'நேருக்கு நேர்' வெளியான நாள்: இரட்டை நாயகப் படங்களுக்கான சிறந்த முன்னுதாரணம் 

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் இரண்டு நாயகர்களைக் கொண்ட திரைப்படங்களில் மணிரத்னம் இயக்கிய 'அக்னி நட்சத்திரம்', அவர் தயாரித்த 'நேருக்கு நேர்' இரண்டும் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவை. இவற்றில் இரண்டாம் படமான 'நேருக்கு நேர்' 1997 செப்டம்பர் 6 அன்று வெளியானது. இன்றோடு 23 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்தப் படம் இன்றளவும் பல காரணங்களுக்காக தமிழ் சினிமா ரசிகர்களால் மலர்ச்சியுடன் நினைவுகூரப்படுகிறது.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சீடரான வசந்த் 1990-ல் வெளியான 'கேளடி கண்மணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவருடைய மூன்றாம் படமான 'ஆசை' 1995-ல் வெளியானது. இந்தப் படத்தின் இரண்டு தயாரிப்பாளர்களில் ஒருவர் மணிரத்னம். வணிகரீதியான வெற்றியை மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது இந்தப் படம். அஜித்தின் திரை வாழ்வில் முதல் வெற்றிப்படமும் அவரை நாயகனாக நிலைநிறுத்திய படமும் இதுவே.

இந்த வெற்றிக்குப் பின் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கே தன் அடுத்த படத்தையும் இயக்கினார் வசந்த். அப்போது வளர்ந்துவரும் நடிகர்களாக இருந்த அஜித், விஜய் இருவரும் நாயகர்களாக நடிக்க ஒப்பந்தமானார்கள். படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜித் திடீரென்று படத்திலிருந்து விலக நேர்ந்ததால், அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க புகழ்பெற்ற நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் ஒப்பந்தமானார். அவர் வேறு யாருமல்ல. இன்று விஜய், அஜித்துக்கு இணையான முன்னணி நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் சூர்யாதான். சூர்யாவின் முதல் படம் என்கிற வகையிலும் 'நேருக்கு நேர்' வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்கிறது.

'நேருக்கு நேர்', 'அக்னி நட்சத்திரம்' ஆகிய இரண்டு படங்களும் பல வகைகளில் நெருங்கிய தொடர்பு கொண்டவை. மணிரத்னம், இரட்டை நாயகர்கள் கதை என்பதைத் தாண்டி இரண்டு நாயகர்களும் எதிரெதிர் துருவங்களாகப் பார்க்கும்போதெல்லாம் சண்டை போட்டுக்கொள்வது, அந்த எதிர்ப்புக்குக் காரணமாக ஒரு குடும்ப உறவு சார்ந்த சிக்கல் அமைந்திருப்பது ஆகியவற்றைச் சொல்லலாம். அக்னி நட்சத்திரத்தில் நாயகர்களான பிரபு, கார்த்திக் இருவரும் ஒரே தந்தைக்கும் வெவ்வேறு தாய்களுக்கும் பிறந்தவர்கள்.

’நேருக்கு நேர்’ படத்தில் பிரிந்துவாழும் தம்பதியரான ரகுவரன் – சாந்தி கிருஷ்ணாவின் தம்பிகளாக முறையே விஜய், சூர்யா இருவரும் நடித்திருந்தனர். குடும்பத்தில் மூத்தவர்களின் பிரிவு இவர்களுக்கிடையிலான வெறுப்புக்குக் காரணமாக அமைகிறது. 'அக்னி நட்சத்திரம்' போலவே இதிலும் இறுதியில் அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் ஆபத்தே இவர்களை ஒன்று சேர்க்கிறது.

'அக்னி நட்சத்திரம்' படத்தில் இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றவை. 'நேருக்கு நேர்' படத்தில் தேவா இசையில் அமைந்த பாடல்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றவை என்பதோடு காலத்தைக் கடந்து ரசிக்கப்படுபவை. 'அவள் வருவாளா', 'மனம் விரும்புதே', 'எங்கெங்கே எங்கெங்கே', 'அகிலா அகிலா', துடிக்கின்ற காதல் ' என அனைத்துப் பாடல்களும் தேவா இசையமைத்த பாடல்களில் ஆகச் சிறந்தவை என்று சொல்லலாம். 'ஆசை' படத்துக்கும் தேவா மிகச் சிறந்த பாடல்களை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு இணையாக சிம்ரனும் விஜய்க்கு இணையாக கெளசல்யாவும் நடித்திருந்தனர். இரண்டு ஜோடிகளுக்கான காதல் காட்சிகளுமே இளமைப் புத்துணர்வுடன் ரசிக்கத்தக்கவையாகவும் வசந்த் பாணியில் கவித்துவம் வாய்ந்தவையாகவும் அமைந்திருந்தன. பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்திலும் வசந்தின் கைவண்ணத்தை உணர முடியும்.

சூர்யா-விஜய் மோதல் காட்சிகளும் தியேட்டரில் பொறி கிளப்பின. இருவருடைய கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவமும் நாயகத்தன்மை சார்ந்த வலிமையும் கொடுக்கப்பட்டிருந்தன. புதுமுகமான சூர்யாவும் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்த விஜய்யும் தங்கள் பணியைச் சிறப்பாகவே செய்திருந்தார்கள்.

ரகுவரன் வழக்கம் போல் குறைவான திரை நேரத்தில் நிறைவான அனுபவத்தைக் கொடுத்தார். “அந்த ஜீன்ஸ் பேண்ட்ட கொஞ்சம் துவைச்சுட்டுப் போட்டுக்கேயேன் ப்ளீஸ்' என்று தம்பியை மென்மையாகக் கிண்டலடிப்பது, மனைவியிடம் தன் கடந்த காலக் குற்றத்தை மனம் திறந்து கூறி அதற்கான தண்டனையை ஏற்பது, மைத்துனனின் கோபத்தைப் புரிந்துகொள்வது, மகளிடம் பாசத்தை வெளிப்படுத்துவது என அனைத்து வகைகளிலும் பிரமாதப்படுத்தியிருந்தார்.

1980களில் 'பன்னீர் புஷ்பங்கள்', 'மணல் கயிறு', 'சிவப்பு மல்லி' போன்ற காவியப் படங்களில் நடித்துவிட்டு திரையுலகைவிட்டு விலகிய சாந்தி கிருஷ்ணா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான துணை வேடத்தில் மறுவருகை புரிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

வில்லனாக கரண் முத்திரை பதித்தார். குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காகத் தரமற்ற பொருட்களை வாங்கி ஏமாறும் மிடில் கிளாஸ் மனநிலையைக் கிண்டலடித்து அவர் பேசும் வசனம் என்றென்றைக்கும் பொருத்தமானது.

தேவாவின் பின்னணி இசை, கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவு, லெனின் – வி.டி.விஜயனின் படத்தொகுப்பு என தொழில்நுட்பக் குழுவின் பங்களிப்பும் படத்தின் தரத்தையும் ஒட்டுமொத்தத் திரை அனுபவத்தையும் உயர்த்தின.

இன்று இரட்டை நாயகர்கள், பல நாயகர்கள் இணைந்து நடிக்கும் படங்களுக்கான சாத்தியங்கள் தமிழில் அதிகரித்துவரும் சூழலில் அப்படிப்பட்ட படங்கள் பின்பற்றத்தக்க முன்னுதாரணமாகத் திகழ்கிறது 'நேருக்கு நேர்'.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்