விஜய்யின் வளர்ச்சி; 'துப்பாக்கி' உருவான விதம்; எஸ்ஏசி சொன்னதும் நடந்ததும்: ஏ.ஆர்.முருகதாஸ் சுவாரசியப் பகிர்வு

By செய்திப்பிரிவு

விஜய்யுடனான சந்திப்பு, 'துப்பாக்கி' உருவான விதம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்த முதல் படம் 'துப்பாக்கி'. அந்தப் படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பால் விஜய்யின் பிடித்தமான இயக்குநர்களில் முக்கியமானவராக மாறினார் ஏ.ஆர்.முருகதாஸ். 'துப்பாக்கி' படத்தைத் தொடர்ந்து 'கத்தி', 'சர்கார்' ஆகிய படங்களில் இணைந்து இந்தக் கூட்டணி பணிபுரிந்தது.

தற்போது இக்கூட்டணி 'தளபதி 65' படத்தில் 4-வது முறையாக இணைந்து பணிபுரியவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இதனிடையே, விஜய்யுடன் முதல் சந்திப்பு எப்படி நடந்தது, 'துப்பாக்கி' எப்படி உருவானது, விஜய்யின் அர்ப்பணிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"'ஏழாம் அறிவு' இறுதிக் கட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டார். எப்போதும் அவர் யாரைச் சந்திக்க வேண்டுமோ அவர்களைத் தேடி அவரே சென்றுவிடுவார். ஆனால், நானே வருகிறேன் என்று சொல்லி அவரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் இயக்குநர் சங்கத் தலைவராக இருந்ததால், அது தொடர்பாகத்தான் சந்திக்கிறார் என நினைத்தேன்.

ஆனால் அவர், விஜய்யின் கால்ஷீட் இருக்கிறது. அந்தப் படத்தை நான்தான் தயாரிக்கப் போகிறேன். கதை இருக்கிறதா என்று கேட்டார். என்னிடம் அப்போது ஒரு கதை இடைவேளை வரை மட்டுமே இருந்தது. அதைத் தெளிவாகச் சொல்கிறேன், இரண்டாவது பாதியைத் தயார் செய்து விடுகிறேன் என்று சொன்னேன். அவரும் சரியென்று கதை கேட்டார். அவருக்குப் பிடித்திருந்தது. அடுத்த நாளே விஜய்யை க்ரீன் பார்க் ஹோட்டலில் சந்தித்துப் பாதிக் கதையை மிக விரிவாகச் சொன்னேன். அதைச் சொல்லி முடித்ததுமே விஜய் சம்மதித்துவிட்டார். 10 நாட்கள் அவகாசம் கொடுங்கள். இரண்டாவது பாதி எப்படி வரும் என்று சொல்கிறேன் என்றேன்.

"முதல் பாதி இவ்வளவு விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள், இதற்கு எதிர்வினையாகத்தானே இரண்டாவது பாதி இருக்கும். எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது" என்றார் விஜய்.

வழக்கமாக ஒரு படம் முடிந்து இன்னொரு படம் ஆரம்பிக்க 6-10 மாதங்கள் எடுத்துக் கொள்வேன். ஆனால் அப்போது 'தீனா' மாதிரியே எனக்குக் குறைவான நாட்களே இருந்தன. 'ஏழாம் அறிவு' வெளியான 30 நாட்களில் 'துப்பாக்கி' படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டேன்.

"விஜய் ஒரு இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்துவிடுவார், நான் என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை" என்று எஸ்.ஏ.சி. சொன்னார். அப்போது நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. 'ஓ... அப்படியா சார்' என்று கேட்டுக் கொண்டேன்.

ஆனால், உண்மையிலேயே 'துப்பாக்கி' படத்தில் விஜய் அப்படி நடித்தார். அதில் ஹீரோயிஸம் என்பது குறைவாகத்தான் இருக்கும். அவர் அப்போது செய்து கொண்டிருந்த பாணியில் இல்லாமல் இருந்தது. விஜய் அவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார். அவர் வசனத்தை மறந்து மீண்டும் டேக் எடுக்குமாறு நடக்கவே இல்லை. க்ளைமேக்ஸில் இந்தி வசனங்கள் பேச வேண்டும். அப்போது படப்பிடிப்புத் தளத்தில் கூடுதலாக இரண்டு வரிகளும் சேர்த்தேன். ஆனால், அதையும் அவர் கச்சிதமாகப் பேசினார்.

'கத்தி' படத்தில் ஒரு முக்கியமான காட்சியை முடிக்கும்போது மழை வருவது போல இருந்தது. சரியாக மழை வருவதற்கு சில நொடிகள் முன்பு வசனத்தைப் பேசி முடித்துவிட்டார். அவர் முடிக்கவில்லை என்றால் என்னால் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தியிருக்க முடியாது. ஏனென்றால் அடுத்த நாள் மும்பையில் பாடல் படப்பிடிப்புக்குத் திட்டமிட்டிருந்தோம். இப்போதும்கூட அந்தக் காட்சியில் சில மழைத்துளிகளை நீங்கள் பார்க்கலாம். அவ்வளவு திறமையானவர் விஜய்.

’துப்பாக்கி' படத்தில் அவரைப் பார்த்ததற்கும், 'கத்தி' படத்தில் பார்த்ததற்கும் மொத்தமாக மாறி அவரது அர்ப்பணிப்பு, திறமை என அனைத்தும் பல மடங்கு அதிகரித்திருந்தது. அதேபோல 'கத்தி' படத்திலிருந்து 'சர்கார்' வரும் போதும் இன்னும் பெரிய வளர்ச்சி.

நடனக் காட்சிகளிலெல்லாம், நடன இயக்குநர் அவரது உதவியாளருடன் ஒத்திகை செய்து கொண்டிருப்பதைத் தூரத்திலிருந்து பார்த்து அதை மனதில் ஏற்றுக் கொள்வார். உடனே வந்து டேக் போகலாம் என்பார். உள்வாங்கும் திறன் அந்த அளவுக்கு அவருக்கு இருக்கிறது. அவருடன் பணியாற்றிய எந்த இயக்குநரும் இதைச் சொல்வார்.

அவரது அப்பாவினால் வந்துவிட்டார் என்று சொல்வார்கள். அதெல்லாம் கிடையவே கிடையாது. திறமை இல்லையென்றால் இங்கு நிற்கவே முடியாது. அதற்கான உதாரணங்களை நான் நிறையச் சொல்வேன். பின்புலம் இருந்தால் நமக்கு ஒரு அறிமுகம் கிடைக்கும், அவ்வளவுதான். அதைத் தவிர சிபாரிசு, பின்புலம் வைத்து எந்தக் கலை வடிவிலும் தாக்குப் பிடிக்க முடியாது. திறமைதான் முக்கியம்.

அப்படி விஜய் இன்று இருக்கும் நிலைக்கு முழுக்க முழுக்க அவரது திறமை, அர்ப்பணிப்புதான் காரணம். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது".

இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE