’அண்ணே... நாகராஜ் அண்ணே’; ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’; ரஜினியின் அட்டகாச நடிப்பில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’

By வி. ராம்ஜி

இரண்டு ஆணுக்கு நடுவே ஒரு பெண். ஒருவன், காதலனாக இருந்து அவளை ஏமாற்றுகிறான். இன்னொருவனோ, அவளுக்குக் காவலனாக இருக்கிறான். ஏமாற்றியவன் பக்கமும் போகாமல், காவலனை கணவனாகவும் ஆக்கிக் கொள்ளாமல், கேள்விக்குறியாக நிற்கிறாள் புவனா. அந்தக் கதைதான்... ‘புவனா ஒரு கேள்விக்குறி’.
இப்படி மூன்று பேரை வைத்துக்கொண்டு, சடுகுடு ஆட்டம் போட்டு, வெற்றிநடை போட்டது ‘புவனா ஒரு கேள்விக்குறி’.

காதலன் நாகராஜன் சிவகுமார். அவருடைய நண்பர் சம்பத். சுமித்ரா படத்தின் தலைப்புக்கு உரிய நாயகி.

நாகராஜனுக்கும் சம்பத்துக்கும் உற்றார், உறவினர் என்று எவருமில்லை. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு, நட்புடன் பழகிவருகிறார்கள். நாகராஜ், சபலக்காரன். பார்க்கும் பெண்களை வசியம் செய்து, வழிக்குக் கொண்டுவந்து, காரியம் முடிந்ததும், கழற்றிவிட்டுவிடுவான். ‘ஏண்டா இப்படி பண்றே? உனக்கு இரக்கமே கிடையாதா?’ என்று எப்போதும் சம்பத் புலம்பியபடி அறிவுரை சொல்லிக்கொண்டே இருப்பான். ஆனால் நாகராஜ் கேட்பதே இல்லை. சம்பத்தும் இடித்து அறிவுரைக்காமல் இருப்பதே இல்லை.

தெருவோரத்தில் துணிக்கடை வைத்து பிழைத்து வரும் நாகராஜும் சம்பத்தும், துணிகளைக் கொள்முதல் செய்ய சென்னைக்கு ரயிலேறுவார்கள். அப்போது, ரயிலில் முத்து (ஒய்.ஜி.மகேந்திரன்) என்பவர் இருப்பார். அவரிடம் கோயில் திருப்பணிக்குச் செலுத்தவேண்டிய பணம் பெட்டியில் இருக்கும். ரயில், விழுப்புரத்தில் நிற்கும். அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் காபி குடிக்கச் செல்லுவார். அங்கே நெஞ்சுவலி வந்து, பிளாட்பாரத்தில் அப்படியே இறந்துவிடுவார். அதேநேரத்தில், பெட்டியில் பணம் இருப்பதைத் தெரிந்துகொண்ட சிவகுமார், அந்தப் பணத்தை அபகரித்துவிடுவார். இதைக் கண்ட ரஜினி அதிர்ந்துபோவார்.

ஒய்.ஜி.மகேந்திரனின் சகோதரியான சுமித்ரா, சிவகுமார் மீதும் ரஜினி மீதும் சந்தேகம். சிவகுமாரையும் ரஜினியையும் சந்தித்து விவரம் கேட்பார். ஆனால் பணம் என்னானது என்று தெரியாது என்று சொல்லிவிடுவார். அதேநிலையில், சுமித்ராவை மடக்கிப் போட காதல் வலை வீசுவார். வலையில் விழுவார் சுமித்ரா. பிறகு கர்ப்பமாவார். வழக்கம் போல் அவரைக் கைவிடுவார் சிவகுமார்.

இதற்கு முன்னதாக, ரஜினி ஒரு பெண்ணைக் காதலிப்பார். அந்தப் பெண்ணை மாடு துரத்த, அந்தப் பெண் தப்பித்து ஓட, கடைசியில் ஒரு கிணற்றில் விழுந்து இறந்துவிடுவார். அதே ஊரில் உள்ள பணக்கார ஜவுளிக்கடை முதலாளி சுருளிராஜன், தன் மகள் ஜெயாவை, சிவகுமாருக்கு திருமணம் செய்து வைப்பார். தன் ஜவுளிக்கடையையும் கொடுப்பார்.

இந்தநிலையில், கர்ப்பமாக இருக்கும் சுமித்ராவுக்குத் துணையாக ரஜினி இருப்பார். நண்பனுக்காக, சுமித்ராவை இந்த நிலைக்கு ஆளாக்கியது நான் தான் என்று சொல்லிவிடுவார். இருவரும் ஒரே வீட்டில், வெளியுலகிற்கு கணவன் மனைவி போல் வாழ்வார்கள். ஆனால், ஒரு காவலனைப் போல் இருந்துகொண்டு, சுமித்ராவையும் அவரின் மகனையும் காப்பாற்றி வருவார் ரஜினி.

ஆனால் கல்யாணமாகி, பல வருடங்களாகியும் சிவகுமார் - ஜெயா தம்பதிக்கு குழந்தை இருக்காது. பிறக்கவும் வாய்ப்பில்லை என்று சிவகுமாரிடம் சொல்லிவிடுவார்கள் மருத்துவர்கள்.

தன் காதலி இறந்ததிலிருந்தே பிடிப்பில்லாமல் வாழ்ந்து வரும் ரஜினிக்கு, ஒருகட்டத்தில் சுமித்ராவுடனே வாழலாம் எனும் ஆசை. குழந்தையே பிறக்காத நிலையில், சுமித்ராவுக்கு தனக்கும் பிறந்த மகனையே ஊரறிய தத்தெடுத்து வளர்க்கலாம் என்று சிவகுமார் நினைப்பார். ஆனால் ரஜினியும் சம்மதிக்கமாட்டார். சுமித்ராவும் அவமதித்து அனுப்பிவிடுவார். இந்தநிலையில், சுமித்ராவின் குழந்தை மூளைக்காய்ச்சலால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, முக்கியமான மருந்தை எழுதித் தருவார் டாக்டர். நட்டநடுராத்திரியில், சிவகுமாரின் மருந்துக்கடையில் அந்த மருந்து இருக்கும். ஆனால் குழந்தையைத் தத்துக்கொடுக்க சம்மதித்தால், மருந்து தருகிறேன் என்று பிளாக் மெயில் பண்ணுவார் சிவகுமார்.

ரஜினி மறுத்துவிட்டு, மருந்துக்கு அலைவார். கையில் மருந்து வைத்துக்கொண்டு தத்துக்கொடுக்கச் சொல்வார் சிவகுமார். ரஜினி மருந்துடன் வருவார். சிவகுமார் திருந்தி வெளியேறுவார். அப்போது நெஞ்சுவலியால் இறந்துபோவார் ரஜினி. விக்கித்துக் கதறுவார் சுமித்ரா. இருக்கும் போது காவலனாக மட்டுமே ஏற்றுக்கொண்ட சுமித்ரா, இறந்த பிறகு கணவனாக வரித்துக்கொள்வாள். விதவைக் கோலத்தில் மகனுடன் நிற்பார்.... கேள்விக்குறியாக!

இந்தக் கதையைப் படமாக்குவது என முடிவானதும் ரஜினி கேரக்டருக்கு சிவகுமாரையும் சிவகுமார் கேரக்டருக்கு ரஜினியையும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. பிறகு அவர்களை கேரக்டர் மாற்றி நடிக்கவைத்தால் என்ன என்று தோன்றியது. இருவரிடமும் சொல்லப்பட்டது. இரண்டுபேரும் சம்மதித்தார்கள். ‘எல்லாப் படத்திலும் நல்லவராக நடித்துவந்த சிவகுமார் கெட்ட கேரக்டர்... அதுவரை வில்லத்தனமான ரோல்கள் பண்ணிக்கொண்டிருந்த ரஜினி, குணச்சித்திர கேரக்டர்’ என்று நடிக்க... மிகப்பெரிய வெற்றி பெற்றது ‘புவனா ஒரு கேள்விக்குறி’.

எழுத்தாளர் மகரிஷியின் நாவல். அந்தக் கதைக்கு, அழகான திரைக்கதையும் உயிரோட்டமான வசனமும் எழுதியிருந்தார் பஞ்சு அருணாசலம். பாடல்கள் அனைத்தையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார் இளையராஜா. கெட்ட கேரக்டரான நாகராஜனாக சிவகுமார் வருகிற போதெல்லாம், பின்னணியில் மகுடியின் இசையை ஒலிக்கவிட்டு, கேரக்டரின் தன்மையைச் சொல்லியிருப்பார் இளையராஜா. ‘பூந்தென்றலே’ என்ற பாடலும் ‘விழியிலே மலர்ந்தது’ எனும் பாடலும் மெலடியில் மயக்கும்; சொக்கவைக்கும். ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’ என்ற பாடல், மிகப்பெரிய வெற்றி பெற்றது. ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என்றதுமே நம் நினைவுக்கு வருவது இந்தப் பாடல்தான் என்கிற அடையாளமாகவும் திகழ்ந்தது.

பஞ்சு அருணாசலத்தின் வசனங்கள்,ஜீவனுள்ளவை. ‘அண்ணே... நாகராஜ் அண்ணே... கடப்பாரையவே முழுங்கிட்டியேண்ணே. இதை ஏப்பம் விட்டுட முடியாது. ஒருகட்டத்துல, வயித்தையே கிழிச்சுப் பதம் பாத்துரும்’ என்று ரஜினி சொல்லும்போதெல்லாம் செம கைத்தட்டல். அதேபோல, சுமித்ராவும் ரஜினியும் கோயிலுக்கு வந்து விட்டு வெளியே வருவார்கள். சிவகுமாரும் ஜெயாவும் கோயிலுக்குள் வருவார்கள். ‘என்ன திடீர்னு கோயிலுக்கு, என்ன வேண்டுதல்’ என்று சிவகுமாரின் மனைவி ஜெயா ரஜினியிடம் கேட்பார். ரஜினி வேண்டுமென்றே, ‘ஒரு பையன் தான் இருக்கான். அடுத்தது ஒரு பெண் குழந்தையைக் கொடுன்னு வேண்டிக்கறதுக்காக வந்தோம்’ என்பார் ரஜினி. பையனிடம், ‘டேய் பாபு, அங்கிளுக்கு டாட்டா சொல்லுடா’ என்று சிவகுமாரைப் பார்த்து சொல்லச் சொல்லி நக்கலடிப்பார். இந்தக் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளிக்கொண்டு போனது. மிக அழகாகவும், தெளிவாகவும், எல்லோரும் ரசிக்கும்படியாகவும் இயக்கியிருப்பார் எஸ்.பி.முத்துராமன்.

2.9.1977 அன்று ரிலீசானது ‘புவனா ஒரு கேள்விக்குறி’. ரஜினி தன்னுடைய ஆரம்ப காலத்தில் நல்லவிதமாகவும் நடித்தார். ஸ்டைலாகவும் நடித்தார். மாஸ் ஆக்‌ஷன் பண்ணியும் நடித்தார். இதில், ரஜினியை மாஸ் ஆக்‌ஷன் ப்ளஸ் ஸ்டைலையே விரும்பினார்கள் ரசிகர்கள். அந்த வகையில், ரஜினி மிகச்சிறப்பாக நடித்த படங்களின் பட்டியலில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ முக்கியத்துவம் வாய்ந்த படமாக இன்றைக்கும் திகழ்கிறது.

அதனால்தான், படம் வெளியாகி, 43 வருடங்களாகிவிட்ட நிலையிலும், ‘புவனா ஒரு கேள்விக்குறி’ ஆச்சரியக் குறியாகவே இன்றைக்கும் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்