார்கள்.

சென்னை குளோப் தியேட்டரில், பெண்களுக்காகவே தனிக்காட்சி திரையிட்டதெல்லாம் உலக சாதனை. இலங்கையில் இந்தப் படம் 170 நாட்களைக் கடந்து ஓடியது. மிகப்பெரிய வசூலை பெற்றுத்தந்தது.

67ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, வெளியானது ‘காவல்காரன்’. எம்ஜிஆரின் குரலே மாறிப்போயிருந்த நிலையில் வந்த முதல் படம். ஆனாலும் தன் பலவீனத்தையே பலமாக்கிக் காட்டினார் எம்ஜிஆர். அப்படி பலமாக்கிக் காட்டினார்கள் எம்ஜிஆரின் ரசிகர்கள். இதுவும் எம்ஜிஆர் மேஜிக் தான்!

படம் வெளியாகி, 53 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் எம்ஜிஆர் சுடப்பட்ட வரலாறுடன், ‘காவல்காரன்’ படமும் இணைந்துகொண்டது. சகாப்தமாகிவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE