கங்கணாவை மறைமுகமாக சாடிய உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கங்கணாவை மறைமுகமாக சாடியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட், போதைப் பொருள், வாரிசு அரசியல் என்று அடுத்தடுத்த குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நடிகை கங்கணா ரணாவத், சில நாட்களுக்கு முன்பு மும்பை காவல்துறையையும் சாட ஆரம்பித்தார்.

மேலும், மும்பை காவல்துறையால் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் வெளிப்படையாகக் கூறிய கங்கணா, "சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், நான் மும்பை வரக்கூடாது என வெளிப்படையாக மிரட்டியுள்ளார். மும்பை வீதியின் சுவர்களில் விடுதலை வேண்டும் என்ற சுவரோவியங்களுக்குப் பின் இப்போது வெளிப்படையான மிரட்டல்களும் வருகின்றன. ஏன் மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போலத் தோன்றுகிறது" என்று ட்வீட் செய்திருந்தார்

இதற்குப் பதிலளித்திருந்த சஞ்சய் ராவத், கங்கணா ரணாவத் மும்பை காவல்துறையையும், மகாராஷ்டிர மாநிலத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்றும், அவ்வளவு பயமிருப்பவர் மும்பைக்குத் திரும்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தார். மேலும், கங்கணா மீது உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த சூழலில் கங்கணா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கு சிவசேனா தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று கூடியது. அப்போது பேசிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கங்கணாவை மறைமுகமாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது:

பலரும் இந்த நகரத்துக்கு வந்து இதை ‘நமது மும்பை’ என்று அன்போடு அழைப்பார்கள். அவர்கள் இங்கேயே தங்கி பணிபுரிவார்கள். தங்களுக்கு வாழ்வாதாரத்தையும் உறைவிடத்தையும் கொடுத்த இந்த நகரத்துக்கு நன்றியோடு இருப்பார்கள். ஆனால் சிலரோ அப்படி இருப்பதில்லை.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

கங்கணா - சிவசேனா கட்சியினருக்கிடையே கருத்து மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் உத்தவ் தாக்கரே இவ்வாறு பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE