’அமெரிக்காவுக்கு டிரெயின்லயே போகலாம்’, ‘எம் பேரு நூறு வாட்ஸ் பல்பு. எனக்கு நாப்பது வாட்ஸ், இருபது வாட்ஸ்னு ரெண்டுதம்பிங்க...’ கிரேஸி மோகனின் ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ தொடங்கி 41 ஆண்டுகள்

By வி. ராம்ஜி

வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை தேன் தடவி, குபீர் ஆனந்தத்தைத் தந்த கிரேஸி மோகனை எப்படி மறக்கமுடியும்? திரையுலகில் காமெடிக்கு புதியதொரு இலக்கணத்துக்கு வித்திட்ட கிரேஸி மோகன், பலருக்கும் டிராமா எழுதினாலும், ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ எனும் குழுவைத் தொடங்கி நாடகங்கள் அரங்கேற்றி, பிரபலமானார். அப்படி தமிழ் நாடகத்துறை மூலம், கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவின் முதல் நாடகம் அரங்கேறி, 41 ஆண்டுகளாகின்றன.

இதுகுறித்து, கிரேஸி மோகனின் சகோதரரும், கிரேஸி கிரியேஷன்ஸின் ஹீரோவுமான ‘மாது’பாலாஜி, தெரிவித்திருப்பதாவது:

’’1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி. இந்தநாளில்தான் ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ குழு தொடங்கப்பட்டது. ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ தொடங்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவது... நாங்கள் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு ‘ட்ரூப்’ ஆரம்பிக்கவேண்டும்’ என்று நினைத்தோம். ஆரம்பித்தோம்.

இரண்டாவது... கிரேஸி மோகன், அப்போது வெளி ட்ரூப்புகளுக்கு நிறைய நாடகங்கள் எழுதினான். காத்தாடி ராமமூர்த்தி மூன்று டிராமாக்கள் எழுதினான். எஸ்.வி.சேகருக்கு மூன்று டிராமாக்கள் எழுதினான். அந்த சமயத்தில்தான், ‘நாமே நமக்காக ஒரு ட்ரூப் உருவாக்கி, நாடகங்கள் போட்டால் என்ன’ என்று மோகனுக்குத் தோன்றியது.

அந்தசமயத்தில் நிறையபேர் கேட்டார்கள்... ‘என்ன திடீர்னு ஒரு டிராமா ட்ரூப் ஆரம்பிக்கிறியே... இது சரியா வருமா? எஸ்.வி.சேகர்கிட்டேருந்து பிரிஞ்சு ஆரம்பிக்கிறீர்களே?’ என்றெல்லாம் கேட்டார்கள். அனைத்துக்கும் மோகன் அழகாக பதில் சொன்னான்... ’ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. இங்கே... கூத்தாடி ரெண்டுபட்டா ஊருக்குக் கொண்டாட்டம். தமிழ்நாட்டுக்கு ரெண்டு நாடக ட்ரூப் கிடைச்சிருக்கு. அவர் அண்ணாமலை மன்றத்துல டிராமா போட்டார்னா... நான் ஆர்.ஆர்.சபால நாடகம் போட்டுப்பேன். இல்லேன்னா, அவர் இங்கே நாடகம் போட்டார்னா, நான் அங்கே நாடகம் போட்டுக்கறேன்’ன்னு பதில் சொன்னான்.

எல்லாத்தையும் விட, தன்னுடைய நண்பர்களை வைச்சிக்கிட்டு, ஒரு ட்ரூப் ஆரம்பிச்சு, அதை வெற்றிகரமா நடத்தமுடியும்னு அசைக்கமுடியாத நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

அந்த சமயத்தில், விகடனில் மோகன் எழுதிக்கொண்டிருந்தான். அதை சிலசமயம் நான் கொண்டுபோய்க் கொடுப்பேன். அப்படியொரு தடவை கொடுக்கும்போது, பரணீதரன் சார் எங்கிட்ட கேட்டார். ‘மெரீனா’ங்கற பேர்ல டிராமாலாம் எழுதிட்டிருந்தார் அவர். ‘என்னப்பா... சேகரை விட்டுட்டு வந்துட்டானே மோகன். இப்ப என்ன பண்ணப் போறான்?னு கேட்டார்.

‘என்ன பண்ணப் போறான்னு தெரியல சார். ஆறு மாசமா எதுவும் எழுதலை’ன்னு சொன்னேன்.

‘அப்படிலாம் இருக்கக்கூடாதுப்பா. மோகன் பெரிய ரைட்டர். இன்னும் இருபத்தஞ்சு முப்பது வருஷத்துல காமெடிக்கு புது இலக்கணம் படைக்கப் போறான் மோகன். அவனை எழுதச் சொல்லுங்க. நீ என்ன பண்றே? நண்பர்களையெல்லாம் சேர்த்து ட்ரூப் ஆரம்பிங்க’ன்னு தீர்க்கதரிசி மாதிரி சொன்னார்.

அப்போ, எல்லாரும் உக்கார்ந்து மோகனுக்கு வேப்பிலை அடிச்சாங்க. ‘மத்தவங்களுக்கு டிராமா எழுதினது போதும். நாம ஒரு ட்ரூப் ஆரம்பிப்போம், நீ எழுது’ன்னு எல்லாரும் சொன்னாங்க. ’உனக்குன்னு ஒரு ட்ரூப் வேணும். உனக்குன்னு ஒரு தனித்தன்மை வேணும். உனக்காக உன் நண்பர்கள் காத்துட்டிருக்கோம்’னு அத்தனை பேருமா சொன்னோம். அன்னிக்கி சாயந்திரமே, மோகன் ஆரம்பிச்சதுதான் ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ங்கற ட்ரூப்.

‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ ஆரம்பிச்சதும், தன்னோட முக்கியமான ரெண்டு நண்பர்களுக்கு முக்கியமான பதவியைக் கொடுத்தான். ஒருத்தர்... ஜி.சீனிவாசன். அவர்தான் ட்ரூப்புக்கு செகரட்டரி. இன்னொருத்தர்... எஸ்.பி.காந்தன். அவர்தான் டைரக்டர். இன்னி வரைக்கும் எங்க டிராமாவுக்கு டைரக்டர் அவர்தான். அதாவது ஸ்கிரிப்ட்டைக் கொடுத்ததும், அதை எடிட் பண்ணி, அதுக்கு சீன் செட்டு, லைட்டு, மைக், காஸ்டியூம், ஆர்ட்டிஸ்ட்டுக்கு டயலாக் சொல்லிக் கொடுத்து அதை மேடைக்குக் கொண்டு வரவேண்டியது காந்தனோட பொறுப்பு.

அதை மேடைக்குக் கொண்டு வந்ததும், சபா செகரட்டரியோட பேசுறது, நிறைய ஷோக்கள் போடுறது, சபாக்களோட ஒரு நல்ல உறவு வைச்சிக்கறது... அது நூறு ஷோவோ, இருநூறு ஷோவோ... ஆயிரம் ஷோவோ... அதை எல்லாமே சீனிவாசன் பொறுப்பு. அதுமட்டுமில்லாம, வெளியூர் போறதுக்கு டிக்கெட் புக் பண்றதுன்னு எல்லாமே சீனிவாசன் பொறுப்பு.

அப்படித்தான், முதன்முதல்ல அமெரிக்கால போய் டிராமா போடுறதுன்னு முடிவாச்சு. அப்போ வாசு (சீனிவாசன்), ’டேய் மோகன், ஃப்ளைட்லாம் வேணாம்டா. அமெரிக்காவுக்கு டிரெயின்லயே போயிடலாம்டா. இது ரொம்ப ரிஸ்க்குடா’ன்னு சொன்னானாம். அதுக்கு மோகன், ‘இல்லடா... அமெரிக்காவுக்கு ஃப்ளைட்லதான் போகமுடியும். ட்ரெயின்லலாம் போகமுடியாது’ன்னு சொல்லி புரியவைக்கறதுக்குள்ளே போதும்போதும்னு ஆயிருச்சு.

‘கிரேஸி கிரியேஷன்ஸின் முதல் நாடகம், ‘அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்’. திருவல்லிக்கேணில இருக்கிற, ஒண்டுக்குடித்தனத்தை வைச்சு எழுதப்பட்ட கதை. மோகனுக்கு திருவல்லிக்கேணி ரொம்பப்பிடிக்கும். ஏன்னா, மோகன் எஞ்சினியரிங் படிக்கும் போது, அங்கே சம்பத்குமார்ங்கறவர்கிட்ட டியூஷன் போவான். அதனால தினமும் திருவல்லிக்கேணி போவான். அந்த ஏரியாவே பரிச்சயம் அவனுக்கு. அப்புறம் பார்த்தசாரதி பெருமாள் கோயில். அப்புறம் பாரதியார். எல்லாத்தையும் விட, மோகனோட ஆதர்ஷ குரு கோபு சார், இருந்த ஏரியா. இதனாலேயே, முதல் டிராமால திருவல்லிக்கேணி இருக்கணும்னு மோகன் முடிவு பண்ணினான்.
ஒண்டுக்குடித்தன போர்ஷன். நாலஞ்சு வீடு இருக்கும். அங்கே மாது, அவன் அப்பா, அம்மா மூணுபேரும் ஒரு வீட்ல இருப்பாங்க. ’மாது’ன்னு ஏன் பேர்வைச்சான் தெரியுமா? பாலசந்தர் சாரோட ‘எதிர்நீச்சல்’ மோகனுக்கு ரொம்பப் பிடிச்ச படம். அதுல நாகேஷோட கேரக்டர் பேரு... மாது. அதனால, நம்ம டிராமாவுலயும், ஹீரோவுக்கு மாதுன்னு பேர் வைக்கணும்னு முடிவுபண்ணினான்.

அந்தக் கதைல ‘மாது’ கேரக்டர், படிக்காதவன். சோம்பேறி. யாரா இருந்தாலும் எதிர்த்துப் பேசிக்கிட்டு, தமாஷாப் பேசிக்கிட்டு இருக்கிற கேரக்டர். அந்தக் காலத்துல இந்த மாதிரியான கேரக்டர் பெருசா எடுபட்டிருந்தது. அதனால அப்படியொரு கேரக்டர் பண்ணி, எனக்குக் கொடுத்தான்.

நாலஞ்சு ஒண்டுக்குடித்தனம். வீட்டு ஓணர் ஒரு கோனார். வாசப்பக்கம் நல்லதம்பி தெரு. கொல்லைப்பக்கம் பிக் ஸ்ட்ரீட். ரெண்டு தெருவுக்கு நடுவுல ஒரு வீடு. அந்தக் காலத்துல மேடைல சொல்லும்போதே எல்லாரும் சிரிப்பாங்க. கதையை எங்ககிட்ட சொல்லிட்டு மோகன் எழுத ஆரம்பிச்சிட்டான். அப்போ காந்தன், ‘முதன் முதல்ல நம்ம ட்ரூப்ல டிராமா போடுறோம். ஹீரோ உட்பட எல்லா கேரக்டரையும் புதுவிதமா அறிமுகப்படுத்தணும்னு சொன்னார். அப்பதான் நூறு வாட்ஸ் பல்பு, எல்லாரையும் அறிமுகப்படுதற ஐடியா வந்துச்சு.

என்னோட நண்பன் எல்.ராஜ்மோகன். அவன், எல்.ஆர்.சுவாமியோட பேரன். அவன், சிங்கப்பூர்லேருந்து ஒரு பல்பு வாங்கிட்டு வந்தான். அந்த பல்புல ஒரு பேட்டரி இருக்கும். அதை கையில வைச்சுக்கணும். கால் பூமில படுறதுனால எர்த்தாகும். உடனே பேட்டரி மூலமா பல்பு எரியும். ரொம்ப த்ரில்லிங்கா இருந்துச்சு. இந்த பல்பை வைச்சிக்கிட்டு, அறிமுகப்படுத்தலாம்னு ஐடியா வந்துச்சு.

இதுல என்ன காமெடின்னா, மோகன் எப்பவுமே நிறைய எழுதுவான். ஆல்ரெடி, டிராமாவே எழுதிமுடிச்சிட்டான். இந்த அறிமுகக்காட்சிங்கற ஒரு சீனை மட்டும், அறுபது எழுபது பக்கத்துக்கு எழுதிவைச்சிருந்தான். ’நான் தான் நூறுவாட்ஸ் பல்பு பேசுறேன். எனக்கு ரெண்டு பிரதர். ஒருத்தன் ஃபார்ட்டி வாட்ஸ் பல்பு. இன்னொருத்தன் டொண்ட்டி வாட்ஸ் பல்பு.எங்க அண்ணன் ஒருத்தன் இருக்கான். அவன் சரியான மக்கு. டியூப்லைட்டுன்னு பேரு அவனுக்கு’ன்னு ஆரம்பிச்சு அறுபது பக்கம் எழுதிட்டான்.
டிராமாலாம் எழுதி ரிகர்சல் பாத்துட்டிருக்கும் போது ஒரு விஷயம்... ‘பாலாஜி இதுக்கு ஃபிட்டாகலை. ரொம்ப சைல்டீஷா இருக்கான்., குழந்தைத்தனமா இருக்கான்.டிராமா போட்டீங்கன்னா எடுபடாது அப்படின்னு பல பேர் பயமுறுத்திட்டாங்க. அப்ப மோகனுக்கு நைட் ஷிப்ட். காந்தனும் வேலைக்குப் போயிட்டிருந்தார். ஸ்கிரிப்ட்டை எடுத்துக்கிட்டு டி.வி.வரதராஜன்கிட்ட போனோம். அப்பதான் அவர் நடிக்க வந்துட்டிருந்த சமயம். ’மாது கேரக்டர்ல நீங்க நடிங்க’ன்னு சொன்னோம். அவரும் ஓகேன்னு சொல்லிட்டார். வசனம்லாம் மனப்பாடம் பண்ண ஆரம்பிச்சிட்டார்.

ஆனா, எங்க ட்ரூப்ல நிறையபேருக்கு கவிதாலயா கிருஷ்ணன், வாசு, காந்தன், அப்பா ரமேஷ் உட்பட பலருக்கும் ஒரே வருத்தம், கோபம். ’நான் தான் நடிக்கணும்’னு உறுதியா இருந்தாங்க. எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க. வரதுகிட்ட போய் ஸாரி கேட்டோம். ஸ்கிரிப்ட்டை வாங்கிட்டு வந்தோம். நான் ரிகர்சல் பாத்தேன். செப்டம்பர் 7ம் தேதி நாடகம் அரங்கேறியது. இன்றுடன் ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ தொடங்கி 41 வருடங்களாகின்றன’’

- என்று நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக தெரிவித்தார் ‘மாது’ பாலாஜி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

35 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்