ரியாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்

நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை தொடர்பாக சிக்கல்கள் எழ சிபிஐ நடத்திய விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபர்த்தி உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தனியாக வழக்குப் பதிவு செய்து, ரியா சக்ரபர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்ரபர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாமுவேல் மிரண்டா ஆகியோரைக் கைது செய்தனர். இருவரையும் வரும் 9-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மும்பை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் ரியா சக்ரபர்த்தியிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

நேற்று (07.09.2020) பால்லார்ட் பகுதியில் உள்ள என்சிபி அலுவலகத்துக்கு மதியம் 12 மணியளவில் வந்த ரியாவிடம் மாலை 6 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.

ரியா அளித்த பதில்கள் தெளிவாக இல்லாததால் அவருக்கு இன்று மீண்டும் சம்மன் அனுப்பபட்டு விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரியாவின் சகோதர் ஷோயிக், சாமுவேல் மிரண்டா, ஆகியோருடன் ரியாவுக்கு இருக்கும் தொடர்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இது தொடர்பான வாட்ஸப் மேசேஜ், இமெயில் உள்ளிட்ட ஆதாரங்களையும் சேகரித்து வருவதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE