ஜெயபிரகாஷ் ரெட்டி திடீர் மறைவு: தெலுங்கு திரையுலகினர் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் காலமானார். அவருடைய மறைவு தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. வில்லன், காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம் என்று அனைத்திலும் நடித்து புகழ் பெற்றவர். இன்று (செப்டம்பர் 8) வீட்டில் பாத்ரூம் செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார். அவருக்கு வயது 73.

இவருடைய திடீர் மறைவு, தெலுங்கு திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் சிரஞ்சீவி, ராம்சரண், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் தொடங்கி அனைத்து நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவுக்கு முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

1946-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி குர்ணூல் மாவட்டத்தில் பிறந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. முதலில் நாடக நடிகராக இருந்து, பின்பு திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகமானவர். பல படங்களில் வில்லனாக நடித்தவர், பின்பு காமெடி கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர்.

தமிழில் 2003-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'ஆஞ்சநேயா' படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமானார். பின்பு 'ஆறு', 'தர்மபுரி' ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். தனுஷ் நடிப்பில் வெளியான 'உத்தமபுத்திரன்' படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். இதில் விவேக்குடன் இவர் செய்யும் காமெடி இப்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வந்ததால், தமிழில் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை ஜெயபிரகாஷ் ரெட்டி. இந்தாண்டு பொங்கலுக்கு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'சரிலேரு நீக்கவெரு' படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயபிரகாஷ் ரெட்டி என்பது நினைவு கூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE