ரியாவை நல்ல வெளிச்சத்தில் காட்ட ஊடகத்தில் பிரச்சாரம்: சுஷாந்த் குடும்ப வழக்கறிஞர் குற்றச்சாட்டு

குறிப்பிட்ட சில செய்தி நிறுவனங்கள், ரியா சக்ரபர்த்தியை நல்ல வெளிச்சத்தில் காட்ட முயன்று வருகின்றன என்று மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங் விமர்சித்துள்ளார்.

மேலும், சுஷாந்தின் மனநலம் தொடர்பாகத் தவறான செய்திகள் தொடர்ந்தால், அந்தந்த ஊடக நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் மத்தியில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங் பேசிய போது, "சுஷாந்தின் மூன்று சகோதரிகளும் என்னைச் சந்தித்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நல்ல வெளிச்சத்தில் காட்ட ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் கூறினார்கள். அவர் பைபோலார் குறைபாடு இருப்பவர் என ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது.

ஆனால், முதல் தகவல் அறிக்கையில், அவரது மனநலம், ரியா அவர் வாழ்க்கையில் வந்த பிறகே மோசமானது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை எவரும் பார்க்க முடியும். ரியா, சுஷாந்துக்கு அளித்து வந்த சிகிச்சை பற்றி குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்படவில்லை. மேலும், சுஷாந்தின் குடும்பத்தினருடன் பகிரப்பட்ட மருத்துவர் சீட்டில் வியாதியின் பெயரோ, மருந்துகளின் பெயரோ இல்லை.

இதெல்லாம் தெரிந்தபின்னும் சில சேனல்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தங்களது இளம் மகனை இழந்த குடும்பத்தினரை இன்னும் வாட்டாதீர்கள் என்பதே அந்தக் குடும்பத்தினரின் மனமார்ந்த கோரிக்கை.

மேலும், சுஷாந்தின் பெயரில் எந்த ஆயுள் காப்பீடும் இல்லை. அது தொடர்பாக செய்யப்பட்டு வரும் பிரச்சாரம் அவதூறாகக் கருதப்படும். அந்த சேனல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விகாஸ் சிங் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE