யுவன் ஷங்கர் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்: தனித்துவம் மிக்க இசைப் பேராளுமை!  

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவுக்கு நீண்ட நெடிய பிரத்தியேக சிறப்புகளைக் கொண்ட இசைப் பாரம்பரியம் உண்டு. அதில் தங்கள் தனித்துவம் மிக்க சிறப்புகளாலும் சாதனைகளாலும் திரைத் துறையினர் மற்றும் ரசிகர்களின் பெரும் மதிப்பாலும் இசைப் பேராளுமைகள் மலர்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இசைப் பேராளுமைகளில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இன்று (ஆகஸ்ட் 31) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

பதின்பருவத் தொடக்கம்

இளையராஜாவின் இரண்டாம் மகனான யுவன் 16-ம் வயதில் தன் திரை இசைப் பயணத்தைத் தொடங்கினார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்த 'அரவிந்தன்' படத்துக்கு இசையமைத்தார். அந்தப் படம் பெரிய கவனம் பெறவில்லை என்றாலும் அதில் இடம்பெற்ற “ஈரநிலா', 'ஆல் தி பெஸ்ட்' போன்ற பாடல்கள் வெளியான காலத்தில் மட்டுமல்லாமல் இன்றளவும் பலரால் ரசிக்கப்படுகின்றன. அந்தப் பாடல்களிலேயே யுவன் ஒரு தனிச்சிறப்பு மிக்க தரமான இசையமைப்பாளராக வளர்வதற்கான சாத்தியங்கள் வெளிப்பட்டிருந்ததை இப்போது கேட்கும்போது உணர முடிகிறது.

தனித்துத் தெரிந்த கலைஞன்

யுவன் அறிமுகமான 90-களின் பிற்பகுதியில் இளையராஜா, ரஹ்மான், தேவா, பரத்வாஜ். வித்யாசாகர், கார்த்திக் ராஜா என பல இசையமைப்பாளர்கள் தொடர்ந்து வெற்றிப் பாடல்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். புத்தாயிரத்தில் அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர், அடுத்த பத்தாண்டுகளில் அறிமுகமான அனிருத், சந்தோஷ் நாராயணன், சாம்.சி.எஸ் என எப்போதும் திறமையும் வெற்றிகளும் நிறைந்த பல இசையமைப்பாளர்களுக்கு மத்தியில்தான் யுவன் இயங்கி வந்திருக்கிறார். இருந்தாலும் தனக்கென்ற தனிப் பாணியைத் தக்க வைத்திருப்பதோடு தனித்துத் தெரிபவராகவும் இருக்கிறார். அதோடு தொடர்ந்து வெற்றிப் பாடல்களையும் கொடுத்துவருகிறார்.

திருப்புமுனை தந்த வெற்றிகள்

1999-ல் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் யுவன் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. தேர்ந்த இசை ரசனை கொண்ட இயக்குநர்களில் ஒருவரான வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைமை. அனைத்தையும் வெகு சிறப்பாக அளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த யுவன். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த 'தீனா' படத்தில் மெலடி பாடல், மாஸ் பாடல், மென் சோகப் பாடல் என அனைத்து விதமான பாடல்களிலும் தன் திறமையை நிரூபித்திருந்தார். ஒரு மாஸ் ஹீரோ படமான 'தீனா'வின் வெற்றி அஜித்தை தவிர்க்க முடியா நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியதோடு யுவனுக்கு ஒரு முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது. அடுத்த ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை' படம் யுவனை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றது. இந்தப் படத்திலும் அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன என்பதோடு என்றென்றைக்கும் ரசித்துக் கேட்கப்படும் எவர்க்ரீன் அந்தஸ்தையும் பெற்றுவிட்டன.

இயக்குநர்களின் இசைக் கூட்டாளி

'துள்ளுவதோ இளமை' படத்தின் கதை-திரைக்கதையை எழுதியவரான செல்வராகவன் 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதில் தொடங்கிய செல்வராகவன் – யுவன் கூட்டணி தமிழ் சினிமாவின் மிக வெற்றிகரமான மாபெரும் ரசிகர் படையைக் கொண்ட இயக்குநர் - இசையமைப்பாளர் கூட்டணி. இடையில் பிரிவு ஏற்பட்டு மீண்டும் இணைந்திருக்கும் இந்த ஜோடி அதே மதிப்பைத் தக்கவைத்திருக்கிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் இந்தக் கூட்டணியின் வெற்றிப் பாடல்களை அதன் மேன்மையான தரத்தில் கேட்க முடிவதால் இந்தக் கூட்டணி மீதான மரியாதை இன்றைய ரசிகர்களைடையே பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதைப்போல் அமீர், விஷ்ணுவர்தன். வெங்கட் பிரபு, ராம், தியாகராஜன் குமாரராஜா, சீனு ராமசாமி எனப் பல இயக்குநர்களுடன் யுவனுடனான கூட்டணி வெற்றிக் கூட்டணியாகவும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இயங்கும் கூட்டணியாகவும் நிலைத்து நிற்கும் கூட்டணியாகவும் அமைந்தது. இந்த இயக்குநர்கள் பலர் யுவன் இல்லாமல் தங்களால் படம் இயக்குவதை எண்ணிப் பார்க்கவே முடியாது என்று புகழும் அளவுக்கு யுவன் மீதும் அவருடைய இசை மீதும் மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

வசந்த், சுந்தர்.சி, பாலா, லிங்குசாமி, சுசீந்திரன், ஹரி, எனப் பல வெற்றிகரமான இயக்குநர்கள் அனைத்துப் படங்களுக்கும் இல்லாவிட்டாலும் தங்களுடைய பல படங்களுக்கு யுவனின் இசையையே தேர்ந்தெடுக்கிறார்கள். இளையராஜாவிற்குப் பிறகு மிக அதிக எண்ணிக்கையிலான இயக்குநர்களுடன் பணியாற்றியவர் யுவன்தான். பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் தன்னிகரற்ற சிறப்புகளுடன் விளங்குவதால்தான் மதிப்பு வாய்ந்த இத்தனை இயக்குநர்களின் பெரும் மரியாதையைப் பெற்ற இசைக் கலைஞனாக விளங்குகிறார் யுவன்.

திரைக்கு வராத பொக்கிஷங்கள்

இந்த இயக்குநர்கள் மட்டுமல்லாமல் ஒரு படத்தில் மட்டும் பணியாற்றிய இயக்குநர்களுக்கும் புதுமுக இயக்குநர்களுக்கும்கூட மறக்க முடியாத ஆல்பங்களைக் கொடுத்திருக்கிறார் யுவன். பல அறியப்படா படங்களுக்கு யுவனின் இசை மட்டுமே துருப்புச் சீட்டாக அமைந்திருக்கிறது. 'காதல் சாம்ராஜ்யம்' தொடங்கி யுவன் இசையில் பெரும் வெற்றிபெற்ற பாடல்கள் அமைந்த பல படங்கள் திரைக்கு வரவேயில்லை. திரைக்கு வராத 'பேசு' படத்தில் இடம்பெற்ற 'வெண்ணிற இரவுகள் காதலின் மெளனங்கள்' என்கிற பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 2010-11 காலகட்டத்தில் இளைஞர்களின் தேசிய கீதமாக, இது தவிர திரைக்கு வந்த படங்களிலும் 'ஒரு கல்லூரியின் கதை', 'பதினாறு', என யுவனின் பெயருக்காகவும் அவர் இசையில் அமைந்த பாடல்களுக்காகவும் மட்டுமே ரசிகர்களை திரைக்கு அழைத்துவந்த படங்களின் பட்டியல் மிக நீளமானது.

அதிநவீனமும் அசல் கிராமியமும்

தீம் மியூஸிக். ராப் பாடல்கள், சிங்கிள் ட்ராக், என புதுமைகளுக்கு நவீன மேற்கத்திய பாணி இசையமைப்புக்கும் தனிப்புகழ்பெற்றவர் யுவன், அதே நேரம் 90-களுக்குப் பிறகு வந்த இசையமைப்பாளர்களில் கிராமிய மண் சார்ந்த படங்களுக்கு அந்த மண், பண்பாடு சூழல் ஆகியவற்றுக்கேற்ற பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்குவதில் யுவன் அளப்பரிய திறமைசாலியாக இருந்தார். பருத்திவீரன்', 'குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்', 'இடம் பொருள் ஏவல்' (இந்தப் படமும் திரைக்கு வரவில்லை), 'தர்மதுரை;' எனப் பல படங்களில் யுவனின் இசையில் அசலான கிராமியப் பாடல்கள் வெகு சிறப்பாகவும் காலங்கள் தாண்டி ரசிக்கப்படுவதாகவும் அமைந்திருக்கின்றன.

வலி நீக்கும் சோகப் பாடல்கள்

நாயகனின் அறிமுகப் பாடல்கள். ஜாலியான பாடல்கள், ஃபாஸ்ட் பீட் காதல் பாடல்கள், அழகான காதல் மெலடி பாடல்கள், சோகமான காதல் பாடல்கள், காமரசம் ததும்பும் பாடல்கள், ரத்த உறவுகளுக்கிடையிலான பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள், தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்கள், கதைக்குப் பொருத்தமான தீம் பாடல்கள் எனப் பாடல்களின் ஒவ்வொரு வகைமையிலும் யுவன் இசையமைத்த தரமான பாடல்கள் என்று பெரும் பட்டியல் போடலாம்.

ஆனாலும் யுவன் ரசிகர்களால் மிக அதிகமாக விரும்பப்படுபவை அவருடைய 'காதல் வளர்த்தேன்', 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்' போன்ற காதல் கைகூடாத அல்லது தோல்வியடைந்த வலியை வெளிப்படுத்தும் மென்சோகப் பாடல்கள்தாம். பலர் தமது தனிப்பட்ட வாழ்வின் தோல்விகளின் வலியிலிருந்து யுவனின் பாடல்கள் மூலம் கிடைத்த ஆறுதலால் மீண்டுள்ளனர். துவண்டு போன நிலையில் புதுப்பேட்டை ஆல்பத்தில் இடம்பெற்று படமாக்கப்படாத 'ஒரு நாளில் வாழ்க்கை இங்கே' பாடல் போன்ற பல பாடல்களால் வாழ்வின் மீதான பிடிப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எப்போதும் குன்றாப் புகழ்

கடந்த சில ஆண்டுகளில் யுவனுக்கு இருந்த புகழும் ரசிகர் படையும் சற்று குறைந்துவிட்டது போன்ற தோற்றம் நிலவுகிறது. அவருக்கு அடுத்து வந்தவர்களில் பலர் மிகவும் வெற்றிகரமாக அதிக படங்களில் பணியாற்றத் தொடங்கியிருப்பதாலும் யுவனின் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதும் இந்தத் தோற்றத்துக்குக் காரணம். ஆனாலும் 'தர்மதுரை' போன்ற படங்களின் மூலம் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களையும் 'மாரி 2'-ல் இடம்பெற்ற 'ரவுடி பேபி' போன்ற பாடல்களின் மூலம் மிகப் பெரிய வெற்றிபெறக் கூடிய பாடல்களையும் வழங்கும் திறமையும் உழைப்பும் தன்னிடமிருந்து துளியும் குறைந்துவிடவில்லை என்று நிரூபித்திருக்கிறார் யுவன்.

இன்று அவருடைய பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்தும். அவருடைய இசைப் பங்களிப்புகளைச் சாதனைகளை நினைவுகூரும் அவருடைய பாடல்களுக்கும் தங்களுடைய வாழ்வுக்குமான பிணைப்பைப் பகிரும் இளைஞர்களின் பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. இதிலிருந்தே ஒரு இசையமைப்பாளராக யுவனின் புகழும் மதிப்பும் காலம் போகப் போகக் கூடுமே தவிரக் குறையாது என்று புரிந்துகொள்ளலாம்.

'வலிமை', 'டிக்கிலோனா', 'மாநாடு', 'சக்ரா' என அவர் தற்போது இசையமைத்து வரும் படங்கள் அனைத்தும் அவருடைய வெற்றிப் பயணம் தடையின்றித் தொடரும் என்று நம்பிக்கை அளிக்கின்றன. இன்னும் பல தரமான பாடல்களும் உயர்வான பின்னணி இசையும் அவரிடமிருக்கும் இசைப் பேரூற்றிலிருந்து கசிந்துருகக் காத்திருக்கின்றன என்று உறுதியாக நம்பலாம்.

தனித்தன்மை வாய்ந்த தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட இசைக் கலைஞன் யுவன் ஷங்கர் ராஜா இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவும் விருதுகளைக் குவிக்கவும் மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்