கங்கணா ரணாவத் படத்தைப் புறக்கணித்த பி.சி.ஸ்ரீராம்

கங்கணா ரணாவத் படத்தின் ஒளிப்பதிவுக்கு வந்த வாய்ப்பை புறக்கணித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.

சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு இந்தி திரையுலகில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. கங்கணா ரணாவத் பல்வேறு முன்னணி திரையுலக பிரபலங்கள் மீது குற்றம்சாட்டி வருகிறார். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும், இதில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு அந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ரியாவின் சகோதரர் ஷௌவிக் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (செப்டம்பர் 8) ரியாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, சுஷாந்த் சிங் மரணத்தைக் கையாண்ட விதம் தொடர்பாக ஊடகங்களைக் கடுமையாகச் சாடியிருந்தார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். தற்போது கங்கணா ரணாவத் படத்துக்கு வந்த ஒளிப்பதிவு வாய்ப்பையும் புறக்கணித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் பி.சி.ஸ்ரீராம் கூறியிருப்பதாவது:

"கங்கணா ரணாவத் பிரதான பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகச் சொன்னதால் ஒரு படத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மனதின் ஆழத்தில் ஒரு அசவுகரியமான நிலையை உணர்ந்தேன். எனது நிலையை அவர்கள் தரப்புக்குச் சொன்னேன். அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். சில நேரங்களில், நம் மனதில் எது சரியென்று படுகிறதோ அதுதான் முக்கியம். அந்தத் திரைப்படக் குழுவுக்கு என் வாழ்த்துகள்"

இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE