கமல் - ரஜினி, சிவகுமார் - ரஜினி, விஜயகுமார் - ரஜினி, ஜெய்சங்கர்- ரஜினி; பஸ் டிரைவர் ரஜினி, சேடிஸ்ட் ராமநாதன், ஸ்ரீதேவி அண்ணன்! 

By வி. ராம்ஜி

எழுபதுகளின் மத்தியில் அறிமுகமான ரஜினி, அடுத்தடுத்து நடித்த படங்கள் எல்லாமே அவ்வளவு வெரைட்டியானவை. வரிசையாக அவருக்கு படங்கள் வரத் தொடங்கின. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கேரக்டர்கள். ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதாபாத்திரங்களாக அமைந்தன ரஜினிக்கு.
75ம் ஆண்டு, ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் அறிமுகமானார் ரஜினிகாந்த். இது ரஜினிக்கு திரைக்கு வந்து 45வது ஆண்டு. 76ம் ஆண்டை அடுத்து 77ம் ஆண்டில் ரஜினிக்கு மளமளவென படங்கள் வரத்தொடங்கின.

பாலசந்தரின் இயக்கத்தில், கமல், சுஜாதா, ரஜினி, ரவிக்குமார் நடித்த ‘அவர்கள்’ படம் 77ம் ஆண்டு, வெளியானது. கமல், ரஜினி இருவரும் நடித்திருந்தாலும் இரண்டுபேருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் ராமநாதன் எனும் கேரக்டரில் சுஜாதாவின் கணவராக சேடிஸ்ட்டாக நடித்து மிரட்டினார்.
இதே ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ம் தேதி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் மகேந்திரன் கதை, வசனத்தில் ‘ஆடு புலி ஆட்டம்’ படத்தில், கமல், ரஜினி நடித்திருந்தனர். கமல், ரஜினி, ஜெயச்சந்திரன், கே.நட்ராஜ், முத்தையா என்று ஒரு கேங்க்ஸ்டர் போல் நடித்திருந்தார்கள். கமலைத் தவிர்த்து எல்லோர் பெயரும் அதேதான். அதாவது இதில் ரஜினியின் பெயர் ரஜினிதான். கமலின் பெயர் மதன். இருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் கமல் நாயகனாக நடித்தார்.

ஜூலை மாதம் 29ம் தேதி, ‘கவிக்குயில்’ வெளியானது. இதில் சிவகுமார் நாயகன். ரஜினியை இரண்டாவது நாயகன் என்று கூட சொல்லமுடியாது. பின்னாளில், ஸ்ரீதேவியுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்த ரஜினி, இந்தப் படத்தில், ஸ்ரீதேவிக்கு அண்ணனாக நடித்திருந்தார். தேவராஜ் - மோகன் இயக்கினார்கள்.

அக்டோபர் 7ம் தேதி ஆர்.பட்டாபிராமன் இயக்கத்தில், எழுத்தாளர் சுஜாதாவின் கதையை வைத்துக் கொண்டு எடுத்ததுதான் ‘காயத்ரி’. நீலப்படம் எடுத்து விற்பவராக, மனைவியையே நீலப்படம் எடுத்து விற்கத்துணிபவராக ரஜினி நடித்தார். ரஜினிக்கு ஜோடி ஸ்ரீதேவி. டைட்டிலில், ஜெய்சங்கர் பெயர்தான் முதலில் போடப்படும். ஆனால், இடைவேளைக்குப் பிறகுதான் ஜெய்சங்கர் வருவார். படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியம்தான்.

‘ஆறுபுஷ்பங்கள்’ படத்தில் விஜயகுமாருடன் சேர்ந்து நடித்தார். விஜயகுமார்தான் நாயகன். இவர் செகண்ட் ஹீரோ. நிஜ வாழ்க்கையில் பஸ் கண்டக்டராக இருந்தவர் ரஜினி. ஆனால் இதில் பஸ் டிரைவராக, ரவி எனும் கேரக்டரில் நடித்திருப்பார். விஜயகுமார்தான் கண்டக்டர். நல்ல ரோல். அதை சிறப்பாகவே செய்திருந்தார் ரஜினி.
இதன் பின்னர், செப்டம்பர் 2ம் தேதி, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ வெளியானது. இதுவரை ரஜினி நடித்த படங்களிலேயே, மிகச்சிறந்த குணச்சித்திர கதாபாத்திரமாக அமைந்தது. நல்ல மனிதராகவும் தியாகம் செய்பவராகவும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். தவிர, எல்லாப் படங்களிலும் வழக்கமான ரஜினியாக வந்தவர், இந்த முறை, இந்தப் படத்தில், தாடியெல்லாம் வைத்துக்கொண்டு நடித்தார்.

இதையடுத்து, தமிழ் சினிமாவின் போக்கையே திசை திருப்பிவிட்ட பாரதிராஜாவையும் பாரதிராஜாவையும் ‘16 வயதினிலே’ படத்தையும் சப்பாணி, மயில், பரட்டையையும் மறந்துவிடமுடியுமா என்ன? இதில் கமல் என்று டைட்டிலில் போடாமல், சப்பாணி என்றும் ஸ்ரீதேவியைக் காட்டி மயில் என்றும் ரஜினியைக் காட்டி, பரட்டையன் என்றும் டைட்டில் போட்டார் பாரதிராஜா.

ரஜினி திரையுலகுக்கு வந்து, 45 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் 77ம் ஆண்டு, ரஜினிக்கு ஒருவகையில் மறக்கமுடியாத ஆண்டு என்றே சொல்லவேண்டும்.
யோசித்துப் பார்த்தால், ரஜினி எனும் காந்தத்தின் ‘கிராஃப்’ கொஞ்சம் கொஞ்சமாக, உயர்ந்துகொண்டே இருந்தது என்பதை இந்த 77ம் வருடத்தின் படங்களின் மூலமாக உணரலாம்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE