இந்தியாவின் மகள்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் - சஞ்சய் ராவத்தை சாடிய கங்கணா

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட், போதைப் பொருள், வாரிசு அரசியல் என்று அடுத்தடுத்த குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நடிகை கங்கணா ரணாவத், சில நாட்களுக்கு முன்பு மும்பை காவல்துறையையும் சாட ஆரம்பித்தார்.

மேலும், மும்பை காவல்துறையால் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் வெளிப்படையாகக் கூறிய கங்கணா, "சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், நான் மும்பை வரக்கூடாது என வெளிப்படையாக மிரட்டியுள்ளார். மும்பை வீதியின் சுவர்களில் விடுதலை வேண்டும் என்ற சுவரோவியங்களுக்குப் பின் இப்போது வெளிப்படையான மிரட்டல்களும் வருகின்றன. ஏன் மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போலத் தோன்றுகிறது" என்று ட்வீட் செய்திருந்தார்

இதற்குப் பதிலளித்திருந்த சஞ்சய் ராவத், கங்கணா ரணாவத் மும்பை காவல்துறையையும், மகாராஷ்டிர மாநிலத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்றும், அவ்வளவு பயமிருப்பவர் மும்பைக்குத் திரும்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தார். மேலும், கங்கணா மீது உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சஞ்சய் ராவத்துக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார் கங்கணா. அதில் அவர் கூறியிருப்பதாவது:

சஞ்சய் ராவத் ஜி, நீங்கள் என்னை மோசமான பெண் என்று கூறியுள்ளீர்கள். நீங்கள் என்னை அவமானப்படுத்தியிருக்கீர்கள். நீங்கள் ஒரு அரசாங்க அதிகாரி என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் அல்ல ஒவ்வொரு மணி நேரம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, குடும்ப வன்முறைக்கு உள்ளாகி, அவமானப்படுத்தப்படுகிறார்கள். இதற்கெல்லாம் யார் காரணம் தெரியுமா? உங்களை போன்ற மனநிலை கொண்டவர்கள்தான்.

இந்த நாட்டின் மகள்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதென அமீர்கான் கூறும்போது யாரும் அவரை அவமானப்படுத்தவில்லை. நசீருதீன் ஷா சொல்லும்போது எதுவும் நடக்கவில்லை. இதற்கு முன்பு பலமுறை நான் மும்பை காவல்துறை புகழ்ந்து பேசியுள்ளேன். ஆனால் சுஷாந்த் மரணத்துக்கு பின்பு நடந்த சில சம்பவங்களில் மட்டுமே அவர்களை நான் விமர்சித்தேன்.

இது என்னுடைய கருத்துரிமை. உங்களுக்கும் உங்கள் மனநிலைக்கும் என்னுடைய கண்டனங்கள். நீங்கள் மட்டுமே மகாராஷ்டிரா அல்ல. நான் மகாராஷ்டிராவை இழிவுபடுத்துகிறேன் என்று நீங்கள் சொல்லமுடியாது. நீங்கள் என்னை மிரட்டுகிறேன். செப். 9 அன்று மும்பை வரத்தான் போகிறேன். அப்போது பார்க்கலாம். ஜெய் ஹிந்த், ஜெய் மகாராஷ்டிரா.

இவ்வாறு கங்கணா பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE