அப்பா தெளிவாக, பிரகாசமாக இருக்கிறார்; கரோனா தொற்று நெகட்டிவ்: எஸ்பிபி சரண்

அப்பா தெளிவாக, பிரகாசமாக இருக்கிறார் எனவும் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார் என்றும் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை அறிக்கை தவிர்த்து அவருடைய மகன் எஸ்பிபி சரணும் அவ்வப்போது அப்பாவின் நிலை குறித்து ட்வீட்களும், வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று (செப்டம்பர் 7) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

"அனைவருக்கும் வணக்கம், வார இறுதியில் அப்பா உடல்நிலை குறித்து பகிராமல் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நல்ல செய்திக்காகக் காத்திருந்தோம்.

செயற்கை சுவாச உதவியை நீக்கும் அளவுக்கு அப்பாவின் நுரையீரல் செயல்பாடு முன்னேறும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பா அந்த நிலைக்கு இன்னும் செல்லவில்லை. ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், அப்பாவுக்கு கரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்).

இதற்கு முன், அப்பாவுக்குத் தொற்று இருக்கிறது, இல்லை என்பது முக்கியமில்லை என்று சொல்லியிருந்தேன். ஏனென்றால் நுரையீரல் சீக்கிரம் குணமாகும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அவை குணமாகி வருகின்றன. ஆனால் அதற்குச் சற்று நேரம் பிடிக்கிறது.

இதைத் தாண்டி, வார இறுதியில், அப்பா அம்மாவின் திருமண நாளையொட்டி சிறிய அளவில் கொண்டாடினோம். அப்பா தனது ஐபேடில் நிறைய கிரிக்கெட்டும், டென்னிஸும் பார்த்து வருகிறார். விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிவிட்டன என்பதில் அவருக்கு மகிழ்ச்சி. ஐபிஎல்லை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளார்.

நிறைய எழுதி எங்களிடம் தகவல் சொல்கிறார். மயக்க நிலையில் இல்லை. தெளிவாக, பிரகாசமாக இருக்கிறார். திட்டமிட்டபடி ஃபிசியோதெரபி சிகிச்சை நடந்து வருகிறது.

உங்கள் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு மீண்டும் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து பிரார்த்திப்போம். நான் என் அப்பா உட்பட அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து வருகிறேன். நீங்களும் செய்வீர்கள் என நம்புகிறேன். நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருப்போம்"

இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE