மம்முட்டி பிறந்த நாள் ஸ்பெஷல்: நித்ய சுந்தரம்

By மண்குதிரை

மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர், கேரளத்தின் சுந்தர புருஷன் (ஆணழகன்) என மம்முட்டியை வியந்திருக்கிறார். அவர் சொன்னதுபோல் இரு தலைமுறைகளுக்கு மம்முட்டிதான் மலையாளத்தின் புருஷ சங்கல்பம். இயக்குநர் ஹரிகரனின் 'ஒரு வடக்கன் வீரகத', 'கேரள வர்ம பழசிராஜா' ஆகிய படங்களும் மம்முட்டியின் இந்தப் புருஷ லட்சனத்தை இன்னும் திடமாக்கின. 'மெளனம் சம்மதம்' மூலம் தமிழிலும் மம்முட்டிக்கு அப்படி ஒரு அடையாளம் கிடைத்தது. கே.பாலச்சந்தரின் 'அழகன்' அதன் அடிப்படைதான். இங்கும் மம்முட்டி, புருஷ லட்சணத்துக்கு முன்னுதாரணம் ஆக்கப்பட்டார். ஆனால், மம்முட்டியின் இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் சொல்வதுபோல் அழகைத் தாண்டிய பிரயத்தனம்தான் மம்முட்டியை இந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது.

ஆழப்புழைக்கு அருகில் சிற்றூரில் பிறந்த முகம்மது குட்டி, தனது இடவிடாத அந்தப் பிரயத்தனத்தால்தான் 21-ம் வயதில் சினிமா தலை காண்பிக்க முடிந்தது. ஆனால் சினிமாவில் ஒரு வார்த்தை அவருக்குப் பேச இரு வருடங்கள் காத்திருக்க வேண்டிவந்தது. கதாநாயகனாக வெள்ளித்திரையில் துலங்க இன்னும் பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டிவந்தது. இந்தக் காத்திருப்புகளும் இடைவிடா முயற்சியும் மம்முட்டிக்கு வெற்றிக்கான வழிகளைத் திறந்து தந்தன.

கே.எஸ்.சேதுமாதவனின் 'அனுபவங்கள் பாளிச்சகல்' படத்தில் பழம்பெரும் மலையாள நடிகரான பகதூருக்கு அருகில் வசனம் இன்றிச் சூழல் நடிகராக முகம் காண்பித்ததுதான் மம்முட்டியின் முதல் சினிமா அனுபவம். அதற்குப் பிறகு 'காலச்சக்கரம்; என்னும் படத்தில் அடூர் பாஷியுடன் வசனம் பேசும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். எம்.டி.வாசுதேவன் நாயர் கதையில் வெளிவந்த 'வில்காணுண்டு ஸ்வனங்கள்' படத்தில் ஒரு நாயகத் துணைக் கதாபாத்திரமாக உயர்ந்தார்.

கே.ஜி.ஜார்ஜின் 'மேள' படம்தான் மம்முட்டியின் முகத்தைப் பார்வையாளர்களுக்குப் பரிச்சயப்படுத்தியது. மம்முட்டியின் சினிமா ஜீவிதத்தில் கே.ஜி.ஜார்ஜின் படங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அவரது பிற்காலத்தியத் துப்பறியும் காவல்துறை படங்களுக்குத் தொடக்கம் என கே.ஜி.ஜார்ஜின் 'யவனிக'வைச் சொல்லலாம். கே.ஜி.ஜார்ஜுடன் மம்முட்டி ஏழு படங்களில் இணைந்திருக்கிறார். கே.ஜி.ஜார்ஜுக்கு அடுத்தபடியாக மம்முட்டியின் வளர்ச்சியில் ஐ.வி. சசியின் படங்களுக்கும் பங்குண்டு. எண்பதுகளின் தொடக்கத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் அறிமுகமாகி ஐந்தாண்டுகளிலேயே நாயக அந்தஸ்து பெற்றதற்கு சசியின் படங்கள் பெரும் பங்காக ஆயின. மம்முட்டிக்கு முதல் விருதைப் பெற்றுத் தந்ததும் சசியின் படமே. 32 படங்களுக்கு மேல் இருவரும் பாங்காற்றியுள்ளனர். 'ஈ நாடு'. 'ம்ருகயா', 'இன்ஸ்பெக்டர் பல்ராம்' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களும் மலையாள சினிமாவுக்குக் கிடைத்தது. மம்முட்டி சூப்பர் ஸ்டாராக உயர்ந்த காலகட்டத்தில் அவருக்கு இயக்குநர் ஜோஷியின் படங்கள் கைகொடுத்தன. 'நியூடெல்ஹி', 'நிறக்கூட்டு', 'கெளரவர்', 'த்ருவம்' போன்ற பல ஜோஷிப் படங்கள் மம்முட்டியின் சினிமா மதிப்பைக் கூட்டின. இதற்கு அடுத்தபடியாக இயக்குநர் கே.மது – எஸ்.என்.சாமி கூட்டணியில் சேதுராமன் ஐயர் படங்கள் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை மம்முட்டிக்குத் தேடித் தந்தன. தமிழில் வெளிவந்த 'மெளனம் சம்மதம்' இந்த இணையின் ஆக்கமே.

மம்முட்டியின் இந்த சினிமா வளர்ச்சி என்பது தேடலிலிருந்தே உருவானது. 2009-ல் வெளிவந்த இயக்குநர் ரஞ்சித்தின் 'பாலேறி மாணிக்கம் ஒரு பாதிரா கொலபாதம்' சினிமாவுக்கான வாய்ப்பு தேடிப் போய் வாங்கியது என மம்முட்டி ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணனின் 'அனந்தரம்' படத்தில் இரண்டாம் நாயகனாக நடிக்கும் வாய்ப்பை அவராகத் தேடிச் சென்று வாங்கியதுதான். அடூருடன் இணைந்து பணியாற்றிய அடுத்த இரு படங்களுக்காக மம்முட்டிக்குத் தேசிய விருது கிடைத்தது.

மம்முட்டி, இயக்குநர்கள் சசி, ஜோஷி, மது ஆகியோருடன் பணியாற்றியதுபோல் மலையாளத்தின் மாற்று சினிமா முயற்சிகளிலும் பங்கு வகித்துள்ளார். டி.வி.சந்திரனின் 'பொந்தன்மாட', ஷாஜி என் காருணின் 'குட்டி ஸ்ராங்', ஷியாமபிரசாதின் 'ஒரே கடல் உள்ளிட்ட பல உதாரணங்களைச் சொல்லலாம். அதேபோல் புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மம்முட்டி ஆர்வத்துடன் இருப்பவர் என இயக்குநர் ரஞ்சித் குறிப்பிடுகிறார். ப்ளஸ்ஸி, ஆஷிக் அபு, ரஞ்சித் ஷங்கர், லால் ஜோஸ், ஷலீம் அகமது, அன்வர் ரஷீத், காலீத் ரஹ்மான் போன்ற இயக்குநர்கள் இதற்கு உதாரணம்.

கேரளத்தில் மோகன்லாலை ஸ்ரீகிருஷ்ணன் என்றும் மம்முட்டியை ஸ்ரீராமன் என்றும் விளிக்கும் பழக்கம் உண்டு. இதில் சில பொருத்தக்கேடு இருந்தாலும் இந்த விளிப்பதற்கான காரணம், மம்முட்டி கட்டுப்பிடியாகக் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள். ஜீவிதத்திலும் சினிமாவிலும் மம்முட்டி அதைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கக்கூடியவர். ஒரு சினிமாவுக்காகத் மம்முட்டி தன்னை உருமாற்றிக்கொள்வார். சினிமாவில் அவருக்கான கதாபாத்திரத்தின் உருவ வித்தியாசம், அந்தக் கதை நடக்கும் பகுதியின் வட்டார பாஷை எனப் பார்த்துப் பார்த்துத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வழக்கம் அவருக்கு உண்டு. அதனால் 'ம்ருகயா'வில் வேட்டைக்காரன் வாருண்ணியிலும் 'தனியாவர்த்தன'த்தில் கோபாலன் மாஸ்டரிலும் 'விதேய'னில் பாஸ்கரப் பட்டேலரிலும் மம்முட்டி என்னும் தனி மனிதனின் ஒரு அம்சத்தையும் பார்க்க முடியாது. லோஹிததாஸின் 'பூதக்கண்ணாடி'யில் தனது திடகாத்திரமான உருவத்தை ஒரு பயந்த சுபாவக்காரனாக குறுக்கியிருப்பார் மம்முட்டி. கதாபாத்திரத்துக்கான குரலின் தனித்துவத்திலும் மம்முட்டி மெனக்கிடக்கூடியவர். 'ஆள்கூட்டத்தில் தனியே'வில் ஒலிக்கும் குரலுக்கும் '1921'ல் உள்ள குரலுக்கும் வித்தியாசம் காண்பிக்கக்கூடியவர். 'பாலேறி மாணிக்கம் ஒரு பாதிரா கொலபாதக'த்தில் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களையும் மூன்று விதமாக வெளிப்படுத்தியிருப்பார். மம்முட்டியியின் இந்தக் குரல் பிரயத்தனத்தைக் கண்டுதான் மோகன்லாலும் தன்னைத் திருத்திக்கொண்டார் என ஃபாசில் ஒரு பத்திரிகை விவாத நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார்.

மம்முட்டியின் இந்தச் சிட்டையான பழக்கவழக்கத்தால் அவருக்கு ஆட்களைத் தீர்மானிக்க முடிந்திருக்கிறது. மம்முட்டி நாயகனாக கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வில்லனாக நடித்த மோகன்லால் தனக்குப் பெரும் சவாலான நாயகனாக வருவான் என முன்கூட்டியே திரைக்கதை ஆசிரியர்/நடிகர் ஸ்ரீனிவாஸனிடம் பகிர்ந்திருக்கிறார். உதயா ஸ்டுடியோவில் பார்த்த ஒரு நெட்டையான நரம்புப் பையனை, “வாய்ப்பு கிடைத்தால் இவன் மலையாளத்தின் முன்னணி இயக்குநர் ஆவான்” என பிரியதர்ஷனைச் சொல்லியிருக்கிறார்.

சினிமாவின் வட்டார மொழியின் சிறப்புக்கு மம்முட்டியின் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். இயக்குநர் ரஞ்சித்தின் 'பிராஞ்சியேட்டன் அண்ட் த செயிண்ட்' சினிமாவில் திருச்சூர் வட்டார மொழியைக் கைக்கொண்டது மம்முட்டியின் சமீபத்திய சாதனைகளில் ஒன்று. இயக்குநர் பத்மராஜனின் 'தூவானத் தும்பிகளி'ல் 23 வருடங்களுக்கு முன்பே மோகன்லால் இதே பாஷையைப் பேச முயன்றிருப்பார். ஆனால், அது மம்முட்டிக்குப் பக்கத்தில் வைக்க முடியாது எனத் திருச்சூரைச் சொந்த ஊராகக் கொண்ட இயக்குநர் சத்யன் அந்திக்காடு ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.

புதிய எலக்ட்ரானின் சாதனங்கள், விதவிதமான கார்கள் இவற்றின் மீதான மம்முட்டியின் நீங்காக் காதல் என்பது கேரளத்தில் அதிகம் கிசுகிசுக்கப்படும் விஷயங்களுள் ஒன்று. ஆனால், கிசுகிசுக்கப்படாத வேறு சில காதலும் மம்முட்டிக்கு உண்டு. கவிதைகளையும் கதைகளையும் பாட்டுக்களையும் விரும்பக்கூடியவர். எம்.டி.வாசுதேவன் நாயரிலிருந்து பி.வி.ஷாஜிகுமார் வரை பலரையும் வாசிக்கக்கூடியவர். எம்.முகுந்தன், மம்முட்டியின் விருப்பமான எழுத்தாளர். மம்முட்டி, கல்லூரிக் காலத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியிருக்கிறார். கதைகள் எழுதியிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக மம்முட்டியின் படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. மேலும் விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டன. ஆனால், மம்முட்டி என்ற நடிகன் தளர்ந்துவிடவில்லை. எப்படி அவரது படங்களில் முகம்மது குட்டி இல்லையே அதேபோல் அவரது ஜீவிதத்தில் மம்முட்டி இல்லை. அதனால் அவருக்கு இது தோல்வி அல்ல. அவரே சொல்வதுபோல் அவர் வயது ஒரு தினம்தான். அதனால் இப்போதும் புதிய ஆளாக வாய்ப்பைத் தேடிக்கொண்டிருப்பார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE