இரட்டை வேடங்களில் ஹீரோ நடித்த படங்கள் ஏராளம் உண்டு. ஆனால், நாயகி இரட்டை வேடமிட்டு நடித்த படங்கள் என்னவோ குறைவுதான். கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, வாணிஸ்ரீ என பல நடிகைகள் நடித்திருக்கிறார்கள். நடிகை சுமித்ராவும் இந்தப் பட்டியலில் இடம்பெறுகிறார். சிவகுமார், சுமித்ரா, மேஜர் சுந்தர்ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், சுருளிராஜன், வடிவுக்கரசி முதலானோர் நடித்த ‘கடவுள் அமைத்த மேடை’ எனும் திரைப்படத்தில் சுமித்ரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
அக்கா, தங்கை என்று சுமித்ராவுக்கு இரட்டை வேடம். சிறுவயதில் விளையாடும் போது தலையில் அடிபட்டு ஒரு சுமித்ராவுக்கு பேசும் சக்தி போய்விடும். பின்னர், சிவகுமார் போஸ்ட்மேனாக இருப்பார். பேசும் திறன் கொண்ட சுமித்ராவைப் பார்த்து சிவகுமார் காதலிப்பார். அவரும் அவரைக் காதலிப்பார். அதேசமயத்தில், வாய் பேச முடியாத சுமித்ராவும் அவரைக் காதலிப்பார்.
இந்த விஷயம் தெரிந்ததும், தங்கையை திருமணம் செய்துவைக்க முடிவு செய்வார். தெரிந்தால் என்னாவது என்று தவிப்பு எல்லோருக்கும். அதன்படியே வாய் பேசமுடியாத சுமித்ராவுக்கும் சிவகுமாருக்கும் திருமணமாகும். குதிரை வண்டியில் போய்க்கொண்டிருக்கும் போது, கடிவாளம் அறுந்து விபத்து ஏற்படும். விபத்தில்தான் அவருக்கு பேச்சு போய்விட்டது என்று டாக்டரும் குடும்ப நண்பருமான வி.கோபாலகிருஷ்ணன் சொல்லிவிடுவார்.
இந்த நிலையில், அக்காவுக்கு பதில் நாம் திருமணம் செய்துகொண்டுவிட்டோமே என்று குற்ற உணர்ச்சி சுமித்ராவுக்கு. தள்ளித்தள்ளியே இருப்பார். ஒருகட்டத்தில் சேருவார்கள். ஊரில் உள்ள ரவுடிக்கும் சிவகுமாருக்கு முன் பகை இருக்கும். சிவகுமாரும் சுமித்ராவும் சைக்கிளில் வந்துகொண்டிருக்கும் போது, லாரியால் மோதுவான் வில்லன். இதில் விபத்து. இந்த விபத்தில், சுமித்ரா மருத்துவமனையில் இறந்துவிடுவார். சிவகுமார் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பார். அப்போது உண்மையிலேயே காதலித்த சுமித்ரா, சிவகுமாரைக் காப்பாற்ற நேரில் வந்து நிற்பார். பேசுவார். ‘விபத்தில் பேச்சு வந்துவிட்டது’ என்று டாக்டர் சொல்லுவார். அதன் பின்னர் இருவரும் குடும்பம் நடத்துவார்கள்.
வயதாகிவிட்ட பிறகு, ஒருகட்டத்தில் இந்த உண்மை தெரியவரும் வேளையில், தான் எழுதிவைத்த நோட்டுப் புத்தகத்தில் எல்லா உண்மைகளும் இருக்கின்றன என்று சிவகுமாரிடம் கொடுக்க, அந்த உண்மையை உணர்ந்து, சுமித்ராவை ஏற்றுக்கொள்வார் சிவகுமார்.
உணர்ச்சிப் போராட்டங்கள் மிக்க அற்புதமான இந்தக் கதை, அழகான திரைக்கதையாக செதுக்கப்பட்டிருந்தது. அழகிய கிராமம், பண்பட்ட நடிகர்கள் என எல்லாமே மிகச்சரியாக அமைந்திருந்தது. சிவகுமாரின் நடிப்பு யதார்த்தம். சுமித்ராவின் நடிப்பு மிகச்சிறப்பு.
இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியவர்... கவிஞர் வாலி. எல்லாப் பாடல்களும் இனிய பாடல்களாக அமைந்தன. வசனங்களும் அளவாக எழுதப்பட்டிருந்தன. ஒளிப்பதிவாளர் பாபு, கிராமத்து ரம்மியத்தை அழகுறக் காட்டியிருந்தார். எஸ்.பி.முத்துராமன் நேர்த்தியாக இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் ‘வானில் பறக்கும் பறவைக்கூட்டம்’ என்றொரு பாடல். வயல் வெளிகளில் எடுக்கப்பட்டிருந்தது. ‘தங்கத்துரையே மூணாம் பிறையே’ என்றொரு சோகத் தாலாட்டு. படத்தில் கண் தெரியாத சிறுவனாக காஜா ஷெரீப் நடித்திருந்தார். அவருக்குத்தான் இந்தப் பாட்டு. சிவகுமாருக்கும் சுமித்ராவுக்கும் சோகப்பாடல் ஒன்று உண்டு. ‘தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு’ என்ற பாடல். அழகிய மெலடி. பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜானகி பாடியிருந்தார்கள்.
இளையராஜாதான் இசை. இளையராஜாவின் இசையில் பி.பி.எஸ். பாடியது அரிதுதான். அப்படி அரிதான பாடல் இது. இந்தப் படத்தை இன்றைக்கும் எல்லோரும் மறக்காமல் இருக்கும் வகையிலான பாடலை இளையராஜா வழங்கியிருந்தார். எஸ்.பி.பி.யும் ஜென்ஸியும் பாடியிருந்தார்கள். ‘மயிலே மயிலே உன் தோகை எங்கே என்றொரு பாடல்... நினைவிருக்கிறதுதானே.
அட்டகாசமான பாட்டு. அழகான டூயட். செமத்தியான மெலடி. இளையராஜாவின் ஹிட் பாடல்கள் வரிசையில், இந்த ‘மயிலே மயிலே’வுக்கு தனியிடம் உண்டு.
1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியானது ‘கடவுள் அமைத்த மேடை’. படம் வெளியாகி, 41 ஆண்டுகளானாலும், ‘மயிலே மயிலே உன் தோகை எங்கே’ என்ற பாடலையும் கொஞ்சும் ஜென்ஸி குரலையும் குழையும் எஸ்.பி.பி. குரலையும் இளையராஜாவின் இழையோடியிருக்கும் இசையையும் மறக்கவே முடியாது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago