அகஸ்தியா திரையரங்கம் மூடப்படுவதன் பின்னணி குறித்து அதன் நிர்வாகி நடராஜன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கம் எல்லாக் கொண்டாட்டங்களையும் பார்த்திருக்கிறது.
1967-ல் திறக்கப்பட்ட இந்தத் திரையரங்கில் எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் திரைப்படங்கள், ரஜினிகாந்தின் முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' ஆரம்பித்து எண்ணற்ற படங்கள், விஜய், அஜித் திரைப்படங்கள் எனப் பலதரப்பட்ட படங்களும் வெளியாகியுள்ளன.
வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வந்த இந்த இடத்துக்கு கடந்த மூன்று வருடங்கள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக, கரோனா நெருக்கடியால் திரையரங்குகள் மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதன் காரணமாக கடந்த சில மாதங்கள் இந்த அரங்குக்கு இன்னும் கடினமான சூழல் ஏற்பட்டது. நிச்சயமற்ற எதிர்காலம் கண்முன் நிற்கும் நிலையில் இந்தத் திரையரங்கம் மூடப்படவுள்ளது.
» 'குதா ஹாஃபிஸ்' இரண்டாம் பாகம் உருவாகிறது: திரையரங்கில் வெளியிடத் திட்டம்
» கரோனா தொற்று; நடிகர் திலீப் குமாரின் இரண்டாவது இளைய சகோதரரும் உயிரிழப்பு
70 எம் எம் திரையரங்கான இதில் 1004 பேர் உட்கார்ந்து படம் பார்க்கலாம். வட சென்னைவாசிகள் மத்தியில் மிகப் பிரபலமான இந்தத் திரையரங்கம் உழைக்கும் வர்க்கத்துக்கும், குடும்பமாக வரும் ரசிகர்களுக்கும் பிடித்தமான இடமாக இருந்தது.
"எங்களால் தற்போதைய சூழல், போட்டியில் வியாபாரத்தைத் தொடர முடியவில்லை. மேலும், சமீபகாலமாக புதிய திரைப்படங்கள் எங்கள் அரங்கில் வெளியாவதில்லை. பழைய திரைப்படங்களே திரையிட்டு வந்ததால் பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை" என்கிறார் நடராஜன். இந்தத் திரையரங்கம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதன் நிர்வாகி இவர்.
நடராஜனின் மாமா கே.நஞ்சப்ப செட்டியாரின் யோசனையால் இந்தத் திரையரங்கம் தொடங்கப்பட்டது. சேலத்தில் வழக்கறிஞராக இருந்த அவர் பொறியியலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். நூல் வியாபாரம் செய்து கொண்டிருந்த அவர்கள் குடும்பம் டிஎன்கே குழுமத்தை ஆரம்பித்தது. இது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மற்றும் உலோக வியாபாரத்துக்கான நிறுவனம்.
மேலும் தேவி பிலிம்ஸ் என்கிற பெயரில் திரைப்படத் தயாரிப்பும் செய்தார்கள். தமிழில் முதல் டெக்னிகலர் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற ஜெமினி கணேசன் நடிப்பில் வந்த 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தைத் தயாரித்தது இவர்களே. மேலும் இயக்குநர் பாலுமகேந்திராவின் 'அழியாத கோலங்கள்', நடிகை சுஹாசினி அறிமுகமான இயக்குநர் மகேந்திரனின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' ஆகிய படங்களையும் தயாரித்தனர்.
"திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இருந்ததால், திரையரங்கம் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தோம்" என நினைவுகூர்கிறார் நடராஜன்.
இதன் விளைவாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், 1967-ம் வருடம் அகஸ்தியா திரையரங்கம் கட்டப்பட்டது. அந்த நிலம் இவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமானது. சில வருடங்கள் கழித்து இவர்கள் குடும்பம் அண்ணாசாலையில் இன்னொரு பிரம்மாண்ட திரையரங்கைக் கட்டினார்கள். அதுதான் தேவி சினிப்ளக்ஸ். இந்த அரங்கம் கட்டப்பட்டு 50 வருடங்கள் ஆனது. இன்னும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
அகஸ்தியா திரையரங்கம், 1967-ம் ஆண்டு, கே.பாலசந்தரின் 'பாமா விஜயம்' திரைப்பட வெளியீட்டோடு, ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு மத்தியில் திறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகின. இதில் எம்.ஜி.ஆரின் 'காவல்காரன்' திரைப்படத்துக்குத் தனிச் சிறப்புண்டு.
"துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு எம்.ஜி.ஆர் புத்துயிர் பெற்று நடித்த படம். நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. அகஸ்தியாவில் 100 நாட்கள் ஓடிய முதல் திரைப்படம் 'காவல்காரன்'தான்" என்கிறார் நடராஜன்.
90-களிலும், 2000-களிலும் கூட அகஸ்தியா திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகள் ஓடின. திரையரங்குகள் முதல் இரண்டு வாரங்களுக்கு, டிக்கெட் கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என, ஜெயலலிதா தலைமையிலான அரசு அறிவிக்கப்பட்ட அந்தக் காலகட்டமே, தங்கள் திரையரங்கின் பொற்காலம் என்கிறார் நடராஜன். அப்போது நல்லவேளையாக நிறைய நல்ல திரைப்படங்களும் வந்ததாகக் கூறுகிறார்.
காலத்துக்கு ஏற்ப இந்தத் திரையரங்கம் மாறியுள்ளது. டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்பு, டிஜிட்டல் ஒளி அமைப்பு ஆகியவற்றை நிறுவினார்கள். ஆனால் ஏசி இல்லாத திரையரங்கம் என்பதால் அதனால் பெரிய தாக்கம் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் ஏசி நிறுவலாம் என்றும் யோசித்திருக்கிறார்கள். ஆனால் அதற்குத் திரையரங்கின் கூரை உயரத்தைக் குறைக்க வேண்டும், அதனால் அற்புதமான பெரிய திரையின் அழகு கெடும் என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர்.
அகஸ்தியா திரையரங்கம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நல்லபடியாக இயங்கியுள்ளது. ஆனால் அதன் எதிர்காலம் இன்னும் தெளிவில்லாத நிலையிலேயே இருக்கிறது. இன்னொரு சுவாரசியம், கடைசியாக இங்குத் திரையிடப்பட்ட திரைப்படமும் எம்ஜிஆர் நடிப்பில் வந்த 'ரகசிய போலீஸ் 115'.
1967-ல் முதன் முதலில் இந்தப் படம் இங்கு வெளியானபோது 100 நாட்கள் ஓடியிருக்கிறது. 2020 ஆரம்பத்தில் மறு வெளியீட்டின்போது, காட்சிக்கு சுமார் 30 பேர் வரை இந்தப் படத்தைப் பார்க்க வந்திருக்கிறார்கள். "காலம் மாறிவிட்டது, நாங்களும்தான்" என்று விடை கொடுக்கிறார் நடராஜன்.
- ஸ்ரீனிவாச ராமானுஜம் (தி இந்து ஆங்கிலம்) | தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago