சுரேஷ் ரெய்னாவுக்கு சூர்யா ஆறுதல்

By செய்திப்பிரிவு

மாமா குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சுரேஷ் ரெய்னா வெளியிட்ட ட்வீட்டுக்கு சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் சுரேஷ் ரெய்னாவின் மாமா உள்ளிட்ட குடும்பத்தார் 4 பேரைத் தாக்கி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதில் ரெய்னாவின் மாமா கொல்லப்பட்டதால், ரெய்னா உடனடியாகத் தொடரிலிருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்பி இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பி இருப்பதை வைத்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமுள்ளன.

இதனிடையே இன்று (செப்டம்பர் 1) சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பதிவில், "பஞ்சாப்பில் எனது மாமா குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாமாவும், உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டது கொடூரமானது. இதற்குக் காரணமான கொள்ளையர்களை விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டும்" என்று பஞ்சாப் முதல்வர் அமிரிந்தர் சிங், பஞ்சாப் போலீஸார் ஆகியோரது ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளார்.

தற்போது சுரேஷ் ரெய்னாவுக்கு ஆறுதல் கூறும் வகையில் சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ரெய்னாவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். நாங்கள் உங்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம். இதயமற்ற அந்தக் குற்றவாளிகள் நீதிக்கு முன் நிற்கவைக்கப்பட வேண்டும். உங்கள் மன வலிமைக்காகவும், அமைதிக்காகவும் என் பிரார்த்தனைகள்".

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

'என்.ஜி.கே' படத்தை விளம்பரப்படுத்த நடந்த நேரலை உரையாடலில், சூர்யாவிடம் "உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் அணி மற்றும் பிடித்த வீரர்" என்ற கேள்வியை எழுப்பினார் சுரேஷ் ரெய்னா. அதற்கு சூர்யா, ''சிஎஸ்கே அணி ரொம்பப் பிடிக்கும். தோனிதான் பிடித்த வீரர், பிறகு நீங்கள்'' என்று கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE