வாரிசு அரசியலைப் பற்றிய விவாதம் சிக்கலானது: ராதிகா ஆப்தே

வாரிசு அரசியலைப் பற்றிய விவாதம் சிக்கலானது என்றும், அது திரைத்துறையைப் பற்றியது மட்டுமே இல்லை என்றும் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

சமீபத்தில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தற்போது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வரும் பாலிவுட்டின் வாரிசு அரசியல் பற்றிய கேள்விக்கு ராதிகா ஆப்தே பதில் கூறியிருக்கிறார்.

"நான் இந்த விவாதத்தில் பங்கெடுக்கவே விரும்பவில்லை. இது பின்புலம் இருப்பவர்கள், வெளியிலிருந்து வருபவர்கள் என்பது பற்றி அல்ல. இது இன்னும் பெரிய அளவிலான விஷயம். இதற்கு ஒரே ஒரு பதில் மட்டுமே கிடையாது. ஒரு சமூகமாக நாம் வாரிசு அரசியலுக்கு அதிக ஆதரவு கொடுத்திருக்கிறோம். திரைத்துறையில் மட்டுமே அல்ல. எல்லாவற்றையும் மாற்ற வேண்டுமென்றால் நாம் அனைவரும் அதைப் பார்க்கும் பார்வை மாற வேண்டும்.

பின்புலம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என யாராக இருந்தாலும் பாலிவுட்டில் வெற்றி பெறுவது கடினம் என்றே நான் நினைக்கிறேன். வெற்றி என்பது ஒரு (செல்வாக்குள்ள) குடும்பத்தில் பிறப்பது மட்டுமல்ல. இது ஒரு சிக்கலான விஷயம். இதற்கான விடையைச் சொல்வது எளிதல்ல" என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

முன்னதாக அளித்திருந்த ஒரு பேட்டியில் தான் புகழுக்காக நடிக்க வரவில்லை என்றும், சவுகரியமான ஒரு விஷயத்தை மட்டுமே சார்ந்து திருப்தி அடைய மாட்டேன் என்றும் ராதிகா ஆப்தே கூறியிருந்தார்.

2005-ம் ஆண்டு சிறிய கதாபாத்திரம் மூலம் அறிமுகமான ராதிகா ஆப்தே 'ஷோர் இன் தி சிட்டி', 'பத்லாபூர்', 'ஃபோஃபியோ' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'கபாலி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE