கரோனா தொற்று; நடிகர் திலீப் குமாரின் இரண்டாவது இளைய சகோதரரும் உயிரிழப்பு

By ஐஏஎன்எஸ்

மூத்த பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் இளைய சகோதரர் எஸ்ஹான் கான், கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். திலீப் குமாரின் குடும்ப நண்பர் ஃபைஸல் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.

"திலிப் குமாரின் சகோதரர் எஸ்ஹான் கான் சில மணி நேரங்களுக்கு முன் காலமானார். முன்னதாக அவரது இளைய சகோதரர் அஸ்லம் காலமானார். நாம் இறைவனிடமிருந்து வந்தோம். அவனிடமே திரும்பச் செல்வோம். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். திலீப் குமார் சார்பாக இதைத் தெரிவிக்கிறேன்" என திலீப் குமாரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஹைப்பர் டென்ஷன், அல்ஸைமர் உள்ளிட்ட பாதிப்புகளுடன் இருந்த எஸ்ஹான் கானுக்கு வயது 90. லீலாவதி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. கடந்த மாதம்தான் திலீப் குமாரின் இளைய சகோதரர் அஸ்லம் கான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

97 வயதான நடிகர் திலீப் குமாரின் இயற்பெயர் முகமது யூசுஃப் கான். 1940களில் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த திலீப் குமார் 50-60களில் பிரபல நட்சத்திரமாக உலா வந்தார். 70களில் உறுதுணை நடிகராக தனது திரை வாழ்க்கையைத் தொடர்ந்தார். 1998க்குப் பிறகு இவர் நடிக்கவில்லை. திலீப் குமார் தற்போது மும்பையில், தனது மனைவி சாய்ரா பானுவுடன் வாழ்ந்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE