அவரைப் பாடலாசிரியர் என்று சொல்லலாம். ஏகப்பட்ட மிகச்சிறந்த பாடல்களை வழங்கியிருக்கிறார். பாடல் எழுதுவது மட்டுமில்லாமல், எத்தனையோ பாடல்களை அவரே பாடியிருக்கிறார். ஆகவே பாடகர் என்றும் சொல்லலாம். பாட்டு எழுதுவதும் பாடுவதும் மட்டுமல்ல... அவரே இசையமைப்பார். அப்படி இசையமைத்த பாடல்கள் இன்றைக்கும் முணுமுணுப்பவை. அதுமட்டுமா? மெட்டுப் போடுவார்; மெட்டுக்கு பாட்டெழுதுவார்; பாடலைப் பாடுவார்; படத்தை இயக்கவும் செய்வார். கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்வார். அதனால் அவரை இயக்குநர் என்றும் சொல்லலாம். இப்படி பல முகங்கள்... பல பெயர்கள் கொண்டவர் கங்கை அமரன்.
‘செந்தூரப்பூவே’ எனும் ‘16 வயதினிலே’ பாடல்தான் கங்கை அமரன் எழுதிய முதல் பாடல். ‘பூவரசம்பூ பூத்தாச்சு’, ‘சிறுபொன்மணி அசையும்’ என்று எத்தனையெத்தனை பாடல்களோ எழுதியிருக்கிறார். அவர் இயக்கிய முதல் படம் ‘கோழி கூவுது’. முதல் படமே 300 நாட்களைக் கடந்து ஓடியது. ‘கொக்கரக்கோ’, ‘கரகாட்டக்காரன்’, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘சின்னவர்’ உள்ளிட்ட 200 நாள் படங்கள், நூறு நாள் படங்கள் என இயக்கியிருக்கிறார். கணக்கிலடங்காத பாடல்களை எழுதியிருக்கிறார். பாடியிருக்கிறார்.
கங்கை அமரன் இசையமைத்த படங்களும் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. ‘வாழ்வே மாயம்’ படத்தின் எல்லாப் பாடல்களும் செம ஹிட்டடித்தன. ‘நீலவான ஓடையில்’ பாடலையும் ‘மழைக்கால மேகம்’ பாடலையும் ‘வந்தனம் என் வந்தனம்’ பாடலையும் என ‘வாழ்வே மாயம்’ படத்தில் அனைத்துப் பாடல்களும் வெற்றியைப் பெற்றன. ‘சட்டம்’ படத்தின் ‘வாவா என் வீணையே’ பாடலும் ’அம்மம்மா சரணம் சரணம்’ ‘நண்பனே எனதுயிர் நண்பனே’ என்ற பாடல்களையெல்லாம் மறக்கவே முடியாது. ‘சின்னதம்பி பெரியதம்பி’ படத்தின் பாடல்களும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றன. இப்படி கங்கை அமரன் இசையமைத்த படங்கள் ஏராளம்.
இத்தனை சாதனைகளைக் கொண்ட, பன்முகங்களைக் கொண்ட கங்கை அமரனுக்கு 1979ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி ஸ்பெஷல் ஆண்டு, சிறப்பான மாதம். மறக்கவே முடியாத நாள். இந்தநாளில்தான், இயக்குநர் எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில், விஜயன், ஷோபா, சேகர், விஜய்பாபு, அபர்ணா முதலானோர் நடித்த ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்துக்கு இசை கங்கை அமரன். இதுதான் கங்கை அமரன் இசையமைத்த முதல் படம்.
‘’’ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ திரைப்படம் நான் இசையமைத்து வெளியான முதல் படம்தான். ஆனால் நான் இசையமைத்த முதல் படம் ‘மலர்களிலே அவள் மல்லிகை’. நண்பர் மலேசியா வாசுதேவன் ஹீரோவாக நடித்தார். படத்துக்கு தயாரிப்பாளர்களை அவர்களே ஏற்பாடு செய்திருந்தார். படத்துக்கான எல்லாப் பாடல்களையும் ஒலிப்பதிவு செய்து, படமும் பாதி வரை எடுத்துவிட்டார்கள். ஆனால், பாடல்கள் அனைத்தும் வெளியாகி, ஹிட்டாகிவிட்டது. இந்தப் படம் மட்டும் வெளிவரவே இல்லை. எல்லாப் பாடல்களையும் இன்றைக்கும் பலரும் ‘நல்ல பாட்டு சார்’ என்று சொல்லுவார்கள்.
இதன் பிறகுதான் ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ திரைப்படம். இதுவொரு ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படம். கதை ஒருமாதிரியாக இருக்கும். ஆனால் படத்தின் எல்லாப் பாடல்களும் பேசப்பட்டன. முணுமுணுக்கப்பட்டன. ‘நாயகன் அவன் ஒருபுறம் அவன் விழியில் மனைவி அழகு’ என்பது முதலான பாடல்கள் எல்லோராலும் ரசிக்கப்பட்டன’’ என்கிறார் கங்கை அமரன்.
‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ படத்தில் இந்தப் பாடல் மட்டுமின்றி ‘விடுகதை ஒன்று’ பாடலும் வரவேற்பைப் பெற்றது. ‘நாயகன் அவன் ஒருபுறம்’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். அழகான, மனதை இதமாக்கும் மெலடியாகத் தந்திருப்பார் கங்கை அமரன். ’விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று... யார் கதை இதுதான் என்று நீதான் அறிவாயோ’ என்ற பாடல், கேட்கும்போதே மனதை என்னவோ செய்யும். படத்தில், கதை ‘ராம் - ரஹீம்’என்று டைட்டிலில் வரும். அப்போது ராம.நாராயணனும் எம்.ஏ.காஜாவும் சேர்ந்து, இந்தப் பெயரில் கதை வசனமெல்லாம் எழுதினார்கள்.
‘’இந்தப் படத்துக்கு பட்ஜெட் ரொம்ப கம்மி. அதனால் படம் நல்ல லாபத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தில் எம்.ஏ.காஜா, ராம.நாராயணன், ராஜசேகர் என பலரும் பணியாற்றினார்கள். காஜாவின் படத்தைப் போலவே, பிறகு ராம.நாராயணனின் முதல் இயக்கத்தில் வந்த ‘சுமை’ படத்துக்கும் இசையமைத்தேன். ராஜசேகர் படத்துக்கும் இசையமைத்தேன்.
இதேசமயத்தில்தான், பாக்யராஜின் முதல் படமான ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்துக்கு இசையமைத்தேன். இதிலும் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இப்படி அடுத்தடுத்து படங்களுக்கு ஒரு பக்கம் பாட்டெடுழுதிக் கொண்டும், இசையமைத்துக் கொண்டுமாக என் பயணம் இனிதே தொடங்கியது, இந்தக் காலகட்டத்தில்தான்’’ என்று நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகச் சொல்கிறார் கங்கை அமரன்.
‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தின் ‘காதல் வைபோகமே’ பாடல் அப்போதும் சரி, இப்போதும் சரி... மிகப்பெரிய ஹிட் லிஸ்ட் பாடல். ‘மெளன கீதங்கள்’ படத்தில் இவர் இசையில் உருவான ‘மூக்குத்திப்பூமேலே’, ‘டாடி டாடி’, ‘மாசமோ மார்கழி மாசம்’ முதலான பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன.
பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர் என பன்முகங்கள் கொண்ட கங்கை அமரன், ஆரம்ப காலத்தில், பாக்யராஜுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார்.
’இசை - கங்கை அமரன்’ என்று டைட்டிலில் முதன்முதலாக வெளியானது, ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ படத்தில்தான். 79ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வெளியானது இந்தப் படம். ஆக, கங்கை அமரன், இசையமைப்பாளராகி 41 ஆண்டுகளாகின்றன.
பன்முகவித்தகராகத் திகழும் கங்கை அமரனை வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago