கைது செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையாளருக்கு சுஷாந்த் மேலாளருடன் தொடர்பு - சிபிஐ விசாரணையில் அம்பலம்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர்தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி சுஷாந்த் குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சுஷாந்தின் தந்தை கேகே சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த ஒரு காணொலியில், சுஷாந்தின் காதலி ரியா தனது மகனுக்கு விஷம் தந்து வந்ததாகவும், ரியா தான் கொலையாளி என்றும் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

சிபிஐ அதிகாரிகள் நடிகை ரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரியாவுடன் அவரது சகோதரர் ஷோவிக், சுஷாந்த்தின் நண்பர் சித்தார்த் பிதானி, மற்றும் சுஷாந்த் இல்லத்தின் மேலாளர் சாமுவேல் மிராண்டா, உதவியாளர் தீபேஷ் ஆகியோரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த விசாரணையில் சுஷாந்த் போதைப் பொருள் உட்கொண்டாரா?, சுஷாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவர் உட்கொண்ட மருந்துகள், சுஷாந்த்தின் வங்கி பரிவர்த்தனைகள் குறித்த பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் மும்பையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான போதைப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களின் மூலம் ஜைத் விளாத்ரா மற்றும் அப்துல் பாசித் பரிஹார் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் பரிஹார் என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவருடன் சுஷாந்த்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டாவும், ரியாவின் நண்பர் ஒருவரும் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே பாலிவுட் வட்டாரத்தில் போதை பொருட்களின் புழக்கம் இருப்பதாக கங்கணா உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த விவகாரம் பாலிவுட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE