ரியாவை ஊடகங்கள் இழிவுபடுத்துவதை ஏற்கமுடியாது - மீரா சோப்ரா 

By ஐஏஎன்எஸ்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர்தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி சுஷாந்த் குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சுஷாந்தின் தந்தை கேகே சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த ஒரு காணொலியில், சுஷாந்தின் காதலி ரியா தனது மகனுக்கு விஷம் தந்து வந்ததாகவும், ரியா தான் கொலையாளி என்றும் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் நடிகை ரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவரிடம் சுஷாந்த் தற்கொலை குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் குறித்து அவரது தோழி மீரா சோப்ரா பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளதாவது:

‘எனக்கு சுஷாந்தை தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர் எனக்கு தொழில்ரீதியாக பழக்கமானவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரும் நானும் ஒரே ஜிம்மில் பயிற்சி எடுத்தோம். அப்போது தான் அவரை எனக்கு தெரியும். அதன் பிறகு ஒரு சில விருது நிகழ்ச்சிகளில் சந்தித்து கொண்டோம்.

அவர் எப்போதும் ஒரு நட்புறவு மிக்க நபர். அற்புதமான மனிதர். எப்போது என்னை பார்த்தாலும் நின்று நலம் விசாரித்துவிட்டு செல்வார். பொதுவாக திரைத்துறையில் இப்படி யாரும் செய்வதில்லை. நல்ல பண்புகளையுடைய நல்ல மனிதர் அவர். மற்றவர்களிடம் எப்போதும் மரியாதையுடனே நடப்பார்.

அவரது மரணம் மிகவும் அதிர்ச்சிகரமானது. அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. அவரது மரணத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையை சிபிஐ கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எந்தவித பாரபட்சமுமின்றி விசாரிக்கப்படவேண்டும். ஆனால் ரியாவை சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தொடர்ந்து இழிவுபடுத்துவது ஏற்கமுடியாதது. அவர் குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. குறைந்தபட்சம் அவர் மீதான் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரையாவது அனைவரும் அமைதியாக இருக்கவேண்டும். ’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE