'புரியாத புதிர்' வெளியாகி 30 ஆண்டுகள்: கே.எஸ்.ரவிகுமாரின் அரிதான சாதனை  

By ச.கோபாலகிருஷ்ணன்

1990-ல் இதே நாளில் (செப்டம்பர் 7) வெளியான திரைப்படம் 'புரியாத புதிர்'. ரகுவரன். ரேகா, ரகுமான், ஆனந்த்பாபு, சித்தாரா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 'தர்க்கா' என்ற கன்னடப் படத்தின் தமிழ் மறு ஆக்கமான இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானர் கே.எஸ்.ரவிகுமார். அந்த வகையில் கே.எஸ்.ரவிகுமார் இயக்குநராக அறிமுகமாகி இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்டிருந்த ரவிகுமார் முதலில் தன்னுடைய நண்பரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த படங்களின் படப்பிடிப்பை காணச் சென்றார். அப்படியே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். விக்ரமனின் அறிமுகப் படமான 'புது வசந்தம்' படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அந்தப் படத்தைத் தயாரித்த சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஆர்.பி.செளத்ரி, 'தர்க்கா' தமிழ்ப் பதிப்புக்கான திரைக்கதை எழுதும் பணியை ரவிகுமாரிடம் ஒப்படைத்தார். பிறகு ரவிகுமாரே இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்றார். முதலில் தயங்கிய ரவிகுமார் பிறகு ஒப்புக்கொண்டார். இப்படி உருவான 'புரியாத புதிர்' 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெற்றிபெற்றது. ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது.

இந்தப் படத்தில் தன் இயக்குநர் பயணத்தைத் தொடங்கிய ரவிகுமாரின் இரண்டாவதாக அதே சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு 'சேரன் பாண்டியன்' படத்தை இயக்கினார். கிராமிய பின்னணியில் உடன்பிறப்புகளுக்கிடையிலான பாசத்தை மையப்படுத்திய இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றிபெற்றது. அதுவரை வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வந்த சரத்குமாருக்கு நாயக அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்தது. இதைத் தொடர்ந்து சரத்குமாரும் ரவிகுமாரும் இணைந்து பத்து படங்களைக் கொடுத்தனர். இவற்றில் 'நாட்டாமை', நட்புக்காக' ஆகிய இரண்டு படங்கள் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றன. பல மொழிகளில் மறு ஆக்கம் கண்டன.

சரத்குமார் மட்டுமல்லாமல் ரஜினிகாந்த், கமல் ஹாசன். விஜயகாந்த், பிரபு, சத்யராஜ். கார்த்திக், அர்ஜுன். விஜய், அஜித், சூர்யா, சிலம்பரசன் என தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடைய படங்களை இயக்கியிருக்கிறார் ரவிகுமார். ரஜினிக்கு 'முத்து', 'படையப்பா' போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். கமலுடன் 'அவ்வை சண்முகி' தொடங்கி 'மன்மதன் அம்பு' வரை ஐந்து படங்களில் பணியாற்றியவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இந்தியிலும் சில படங்களை இயக்கியிருக்கிறார்.

ரவிகுமார் படங்கள் என்றாலே ஜனரஞ்சக அம்சங்கள் நிரம்பிய சுவாரஸ்யமான திரைக்கதை இருக்கும் என்று நம்பிக்கையுடன் திரையரங்குக்குச் செல்லலாம். காதல்., சென்டிமெண்ட், ஆக்‌ஷன். நகைச்சுவை என அனைத்து விஷயங்களிலும் ரசிகர்களுக்குக் குறையில்லாத திருப்தியை அளிக்க ஒவ்வொரு படத்திலும் மெனக்கெடுவார். பெரும்பாலான படங்களில் திரைக்கதை வேகமாகப் பயணிக்கும். ஆங்காங்கே சில புதிய திரைக்கதை உத்திகளையும் பயன்படுத்தியிருப்பார். 'பிஸ்தா' படத்தில் நக்மாவுக்கும் அவருடைய அக்காவான ஜெயஸ்ரீக்குமான நெருக்கத்தைப் புகைப்படங்கள் மூலமாகச் சொல்வது ஒரு ரவிகுமாரின் புதிய திரைக்கதை உத்திகளுக்கு ஒரு சிறந்த உதாரணம். அதேபோல் நட்சத்திர நடிகர்களின் இமேஜுக்கேற்ப கதை, திரைக்கதை, வசனங்களை அமைப்பதில் வல்லவர்.

ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் மக்களைப் பெரிதும் கவர்ந்தவர் ரவிகுமார். தான் இயக்கிய படங்கள் அனைத்திலும் ஒரே ஒரு காட்சியிலாவது தலைகாட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் ரவிகுமார் பி.வாசு, ஹரி, செல்வா உள்ளிட்ட மற்ற இயக்குநர்களின் படங்களிலும் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியிருக்கிறார். பலவகையான குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் கவர்ந்திருக்கிறார். வில்லனாகவும் சில படங்களில் மிரட்டியிருக்கிறார். அண்மைக் காலங்களில் அதிக படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கும் 'கோப்ரா' உள்பட பல முக்கியமான படங்களில் தற்போது நடித்துவருகிறார்.

இப்படியாக வெகுமக்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் மிகவும் பிடித்த இயக்குநரான ரவிகுமார் முக்கியமாகத் தயாரிப்பாளர்களின் இயக்குநர். 'புரியாத புதிர்' படத்தை திட்டமிட்ட நாட்களை விட குறைவான நாட்களில் முடித்து முதல் படத்திலேயே தயாரிப்பாளரின் செலவை மிச்சப்படுத்தியவர். 'ரெமோ' படத்தில் தான் நடித்துக் கொடுக்க வேண்டிய காட்சிகளை விரைவாக முடிக்கப்பட்டுவிட்டதால் மிச்சமான நாட்களுக்கான முன்பணத்தைத் திருப்புக் கொடுத்தவர். ஒவ்வொரு படத்தையும் தயாரிப்பாளர்கள் வெற்றிபெறுவதை முதன்மைப்படுத்தி இயக்கியவர்.

போட்டி நிறைந்த சினிமா உலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்வது என்பது மிகப் பெரிய சாதனை. இப்போதும் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருப்பது இந்த அரிதான சாதனைப் பட்டியலில் ரவிகுமார் இணைந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடன் கொண்டாடத்தக்கச் சாதனை என்பதில் ஐயமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்